July 31, 2021

பாஜக செயல் தலைவராக ஜே.பி நட்டா நியமனம்!

பாஜகவின் செயல்தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்தார்.

பார்லிமெண்ட் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. பாஜக தலைவராக இருந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பாஜக விதிகளின் படி ஒருவர் அரசில் அங்கம் வகித்தால் அவர் கட்சியில் பொறுப்பில் இருக்க முடியாது. ஆனாலும் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், தேசிய தலைவர் பதவியில் அமித்ஷா, வரும் டிசம்பர் வரை நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாஜகவின் நாடாளுமன்ற போர்டு கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.இந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பாஜகவின் செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார்.

இந்த செய்தியை முன்னாள் பாஜக தலைவரும் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் முன் அறிவித்தார். பாஜகவின் தலைவராக அமித் ஷா தொடர்வார் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெ.பி.நட்டா, முந்தைய மோடி அமைச்சரவையில் மத்திய சுகாதார அமைச்சராக பணியாற்றியவர் ஆவார். பாஜகவின் ஆட்சிமன்றக்குழு செயலாளராக தற்போது பொறுப்பு வகித்து வரும் ஜெ.பி.நட்டா, இமாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.