September 26, 2021

தன்னைத் தானே மேரேஜ் செய்து கொண்ட இத்தாலி பெண்!

திருமணம் என்றால் ஆண், பெண் என 2 பேர் தேவை. பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு உள்ள ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு கூட 2 பேர் தேவை. ஆனால் இந்த திருமணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிகரித்தப்படி இருக்கிறது. இந்தத் திருமணத்துக்கு எந்த சட்டமதிப்பும் இல்லை. ஆனாலும் பரவலாக  உலகம் முழுவதும் பல நாடுகளிலும் நடக்கும் தம்மைத் தாமே மணக்கும் ‘சோலோகாமி’ எனற சுய திருமணம். இது சுய அங்கீகாரம், சுய காதல், திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு இருக்கும் சமூக அங்கீகாரத்தைத் தமக்கும் கோருதல் என்று இந்தத் திருமணத்துக்கு விளக்கம் அளிக்கிறார்கள் இத்தகைய திருமணத்தின் ஆதாரவாளர்கள்.

அந்த வரிசையில் இத்தாலியைச் சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் லாரா மெஸி(40). 12 ஆண்டுகளாகக் காதலித்து வந்தவருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் தன் மனதுக்குப் பிடித்த நேர்மையான மனிதரைத் தேடிப் பிடித்து வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வேன் என சபதம் இட்டார்.

மேலும் தனது காதல் தோற்றுப்போனதால் பெயருக்காக ஒருவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை யென்றும் உண்மையாக நேசிப்பவருடன்தான் சுதந்திரமாக வாழமுடியும் என்பதால் அப்படிப்பட்டவரைத் தேடிப்பிடித்துத் திருமணம் செய்வேன் என்றும் தனது 40 ஆவது பிறந்தநாளுக்குள் அப்படியொருவர் அமையாவிட்டால் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளப்போவதாக லாரா மெஸி தனது நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் 40 வயதை வியாழக்கிழமை அடைந்தார். இதையடுத்து ரோமில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் 70-க்கும் மேற்பட்ட தனது நெருங்கிய உறவினர்கள், தோழிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் புதுமணப்பெண்ணுக்குரிய அட்டகாசமான டிசைனர் உடையை லாரா அணிந்திருந்தார். பிரமாண்டமான திருமண கேக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கேக்கின் மேல் ஒரு அழகிய பெண் பொம்மை வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கேக்கை வெட்டி தனது திருமணம் நடந்துமுடிந்ததாக லாரா மெஸி அறிவித்தார். விருந்தினர்கள் உற்சாகமாக அவரைப் பாராட்டினர்.

முன்னதாக போன மே மாதத்தில் நேபிள்ஸில் நடந்த ஒரு விழாவில், நெல்லோ ருகிரியோ என்பவர் தன்னை தானே மணந்து கொண்டார்.ஜப்பானில், ஒரு பயண நிறுவனம் 2014ஆம் ஆண்டு ஒற்றைப் பெண்களுக்கான மணமகள் விழாவைத் துவங்கியது.

1993 ஆம் ஆண்டிலிருந்தே தன்னை தானே திருமணம் செய்துகொள்வது இருந்து வருகிறது. இது பல புத்தகங்கள் உருவாக வித்திட்டது. மேலும் பாலியல் உறவு, நகரம் மற்றும் மகிழ்ச்சி தொடர்பான பல கதைப் பொருளாகவும் இருந்தது. அமெரிக்காவில், “ஐ மாரிட் மி” என்ற ஒரு வலைத்தளம் சுயதிருமணம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது. கனடாவில், ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கும் “மேரி யுவர்செல்ஃப் வான்கூவர் ” என்ற ஒரு நிறுவனம், சுய திருமணங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதற்குக் காரணம், திருமணம் செய்யாத நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது