June 25, 2022

நோ பாலிடிக்ஸ் ; போயஸ் இல்லம் எனக்குதான் : ஜெ. தீபா பேட்டி – வீடியோ!

அதிமுகவுடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இணைந்து செயல்படும் எனவும் அதிமுக அரசுக்கு போயஸ் இல்லத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள தீபா, ஜெயலிதா வின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். தீபாவின் அமைப்புக்கு பெரிதாக வரவேற்பு இல்லததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்னர் தான் இயக்கத்தை கலைப்பதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் தீபா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த தீபா பேரவையின் தலைமை நிலைய செயலாளர் தொண்டன் சுப்ரமணி கூறுகையில், “எங்கள் பொது செயலாளர் தீபாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு வரவில்லை அதிமுகவில் இணைய விரும்பி கடிதம் வழங்கி உள்ளோம். தலைமைக் கழகம் எங்களை என்று அழைக்கிறதோ அன்று நாங்கள் அனைவரும் எந்த நிபந்தனையின்றி இணைய உள்ளோம் எனக்கூறினார். இந்நிலையில், இன்று மாலை ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜெ தீபா, “ என் அத்தை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கடந்த 2017-ம் ஆண்டு, அலை கடலென எனது இல்லத்தின் முன்பு திரண்ட மக்கள், என்னை அரசியலில் ஈடுபட அழைத்த காரணத்தால், அந்த மக்களுக்காக இயக்கத்தைத் தொடங்கினேன். இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள், வேதனைகளைக் கடந்து இயக்கத்தை நடத்திவந்தேன். அதேசமயத்தில், எனது கணவர் மாதவனும் ஒரு இயக்கம் நடத்தி வந்தார். சேலம் பொதுக்கூட்டத்தில் இரண்டு இயக்கமும் இணைக்கப்பட்டது. இரண்டு தரப்பினரின் சம்மதத்துடன் இணைக்கப்பட்டு, ஒரே இயக்கமாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாங்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தோம். அதை அ.தி.மு.க தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

இதையடுத்து, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொண்டர்கள் என்னை அணுகி, இணைப்புப் பணிகளை விரைவாக நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட காரணத்தால், என்னால் தீவிர அரசியல் பணிகள், அலுவல் பணிகளைக் கவனிக்க முடியாமல் ஓய்வெடுக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டேன். நான், மாற்றிப் பேசவும் இல்லை. மாற்று நிலைப் பாட்டை எடுக்கவும் இல்லை. எனது உடல்நிலை பாதிப்பட்டதால், கடினமான பணிகளை ஆறு மாத காலத்திற்கு செய்யமுடியாத நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனை தெரிவிக்கும் விதமாகத்தான் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டேன்.

நானும் எனது கணவர் மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து பேசி, நான் தொடங்கிய இயக்கத்தை அ.தி.மு.க-வுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம். இதற்கான நிர்வாகிகளின் பட்டியலையும் அ.தி.மு.க-வினரிடம் அளித்துள்ளோம். இணைப்பு விரைவில் நடத்தலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. எனது பாட்டி வாங்கியது. என் அத்தையின் சொத்து அது. அதற்கும் இணைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க-வுக்கும் போயஸ் இல்லத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளும் சட்டரீதியாக மீட்க அனைத்து முயற்சிகளும் என்னால் மேற்கொள்ளப்படும். அரசியலில் இருந்து ஓய்வுபெற முடிவுசெய்துள்ளேன். அ.தி.மு.க-வில் எந்தப் பொறுப்பையும் கேட்கவில்லை

தனக்குப் பின்னர் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையு மாறு கேட்டுக்கொள்கிறேன். உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன், அதிமுகவுடன் இணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்தனர், பல சோதனைகளை தாண்டி இயக்கத்தை நடத்தி வந்தேன். மீண்டும் சொல்கிறேன் அதிமுகவில் எந்த பொறுப்பையும், பதவியை யும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் அதிமுக எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத போயஸ் இல்லத்தை மீட்பதில், சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும்” என்று தீபா சொன்னார்.