December 4, 2022

‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது!

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார்.

வெயில், அங்காடித் தெரு, அரவான்,காவியத்தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஜெயில்’. இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ளார். தேன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ‘பசங்க’ பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சிகளை அமைக்கும் பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர். நடனக்காட்சிகளை சாண்டி,ராதிகா அமைத்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் கபிலன்,சிநேகன் , கருணாகரன்,தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.இப்படத்திற்காக நடிகர் தனுஷ் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் யூடியூப்பில் வெளியாகி இரண்டு கோடி பார்வையாளர்களை ஈர்த்து பெரும் வெற்றியடைந்துள்ளது.

பல மாதங்களாகவே இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக வேல்ஸ் நிறுவனம் பார்த்துவிட்டதாகவும், கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகிவிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ‘ஜெயில்’ வெளியீடு தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில், ” ‘ஜெயில்’ என்று பெயர் சூட்டியதால் என்னவோ ஜெயில் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது. எட்டுத் திசையெங்கும் தட்டினோம். குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம்.இதற்கிடையில் கொரோனா வேறு உலகை தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வருகிற செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன.


ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக் கீற்று தெரிகிறது. ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது. விரைவில் ஜெயிலைப் பற்றிய நல்ல செய்தி காத்தோடு காத்தாக பரவும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளைத் திறக்கிறேன்”. என்று கடந்தாண்டு மே மாதம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில்தான் ஜெயில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா. விரைவில் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.