September 29, 2021

ஊதாரித்தனம் உறைத்தது!

அவரது பெயரை எக்ஸ்மேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உண்மையான பெயரெல்லாம் ‘எதுக்குங்க’ ஒற்றை வரியில் மறுத்து விட்டார். ஒரு ஊதாரி இளைஞனாகத்தான் அவரைச் சந்தித்தேன். அவரிடமிருந்து மீண்ட போது, செய்யும் தொழில் சம்பந்தமாகவும் அதை மேலெடுத்துச் செல்வது குறித்தும் தெளிவான புரிதல்கள் கிடைத்தன. எப்போதுமே மேனேஜ்மெண்ட் தியரிகளை விழுந்து விழுந்து படிக்கிறோம். ஆனால் உடன் வாழ்பவர்கள் பலர் அதையெல்லாம் அறியாத ஒழுங்கை தொழிலில் காட்டிக் கொண்டிருக்கும் விதத்தை மெச்சுவதே இல்லை. அப்படித்தான் எக்ஸ்மேன் வாழ்க்கையையும் எடுத்துக் கொள்ள முடிகிறது.

edit jan 27

எக்ஸ்மேன் நீலகிரி மலையைச் சேர்ந்தவர். அவர் சின்ன வயதாக இருக்கும் போது, கருவாடு லோடு அடித்ததற்காகத் தண்டிக்கப்பட்டு மலையை விட்டு இறங்கியிருக்கிறார். கருவாடு லோடு அடித்ததெல்லாம் ஒரு குத்தமாய்யா என்றுதான் நானும் கேட்க நினைத்தேன். அது வேறொன்றுமில்லை. அந்தக் கால அம்பாசிடரில் எக்ஸ்மேன் க்ளீனர் வேலைக்குப் போயிருக்கிறார். அம்பாசிடரில் க்ளீனரா என்பதும் இன்னொரு கேள்வி. ஆனாலும் உதவியாளர் என்று எடுத்துக் கொள்வோம். காரின் உரிமையாளருக்குத் தெரியாமல், செத்துப் போன பிணங்களை அதிகக் காசிற்காக அமர்த்திக் கொண்டு வருவதற்குப் பெயர்தான் கருவாடு லோடு.

தேயிலை லோடெல்லாம் அம்பாசிடருக்குள் அடிக்க முடியுமா என்ன? கூடுதல் காசென்றால் முன்னூறு நானூறு ரூபாய் அவ்வளவுதான். ஒருநாள் ஓனர் இதைக் கண்டுபிடித்து விட்டார். அடித்துத் துரத்தி விட்டார். வீட்டுக்குப் போனால் அங்கேயும் அடி. வெறுத்துப் போன எக்ஸ்மேன் மலையிலிருந்து தரைக்கு இறங்கி விட்டார். யாரும் அவரைத் தேடவில்லை என்பதிலிருந்தே மலையில் அவருக்கு இருந்த முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

கீழே வந்தவர் லாரியில் க்ளீனராக வேலைக்குச் சேர்ந்தார். அந்த லாரியையே ஓட்டினார். அந்த லாரி உரிமையாளரின் தங்கையைத் திருமணம் செய்து கொண்டார். தன்னால் அதிகப்பட்சமாக ஐந்து நாட்கள் வரை தூங்காமல் வண்டியோட்ட முடியும் என்று சொன்ன போது நான் அசந்து விட்டேன். உழைப்பு உழைப்பு அதைத் தவிர அதற்கடுத்து அவர் எதையும் செய்யவில்லை. இரண்டு லாரிகள் ஆனது. மூன்று லாரிகள் ஆனது. இடையில் செங்கல் வியாபாரம் செய்தார். மணல் வியாபாரம் செய்தார். ஜல்லி வியாபாரம் செய்தார்.

அப்படியே நூல் பிடித்து மேலேறி கட்டிடக் காண்டிராக்டர் ஆனார். அவர் செய்த தொழில்களையெல்லாம் பட்டியலிட்டால், ஆயிரத்து ஐநூறு வார்த்தைகளைத் தாண்டி விடும். இரண்டு பெண் பிள்ளைகள். பேரப் பிள்ளைகளும்கூட வந்துவிட்டனர். மலையை விட்டு இறங்கிய பிறகு அவர் மீண்டும் மலையேறவே இல்லை. ஏதோ ஒரு வைராக்கியத்தில் சமதளத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார். ஏன் இந்த வைராக்கியம் என்றேன். அது இல்லாமல் இருந்தால் நான் இந்த இடத்தில் இருந்திருக்கவே மாட்டேன் என்றார் புன்னகையுடன். எப்போது இந்த சபதத்தை முடிக்கப் போகிறீர்கள் என்றேன். நான் செத்த பிறகு என்னையும் கருவாட்டு லோடு அடித்து மேலே கொண்டு போனவுடன் சபதம் முடிந்துவிடும் என்று சொல்லிவிட்டு அடர்த்தியாகச் சிரித்தார். என்னிடம் சொல்வதற்கு எதுவும் வார்த்தைகள் இல்லை.

இந்த நிமிடத்தில் அவர் சில பல கோடிகளுக்கு அதிபதி. ஆனாலும் அவர் அலுவலகத்தில் இன்னமும் வாட்டர் கேன் விற்றுக் கொண்டிருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் தடுத்துப் பார்த்து விட்டார்கள். யார் பேச்சையும் கேட்பதில்லை. இன்னமும்கூட சில சமயங்களில் அவரே டூவிலரில் வைத்து தண்ணீர் கேன் போடப் போகிறார். என்னாச்சு இந்த மனிதருக்கு? ஒரு கேனுக்கு எட்டு ரூபாய் கிடைக்குமா என்றேன். எட்டு ரூபாய் உங்களுக்குச் சாதாரணமாகப் போய்விட்டதா என்று கோபமாகக் கேட்ட அவர் தன்னுடைய உபதேசத்தை ஆரம்பித்தார். “பணம் என்பது போகும் போதுதான் மொத்தமாகப் போகும். வரும் போது சிறுகச் சிறுகத்தான் வரும். மலையே ஆனால் உட்கார்ந்து உடைத்துச் சாப்பிட ஆரம்பித்தால், சில வருடங்களிலேயே தின்று முடித்து விடலாம்” என்றார். யோசித்துப் பார்த்தேன். ஊதாரித்தனம் உறைத்தது. அவரிடம் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாய் அமைதியாய் அமர்ந்திருந்தேன்.

கருவாட்டு லோடு அடித்த மனிதர் தன்னுடைய வாழ்க்கையில் ஒருவட்டம் அடித்து நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். ஆனாலும் ஓட்டத்தை நிறுத்தவில்லை. அவர் ஓட்டத்தை நிறுத்துகிற அன்றைக்கு அவரைத் தூக்கிக் கொண்டு கருவாடு லோடு அடிக்கும் பாக்கியம் கிடைத்தால் மகிழ்வேன்.

சரவணன் சந்திரன்