November 28, 2021

ஒன்பது மாதங்களில் 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி!- இந்தியா சாதனை!

ந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, 100 கோடி தடுப்பூசி என்ற மைல் கல்லை 9 மாதங்களில் இந்திய எட்டி இருக்கும் பெருமித நிகழ்வை நாடெங்கும் கொண்டாட ஆயத்த பணிகள் நடக்கின்றன.

ஆளைக் கொல்லும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, ஒரே வழியாக முன்வைக்கப்பட்டது தடுப்பூசிதான். சுமார் நான்கைந்து வெரைட்டியான தடுப்பூசிகளை சுகாதார மைஅய்ம் அங்கீகரித்த நிலையில் உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஜனவரி மாதம் முதல் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அப்படியான பணி 9 மாதங்களாக பலவித இன்னல் மற்றும் சோதனைகளை கடந்த நிலையில், நம் இந்தியா 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய சாதனை படைத்திருக்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 99.85 கோடி டோஸ்கள் செலுத்தப் பட்டிருந்த நிலையில் தற்போது 100 கோடி என்ற சாதனையை எட்டியுள்ளது. ஆம்.. மத்திய அரசின் கோவின் இணையத்தளத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி இருக்கிறது. இந்த 100 கோடி பேரில், 75 சதவீதம் போ் முதல் டோஸ் தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸ் தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா் என்று அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர், இந்தியாவின் இந்த சாதனையை பாராட்டியுள்ளார். “ஒரு வலுவான தலைமை இல்லையென்றால் இது போன்ற ஒரு சாதனை நடக்காது, என்றும் இந்தியா இந்த மைல்கல்லை அடைந்ததற்கு பாராட்டுக்கள். இதற்கு துணையாக இருந்த மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள்,” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் சீனா 100 கோடி தடுப்பூசி செலுத்தியது சாதனையாக இருந்தது. அதன்பிறகு உலகிலேயே இந்தியா மட்டுமே 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இருக்கிறது.சீனா முதல் நாடாக 100 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டியிருந்தாலும், இந்தியா சில சாதனைகளை செய்துள்ளது. பிரதமர் மோடியின் பிறந்த நாள் தினத்தில் இந்தியாவில் 2 கோடியே 50 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.ஒரே நாளில் மிக அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டது உலகளவில் இது தான் சாதனை. இதற்குமுன் சீனா ஒரே நாளில் 2 கோடியே 47 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தியிருந்த நிலையில் அதைவிட 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா இந்த சாதனையை முறியடித்துள்ளது.

மாநிலங்கள் வாரியாக எடுத்துக்கொண்டால், மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக தடுப்பூசிகள் செலுத்தி நாட்டின் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

100 கோடி கோவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்கும் மைல்கல்லை கொண்டாடும் வகையில் மத்திய அரசு விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லி செங்கோட்டையில் ஆவணப் படத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார். பாடகர் கைலாஷ் கேரின் ஒரு பாடல் உடன் இது திரையிடப்பட இருக்கிறது. இதேபோல், நாட்டின் மிகப்பெரிய மூவர்ண கொடியும் 100 கோடி தடுப்பூசி சாதனையைக் குறிக்கும் வகையில் செங்கோட்டையில் ஏற்றப்பட இருக்கிறது. மேலும், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் இந்தியாவின் இந்த சாதனையை கொண்டாட உள்ளது.