October 5, 2022

“ஆமாங்க.. ஆமாம்.. நான் அரசியலுக்குள் வந்தாச்சு!” – ஜெ. தீபா அறிவிப்பு

கடந்த சில வாரங்களாகவே மூன்றாம் பக்கம் செய்திகளில் தவறாமல் இடம் பெற்று வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் ஆனாலும் தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக வரும் பிப்ரவரி 24-ம் தேதியன்று விரிவாக அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

j deepa jan 17

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள் கிழமை காலை தீபா அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது என முடிவு செய்திருக்கிறேன். தமிழகத்தை ஆசியாவின் சிறந்த மாநிலமாக முன்னேற்ற பாடுபடுவேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தவிர வேறு எவரையும் தலைமையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை” எனக் கூறினார்.

இது குறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தீபா, “ஆதரவு தெரிவித்த மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் நன்றி. முதல் முறையாக உரையாற்றுகிறேன். இந்த உரை அனைவரிடம் சென்று சேரவேண்டும் என்பது என் வேண்டுகோள். தமிழக மக்களை தன் பிள்ளைகளாக ஏற்றவர் செல்வி.ஜெ.ஜெயலலிதா. அம்மாவை இழந்து குழந்தைகள் தவிக்கின்றனர். அம்மா நீங்கள் தெய்வமாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும். 1972ல் அதிமுகவை உருவாக்கி, மக்களாட்சியை அமர்த்திவர் எம்.ஜி.ஆர். அவரின் மறைவுக்கு பிறகு அம்மா தொடர்ந்து மக்களாட்சியை நடத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உலகத்தையே அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய செய்தியாக மாறியது. இது நீங்குவதற்குள் அடுத்தடுத்த அரசியல் மாற்றம் வந்துள்ளது. பலர் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்கள்.

நான் எளிய முறையில், பத்திரிக்கை துறையில் இருந்தவள். எனக்கு குடும்பம் உட்பட சில பொறுப்புகள் இருக்கிறது. ஆனாலும் என்னை அழைத்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். இனி வரும் காலத்தில் மக்களுக்காக பணியாற்றுவேன். என் தாய் மொழியான தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடுவேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மாவின் ஆசிகளோடு, அவர்களின் பாத சுவடுகளோடு வழிநடந்து மக்கள் பணியில் இறங்குகிறேன். மக்களின் கருத்தை அறிந்து, தொண்டர்களின் கருத்தை அறிந்து புதிய பயணத்தை தொடங்குகின்றேன். எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்தநாளில் என் வாழ்க்கையின் புதிய அத்தியாத்தை தொடங்குகிறேன். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா காட்டிய வழியில் மக்களையும், தமிழகத்தையும் வழிநடத்த உங்கள் அன்புச்சகோதரியாக, அம்மா ஆற்றிய மக்கள் சேவைகள் தொடரவேண்டும், அம்மாவின் கனவை நினைவாக்கவேண்டும் என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

அம்மாவின் மீது அன்புகொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த நேரத்தில் எனது கடமைகளை நிலைநாட்டிட ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. புரட்சி தலைவி அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் நம் களப்பணியும் இருக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். அம்மா அவர்களின் பிறந்தநாள் முதல் அரசியலில் ஈடுபடும் அடுத்த அறிவிப்பு வெளியிடுவேன். அனைவரின் கருத்தையும் சேகரித்து வருகிறேன். அதன் பிறகு அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். அனைவரின் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அம்மா விட்டுச்சென்ற பணிகளை தொடரவேண்டும். அம்மாவின் பெயர் நிலைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

இதன் பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ:

கேள்வி:- ஜெயலலிதா மரணம் பற்றி அவர் குடும்பத் தினர் யாரும் ஆட்சேபம் சொல்லவில்லை என்று ஐகோர்ட் கூறியுள்ளதே?

பதில்:- எனது சகோதரர் தீபக் 70 நாட்கள் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே அம்மா மரணம் தொடர்பாக வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.

கே:- ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று பரவலாக பேசப்படுகிறதே?

ப:- இது மக்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனது சுற்றுப் பயணத்தின் போது மக்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்க உள்ளேன். அதன் பின்னரே இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

கே:- உங்களின் சொந்த அத்தை என்ற முறையில் அவரது சொத்துக்களை நீங்கள் எதிர் பார்க்கவில்லையா?

ப:- அது போன்ற எதிர்பார்ப்புகள் எதுவும் என்னிடம் இல்லை. அவர் வாங்கிய பெயரை வாங்க வேண்டும்.அவர் பயன்படுத்திய ஒரே ஒரு பேனா மட்டும் கொடுங்கள் எனக்கு அது போதும்.

கே:- எந்தவித அனுபவமும் இல்லாமல் அரசியலுக்கு வருகிறீர்களே? உங்களால் வெற்றி பெற முடியுமா?

ப:- அரசியலுக்கு வருவதற்கு அனுபவம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. படித்தவர்கள், புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். எனவே எந்த அடிப்படையில் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை.

கே:- பா.ஜ.க. சார்பில் உங்களிடம் யாராவது தொடர்பில் இருக்கிறார்களா? பேசினார்களா?

ப:- என்னிடம் யாரும் அது போன்று எந்த தொடர்பிலும் இல்லை.

கே:- அ.தி.மு.க.வில் உள்ள சிலர் உங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:- அதுபோன்று யாரும் என்னிடம் பேசவில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் தான் என் வீட்டு முன்பு தினமும் கூடுகிறார்கள்.

கே:- எங்கள் குடும்பம்தான் ஜெயலலிதாவை காத்து வந்ததாக திவாகரன் கூறியுள்ளாரே?

ப:- எந்த அடிப்படையில் இது போன்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை என்னால் ஏற்க இயலாது.

கே:- அ.தி.மு.க. தலைமையை விரும்பாத தொண்டர்களே உங்களைத் தேடி வருகிறார்கள். ஆனால் அது பற்றி நீங்கள் வெளிப்படையாக பேசாதது ஏன்?

ப:- என்னைத் தேடி வந்துள்ள மக்களிடம் இன்னும் நிறைய கருத்துக்களை கேட்க வேண்டியதுள்ளது. இப்போதுதானே நாம் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.

கே:- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதை ஏற்கிறீர்களா?

ப:- நான் எனது வழியில் பயணிக்க விரும்புகிறேன். மக்கள் ஆதரவுடன் அந்த பயணம் இருக்கும்.

கே:- உங்களது பதில்களில் தெளிவான, உறுதியான கருத்துக்கள் இல்லையே? உங்கள் அத்தையை போன்று சொல்ல வந்ததை தெளிவாக உறுதியாக சொல்ல வேண்டியதுதானே?

ப:- அவரைப் போலவே இருக்கிறேன் என்பதற்காக அவரது செயல்பாடுகள் போல என்னிடமும் எதிர்பார்க்க முடியாது. இப்போதுதானே வந்துள்ளேன்.

கே:- தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக நடிகர் ரஜினி கூறி உள்ளாரே?

ப:- நான் ஏற்கனவே கூறியது போல அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது அவரவர் விருப்பம்.

கே:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ப:-தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். அது ஆர்.கே.நகர் தொகுதி தானா என்பதை இப்போது சொல்ல முடியாது.

இவ்வாறு தீபா கூறினார்.

தீபா பேட்டியின் போது சசிகலா பற்றி நிருபர்கள் சரமாரியாக பல கேள்விகள் கேட்டனர். ஆனால் சசிகலா பற்றி நேரடியாகவோ, சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலோ எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை.