October 2, 2022

ஜகமே தந்திரம் – விமர்சனம்!

சினிமா என்பது பொழுதுபோக்குதான் என்றாலும் இதே சினிமா மூலம் இந்தியர்களிடம் சுதந்திர வேட்கையை தூண்டிய வரலாறெல்லாம் உண்டு. மேலும் நடிப்பு என்ற பெயரில் திரையில் தோன்றும் நடிகர் அழுதால் அதைக் காணும் ரசிகன் கண்ணீர் வடிப்பதும், ஹீரோ கோபப்பட்டால் அதைக் காணும் ரசிகன் கோபவெறிக் கண்டு கத்துவதெல்லாம் நடப்பதுண்டு. ஆக பொழுதுபோக்கான ஊடகமென்றாலும் சினிமா மூலம் புது உலகைக் காணச் செய்ய முடியும்  பலரை திசைத் திருப்ப முடியும் என்று தெரிந்தே சில அரை வேக்காடுகள் தமிழ் சினிமாவைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் டாப் 5ல் ஒருவர்தான் கார்த்திக் சுப்புராஜ் என்பவர். இவருக்கு சினிமா குறித்த புரிதல் இல்லை என்பதை விட கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுக் கூட இல்லாமல் தன் சினிமா பயணத்தை தொடர்வதுதான் சோகம்..இத்தனைக்கும் என்னுடைய திரைப்பயணத்தில் எனக்கு மிகவும் முக்கியமான படம் “ஜகமே தந்திரம்”. இது எனது கனவு படம். இப்படத்தின் மையத்தை 2014லேயே உருவாக்கிவிட்டேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்தவர் இந்தக் கதையைப் படமாக்கும் முன்பு எடுத்துக் கொண்ட களம் குறித்து கொஞ்சம் கூட யாரிடமும் ஆலோசிக்கவே இல்லை என்பதுதான் கோலிவுட்டின் சாபம்.

சில நாட்களுக்கு முன்னால் தி பேமிலி மேன் 2 என்றொரு படம் ஒரு வகையில் புலிகளை, ஈழத் தமிழர்களை தவறாகச் சித்தரித்ததைப் பார்க்கும் முன்பே ஸ்மெல் பண்ணி தடை செய்யுங்கள் என்று தமிழக அரசு உள்பட ஏகப்பட்ட பேர் குரல் கொடுத்தார்கள்.. ஆனால் தற்போது ரிலீஸான ஜகமே தந்திரம் என்னும் இப்படத்தில் ஈழத்தமிழர்கள் ஆயுதத்துடனே பிறந்து, ஆயுதத்துடனே உணவருந்தி, ஆயுதத்துடனே நடமாடி நெனச்ச நபர்களைப் போட்டு தள்ளுவது போன்ற கேரக்டர்களுடன் உருவாக்கியதை இங்குள்ள பெருந்தலைகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்றே தெரியவில்லை. இந்த அரைவேக்காடு டைரக்டரால் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இன்றைய வாழ்வாதாரத்துக்கு சிக்கல் ஏற்படும் சூழல் வரும் என்பதை எப்போது உணரப் போகிறார்கள்.. (ஆகச் சிறந்த நடிகனாக உருவாகிக் கொண்டிருக்கும் தம்பி தனுஷ் இது போன்ற சர்ச்சைக்குரியக் கதைகளில் நடிப்பதை தவிருங்க-ன்னு யாராவது அட்வைஸ் செய்தால் நல்லது)

சரி இப்படத்தின் கதை என்னவென்றுக் கேட்கிறீர்களா? மீனாட்சி அம்மன் கோயிலால் உலகப் புகழ் பெற்ற மதுரை இப்போது முன்னரே குறிப்பிட்ட அரைவேக்காடு டைரக்டர் பார்வையில் அடி தடி வெட்டு குத்து என்ற ரத்த ஆறாக ஓடும் மதுரையாக சித்தரிக்கப்பட்டு அங்கு லோக்கல் கேங்ஸ்டராக வலம் வரும் சுருளி (பரோட்டா மாஸ்டர்) என்றழைக்கப்படும் தனுஷ் ஒரு கொலை செய்து விட்டு தப்பிக்க நினைப்பவரை லண்டன் மண் லண்டன்வாசிகளுக்கே என்று சொல்லியபடி வாழும் தாதா பீட்டரின் குழுவில் சேர்க்கப்படுகிறார். லண்டனில் அந்த முதலாளி பீட்டருக்காக அவரின் எதிரி கேங்கிடம் மோதுகிறார் அந்த கேங் மற்றும் அவர் ஆட்கள் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். அவர்களை ஒழிக்கவே தன்னைப் பயன்படுத்துகிறார் என்பதை தாமதமாக உணரும் தனுஷ் அடுத்தடுத்து என்ன செய்கிறார் என்பதே ஜ.த திரைக்கதை.

இந்தப் படத்தில் தன் கேமராவை மூன்றாம் கண்ணாக்கி அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. கூடவே படத்தின் பின்னணி இசை நச். சந்தோஷ் நாராயணன் வழக்கம் போல்ச்கோர் செய்கிறார். கார்த்திக் சுப்பராஜின் பேஸ்மெண்ட் வீக்கான திரைக்கதையில் கூட தொடக்கத்தில் தாதாவாகவும் பின்னர் வழக்கம் போல் நல்லவனாக மாறி தன் முழு பங்களிப்பை அளித்து இருக்கிறார் தனுஷ். அதுக்காக வீச்சுப் புரோட்டா மாஸ்டர் என்பதால் அவ்வப்போது ஐம்பது பேரை அசல்டாக்கா போட்டு தள்ளி விட்டு கேந்த் தனாக நடந்த வருபர் ஐஸ்வர்யா லட்சுமியின் துண்டுச் சீட்டு கதையைக் கேட்டு கபால்-ன்னு திருந்தி, “நானெல்லாம் சாதாரண ஆளு, சம்பாதிச்சமா, சந்தோஷமா வாழ்ந்தமான்னு இருக்கிறவன்”னு தனுஷ் விடும் கண்ணீரெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் ஆகி விட்டதே கர்ணா.. ஜோஜு ஜார்ஜ். ஐஸ்வர்யா லட்சுமியும் காட்சிகளுக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளார்கள்.மேலும் சிலர் நேரத்தைக் கடத்த முயல்வதில் தோல்வி அடைந்து கலைந்து போனார்கள். இன்னும் படத்தின் குறைபாடுகள் எத்துணையோ உண்டு..சிம்பிளாக சொல்ல வேண்டுமானால் வேஸ்ட் ஃபெல்லோவாகி இந்த ஜகமே தந்திர இயக்குநர் சினிமா தொழிலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்.

மொத்தத்தில் இது போன்ற படத்தைப் பார்த்து உங்கள் நேரத்தை செலவு செய்வதைக் காட்டிலும் அங்காமா டிவியில் ஷின்சான் பார்ப்பதே நலம்

மார்க் 2/5