இந்த P S என்கிற பொன்னியின் செல்வன் படத்தைப் புரிந்து கொள்வது அறிவுடைமை!

இந்த P S என்கிற பொன்னியின் செல்வன் படத்தைப் புரிந்து கொள்வது அறிவுடைமை!

ரலாற்றில் ஆதித்த கரிகாலன் யார்? சோழ அரசில் பிராமணிய மேலாண்மையை எதிர்த்தவன். அதே நேரம் பாண்டியர்களையும் எதிர்த்தவன். அவனை அன்றைய பிராமணியம் சூழ்ச்சியால் கொன்றது. இந்த உண்மையை அப்படியே சொல்லி தனது சமுதாயத்துக்கு இழுக்கை வளர்க்க விரும்பவில்லை எழுத்தாளர் கல்கி. அது கூடப் பரவாயில்லை. ஆனால் ஆதித்த கரிகாலன் பெண்ணால் வீழ்த்தப்பட்டவன் என்று சித்தரித்து , பெரிய பழுவேட்டரையர் என்ற மாவீரரையும் அசிங்கப்படுத்தி பாண்டிய குலப் பெண் நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை சித்தரித்து அவளை பெரிய பழுவேட்டரையர் வயதான காலத்தில் பெண் மோகம் கொண்டு மணந்தார் . அதாவது மகள் வயதுப் பெண்ணை மனைவியாக்கிக் கொண்டார் என்று எழுதி, அவள் மீது கொண்ட மையலை விட்டு நீங்க முடியாமல் அதனால் பலவீனப் பட்டான் . எதிரிகளிடம் சிக்கினான் ஆதித்ய கரிகாலன் என்று எழுதினார் கல்கி.

ஆக மாவீரனாக இருந்தும் பெண் மீது கொண்ட மையலால் வீழ்ந்தான் ஆதித்த கரிகாலன் என்ற அநியாய சித்தரிப்பை நந்தினி என்ற ஒரு கற்பனைக் கதாபாத்திரம் மூலம் தந்தார் கல்கி. எல்லாவற்றுக்கும் காரணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதித்த கரிகாலன் சோழ அரசில் பிராமண மேலாண்மையை எதிர்த்தவன் என்பதுதான் .

அதே நேரம் ராஜ ராஜ சோழனின் மகனான பெரும் பேரரசன் ராஜேந்திர சோழன் செத்துப் போன தனது பெரியப்பன் ஆதித்த கரிகாலன் பாணியில் சோழ அரசில் பிராமண ஆதிக்கத்தைத் தட்டி வைத்தவன். உண்மையில் ராஜ ராஜ சோழனை விட ராஜேந்திர சோழன் பற்றிதான் அவனது வெற்றிகள் பற்றிதான் நிறைய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன் பற்றி கல்கி எழுதத் துவங்கி இருந்தால் அவரது அந்த பொன்னியின் செல்வன் இந்த பொன்னியின் செல்வனை விட இன்னும் சிறப்பாக அற்புதமாக இன்னும் அதிக அளவில் உண்மை ஆதாரங்களைக் கொண்ட விறுவிறுப்பான நாவலாக இருந்திருக்கும்.

ஆனால் தமிழில் வரலாற்று நாவல்கள் வர ஆரம்பித்த காலத்தில் இங்கே எழுத்தாளர்களாக பத்திரிக்கை ஆசிரியர்களாக பிராமண சமூகத்தினரே அதிகம் இருந்த காரணத்தால் அவர்கள் ஆதாரம் அதிகம் கொண்டவன் என்றாலும் பிராமணிய எதிர்ப்பாளன் என்பதால் ராஜேந்திர சோழனைத் தூக்கி மூலையில் போட்டு விட்டு ராஜேந்திர சோழனை விடக் குறைவான வரலாற்று ஆதாரங்களே கொண்ட ராஜ ராஜ சோழன் பற்றி … கஷ்டப் பட்டு மூச்சு முட்ட , ஓடி ஓடித் தேடித் தேடி, ஆதாரம் இல்லாத இடங்களில் நந்தினி கதாபாத்திரம் போன்ற கற்பனைகளைக் கொட்டி எழுதித் தீர்த்தார்கள் . அதற்கு வசதியாக தஞ்சைப் பெரிய கோயிலின் பிரபலம் இவர்களுக்கு வசதியாகப் போயிற்று.

அதே போல இன்னொரு லாபி ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு உரிய விளம்பரமும் முக்கியத்துவமும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டது. பின்னால் வந்த மற்ற பிராமணிய எழுத்தாளர்களும் ராஜ ராஜ சோழன் பற்றியே கற்பனையாக எழுதிக் குவித்தார்களே தவிர, அவனை பிரம்மாண்டமான பிரமாதமான தனது உலக வெற்றிகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் கொண்ட ராஜேந்திர சோழன் பற்றி தொடக் கூடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆடு பகை குட்டி உறவா என்று சொல்வார்கள் அல்லவா?

இவர்களைப் பொறுத்தவரை அப்பன் புலி உறவு . அதை விடச் சிறந்த வீரப் புலியான மகன் புலி பகை. இப்படியாக அகில உலகம் காணாத மாமன்னன் ராஜேந்திர சோழன் புறக்கணிக்கப்பட்டான் . ஆதித்த கரிகாலன் பெரிய பழுவேட்டரையர் போன்றவர்கள் கல்கியால் அநியாயமாக களங்கப்படுத்தப்பட்டார்கள். தமிழ்நாட்டில் வரலாற்று நாவல் படிக்கும் பழக்கம் ஒரு வெகு ஜன இயக்கம் போல இருந்த நிலை மாறி சமூக நாவல்கள் வந்து ரசனை மாறிய பிறகே ராஜேந்திர சோழன் பற்றி ஓரிரு படைப்புகள் வந்தன. அவற்றுக்கும் உரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பொன்னியின் செல்வன், நந்திபுரத்து நாயகி போன்ற ராஜ ராஜ சோழன் பற்றிய படைப்புகளுக்கு கிடைத்த பிரபலம் அவற்றுக்கு இல்லை.

இந்த உண்மைகளை நன்றாக உள்வாங்கிப் புரிந்து கொண்டு, “தமிழர் வரலாற்றை விடச் சிறந்த வரலாறு இந்தியா எங்கும் உண்டு ” என்று மூச்சு முட்டப் பேசிக் கொண்டு இருக்கும் ஜெயமோகன் வேறு வசனம் எழுதி இருக்கிற இந்த P S என்கிற பொன்னியின் செல்வன் படத்தைப் புரிந்து கொள்வது அறிவுடைமை. இல்லன்னா படம் வந்து பல மாதங்களுக்கு வெட்டியா சண்டை போட்டுக்கிட்டு திரியப் போறீங்க.

பின் குறிப்பு : இந்த பதிவு உண்மைகளை சொல்வதற்கு மட்டுமே. தனிப்பட்ட இன்றைய எந்த சமூகத்தையும் தாக்குவதற்கு அல்ல.

சு. செந்தில்குமரன்

error: Content is protected !!