இந்தோனேஷியா சோகம்: தலைநகரமே தண்ணீரில் மூழ்குவதால் அதிரடி முடிவு!

ந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தா நீரில் மூழ்கி வருவதால், போர்னியோ தீவை தனது தலைநகரை மாற்றப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளத்தில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா நகரமே தத்தளித்து வருகிறது. உலகத்தில் மிக வேகமாக மூழ்கும் நகரமாக ஜகார்த்தா கருதப்படுகிறது. இது 2050 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக மூழ்கும் எனவும் சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக மக்கள் தொகை வாழும் நகரங்களில் 10ஆம் இடத்தில் ஜகார்த்தா உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இதன் நகர்ப்புற பகுதிகளில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளதாகவும், பெருநகரப் பகுதியில் 3 கோடி மக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நகரம் அதிக மக்கள் தொகை மட்டுமல்லாமல், காற்று மாசு காரணமாகவும் தவித்து வருகிறது. எனவே ஜகார்த்தாவில் இந்த கடும் சூழல் நிலவுவதால், மக்களின் நலனுக்காக தனது தலைநகரை மாற்ற முடிவு செய்துள்ளது இந்தோனேஷியா அரசு. அதிபர் ஜோகோ விடோடோ 2019-ல் தலைநகரம் மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக இதன் பணிகள் தாமதமானது.

புதிதாக உருவாகப் போகும் தலைநகருக்கு ‘நுசாந்தரா’ என இந்தோனேஷிய அதிபர் பெயரிட்டுள்ளார். ரூ.3,200 கோடி செலவில் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது இந்தோனேஷிய அரசு. இந்த புதிய தலைநகரில், அரசு கட்டிடங்கள், அதிபர் மாளிகை, பொதுமக்கள், போலீசார், ராணுவம் உள்ளிட்டோர் தங்குவதற்கான 100 லட்ச வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்னியோ தீவில், 2,561 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த திட்டங்கள் நடைபெறவிருக்கிறது.

தலைநகரை கட்டமைக்கும் பணியானது 5 கட்டமாக நடைபெறும் என அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதில் முதல் கட்ட கட்டமைப்பு இந்த ஆண்டே தொடங்கவிருக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியாக போர்னியோ இருப்பதால் அதை தற்போது மாற்றுவது சுற்றுச்சூழலை பாதிக்கும் என பலரும் விவாதித்து வருகின்றனர்.