September 27, 2021

பீட்டா -வினாலே 13 மாநிலங்கள் கலாச்சார அடையாளத்தை இழந்து வருகிறார்கள்!

தற்போது தடை செய்யப் பட வேண்டும் என்று பலராலும் உரத்தக் குரல் கொடுக்கப்படும் ‘பீட்டா; என்பது – விலங்குகள் மற்றும் பிராணிகள் மீது திணிக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராகச் செயல்படும் தனியார் அமைப்புதான் . இது 2007ல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 31மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள இந்த அமைப்பு,1980ல் அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் அலெக்ஸ் பேசியோ என்பவரால் தொடங்கப்பட்டது.

edit jan 19

1981ல் குரங்குகள் மீது அமெரிக்காவின் சில பரிசோதனை நிலையங்கள் நடத்திய துன்புறுத்தலுக்கு எதிராக அந்த அமைப்பு தொடர்ந்து போராடியதை அடுத்து மக்களால் மிகவும் கவனிக்கப்படும் அமைப்பாக,பீட்டா பரிமாணம் பெற்றது. இன்றைய தேதியில் உலகளவில் இருக்கும் மொத்த பீட்டா உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 மில்லியன், அதில் இருக்கும் தன்னார்வலர்கள் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தம் 5 மில்லியன் பேர் இந்த அமைப்பில் இருக்கிறார்கள்.இந்த உறுப்பினர் பட்டியலில் பிரபல ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் நடிகரான சர் ரோஜர் மூர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன்,இந்திய நடிகர்கள் அமிதாப் பச்சன்,ஐஸ்வர்யா ராய்,வித்யா பாலன்,சன்னி லியோன் உள்ளிட்டவர்களும் தமிழ் திரை நட்சத்திரங்களான மாதவன், எமி ஜாக்ஸன், த்ரிஷா, தனுஷ் உள்ளிட்டவர்களும் அடக்கம்.

இதன் உறுப்பினர்கள் முக்கியப் பிரச்னையாக முன்னெடுப்பது தொழிற்சாலைகளில் செய்யப்படும் மிருக வளர்ப்பு,அதன் தோலுக்காக வேட்டையாடுவது,பிராணிகளில் நிகழ்த்தப்படும் பரிசோதனைகள் மற்றும் அதன் மீது திணிக்கப்படும் துன்பியல் பொழுதுபோக்கு அம்சங்கள்,மீன்பிடித்தல்,மாமிசம் உண்ணுதல்,கோழிச்சண்டை,நாய்ச்சண்டை,எருது விளையாட்டு மற்றும் நாய்களை வீட்டில் கட்டிவைப்பதைக் கூட குற்றமாகக் கருதி இதற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பீட்டாவின் இந்திய அமைப்பு கடந்த 2000வது ஆண்டில்தான் தொடங்கப்பட்டது,2009ல் அதன் நிறுவனர் பிரபல சர்வதேச உணவகமான கே.எஃப்.சி-யின்,மும்பையில் உள்ள இந்தியத் தலைமையகத்துக்கு எதிரே தன்னை கூண்டிலடைத்துக் கொண்டு வினோதப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தினார்.கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போட்டு கொழுக்கவைப்பதற்கு எதிராக இந்த போராட்டம் நிகழ்த்தப்பட்டது.பக்ரீத் சமயத்தில் ஆடுகளை பலியிடுவதை எதிர்த்து 2014ல் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ‘தீவிர சைவ பக்ரீத்” என்னும் வினோத போராட்டத்தை இவர்கள் முன்னிறுத்தினார்கள்.

உச்சகட்டமாக 2015ல் பீட்டா அமைப்பை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் அப்போதைய கேரள முதல்வரான உம்மன் சாண்டிக்கு கேரள விழாக்களில் யானைகள் கடவுள் சிலைகளை தூக்கி வருவதற்கு உபயோகப்படுத்தப்படுவதை எதிர்த்தும்,கேரள கோவில்களில் யானைகள் அலங்காரப்படுத்தப்பட்ட காட்சிப் பொருளாக நிற்கவைப்பதை எதிர்த்தும் கடிதம் ஒன்றை எழுதினார்.அதே சமயம் அந்த யானைகளுக்கு பதிலாக பொம்மை யானைகளை செய்வதற்கான செலவுகளை தான் ஏற்கத் தயார் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.அவரின் இந்த முன்னெடுப்புக்காக சென்ற ஆண்டின் பீட்டாவின் மிகச் சிறந்த உறுப்பினர் விருதையும் அவருக்குத் தந்தது அந்த அமைப்பு.ஆனால் பமீலாவின் இந்த கோரிக்கையை கேரள அரசும்,கேரள உயர்நீதிமன்றமும் சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்பது வேறு கதை

இந்நிலையில் காங்கேயம் காளை அறக்கட்டளைத் தலைவரும், ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினரின் ஒருங்கிணைப் பாளராகவும் உள்ள கார்த்திகேயன் சிவ சேனாதிபதி, மாணவர்களின் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து தமது கருத்துக்களை தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனலில் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் சொன்ன விஷயம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு விவகாரத்தைப் போன்று மேலும் 13 மாநிலங்களில் பீட்டாவால் கலாச்சாரத் தடை உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு அடிப்படை காரணம் இந்தியா முழுவதிலுமே உள்ள நாட்டு மாடுகளை ஒழிப்பது மட்டும் தான் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்தவை இது;

மத்திய அரசு உடனடியாக PCA மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இப்போதைக்கு பாராளுமன்றக் கூட்டம் நடைபெற வாய்ப்பில்லாததால் சட்டத் திருத்தம் கொண்டு வர வாய்ப்பில்லை என்றாலும் மத்திய அரசு அவசரச் சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கேரளாவில் ரேக்ளா, கர்நாடகத்தில் கம்பாலா, மகராஷ்டிராவில் பேல்கோடா, ஆந்திராவில் கல் இழுக்கக் கூடிய விளையாட்டு உள்ளிட்ட கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட விளையாட்டுகளை தடை நீக்கம் செய்து, பீட்டாவின் வழக்குகளால் பாதிக்கப்பட்ட 13 மாநில மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முடியும்.

“தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலுள்ள 13 மாநிலங்கள் இதே விதமாகத் தங்களது கலாச்சார அடையாளங்களை இழக்கும் வண்ணம் பீட்டாவால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல நமது ஒட்டு மொத்த இந்தியாவிலும் உள்ள நாட்டு மாடுகளை அழிக்க பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம்,புளூ கிராஸ், உள்ளிட்ட அமைப்புகள் இந்தியா மீது தொடுத்திருக்கும் ஒரு போர் இது, இதை மத்திய அரசு புரிந்து கொண்டு உடனடியாக அவசர சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இது நிகழாவிட்டால் தமிழகத்தை சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றே ராஜினாமா செய்ய வேண்டும். இதுவே ஒரு நல்ல முடிவாக இருக்கும்.

மேலும் இந்த விசயத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை மாநில அரசின் பங்கு மிகவும் குறைவானது, காரணம் என்னவென்றால் 2012 ஆம் வருடம் ஜெயராம் ரமேஷ் மத்திய அமைச்சராக இருந்த போது அந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்த போது தான் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஜல்லிக்கட்டுக்கான தடையைக் கொண்டு வந்தார்கள். ஆகவே இதை சரி செய்ய முடியும் என்றால் இன்று மத்திய அரசால் மட்டும் தான் முடியும். ஆகவே மாணவர்களின் போராட்டம் மத்திய அரசை அவசரச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரச் செய்யும் முனைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். தீக்குளிப்பில் இறங்குவது, உணர்ச்சிவசப்படுவது மாதிரியான விசயங்கள் எல்லாம் எந்த விதமான பிரயோஜனத்தையும் தரப்போவதில்லை, அது பின்னர் ஜல்லிக்கட்டுக்காகப் போராடியதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட இழப்பாக மாறி பிரச்சினையை திசை திருப்பி விட்டு விடக் கூடும். ஆகவே மாணவர்கள் தங்களது தன்னெழுச்சிப் போராட்டத்தை, அதற்கான தீர்வு கிடைக்கும் வரை அமைதியான வழியிலேயே நடத்த வேண்டும்.”

இன்று அதிகாலை தந்தி டி.வி க்கு இவர் அளித்த நேர்காணல் இது. அதற்குப் பின் நடந்ததை நாம் அனைவருமே ஊடகங்களில் கண்டு வருகிறோம். பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு மத்திய அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கை விரித்து விட்டார். ஆனால் ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சரம் சார்ந்த விசயம் என்பதில் மறுப்பில்லை, ஜல்லிக்கட்டு விசயத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். பிரதமரின் இந்த முன்னுக்குப் பின் முரணான பதிலால் மாணவர் போராட்டம் ஒன்றும் உறுதி குலைந்து விடவில்லை. அது மேலும் அதிகரித்திருப்பதாக மக்கள் உணர்கிறார்கள்.