March 27, 2023

ஒரு நீதிக்கதை எழுதி முடிக்கு முன் நீதியை மாற்ற வேண்டி இருப்பதெல்லாம் கொடூரம் ..!

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ஒரு பயணத்தில் ஒரு பெரியவரை சந்தித்தேன்.. அவருக்கு நெருக்கிய ஐம்பது வயதிருக்கும்.. அவர் ஒரு மருத்துவர்.. நான் அவரை சந்தித்தது ஒரு பயணக் குழுவில்.. தங்களை பற்றிய அறிமுக படலத்தில் அவர் தன் பெயரை சொல்லிவிட்டு சீரியஸாக சமூக பிரச்னை பற்றி பேச ஆரம்பித்தார்… அவரது உத்வேகத்திற்கு காரணம் மது என்பதை உணர முடிந்தது.. உணர்ச்சிப் பிளம்பாக அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பக்கம் கேட்ட மொக்கை ஜோக் ஒன்றுக்கு நான் தரையில் புரண்டு சிரித்தேன்.. சிரிப்பு முடிந்த பின்புதான், அவர் கவனித்திருப்பாரோ, அவரை காயப்படுத்தி விட்டோமோ என்றெல்லாம் குற்ற உணர்வு பீறிட்டு கிளம்பியது..

மறுநாள் கிளம்பும்போது, நான் அவரை சந்தித்து, வெறுமனே பேசினேன்.. பேச்சில் ‘’உங்க சிரிப்பு நல்லா இருக்கு டாக்டர்’’ என சொன்னேன்.. (நிஜமாகவே அவருக்கு ஒரு தெய்வீக சிரிப்பு).. பதிலுக்கு அவர், ‘’உங்க ஹஸ்பண்ட் எங்க இருக்கார், ஏன் வரலை?’’ எனக் கேட்டார்.. ‘’இருக்கார் டாக்டர், வரலை’’ என சொல்லி விலகினேன்.. அந்த சந்திப்பின் மொத்த நேரம் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள்.. அப்புறமாக குரூஃப் போட்டோ எடுக்கும்போது, ‘’நம்ம டாக்டர் பின்னாடி நிப்போம்’’ என நின்று கொண்டேன்..

அப்புறம் நான் கிளம்பி கேரளா போய்விட்டேன்.. மறுநாள் என் நம்பருக்கும், Have u reached? என ஒரு வாட்சப் மெசேஜ் வந்திருந்தது.. நான் யார் எனத் தெரியாததால் பதில் சொல்லவில்லை.. கொஞ்ச நேரம் கழித்து டாக்டரிடம் இருந்து ஃபோன் வந்தது.. (நம்பர் நான் தரலீங்கோ).. நான் போய்ச் சேர்ந்து விட்டேனா (ஊருக்கு) எனக் கேட்டார்.. சென்னையில் மகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள், என்ன வேலை என்றெல்லாம் கேட்டார்.. ‘’இந்தாளுக்கு எதுக்கு இதெல்லாம்?’’ என வேலை இருப்பதாக சொல்லி ஃபோனை வைத்தேன்..

அப்புறம் குட்மார்னிங், குட்நைட் செய்திகள் இரண்டு நாளைக்கு.. நான் 50% ரிப்ளை செய்தேன்.. அப்புறம், ”I miss you badly, I dont know why? U r awesome Ammu என ஒரு மெசேஜ்.. நான் சிரித்தேன், படுபாவிகள் இந்த அம்முவையாவது மாத்தித் தொலைக்கிறார்களா? 🙁 .. நான் பதில் அனுப்பவில்லை… அப்புறம் Please send your photos என ஒரு செய்தி.. நான் வாட்சப்பில் அந்த எண்ணை பிளாக் செய்தேன்.. பிறகு இன்னொரு எண்ணில் இருந்து அழைப்புகள்… ஒருதடவை எடுத்து விட்டு பிறகு எண் தெரிந்ததும் தவிர்க்க ஆரம்பித்தேன்..

அப்புறம் ஒரு லேண்ட் லைன் எண்ணில் இருந்து அழைப்பு.. எடுத்தபோது அதே டாக்டர்.. அழைப்புகளை எடுக்காதது பற்றியோ, பிளாக் செய்தது பற்றியோ ஒரு கவலையும் இல்லாத குரல்… ‘’ஹலோ அம்மு, ஹவ் ஆர் யூ?’’ டாக்டர் கால் மீ ப்ரியா… பதிலுக்கு ஒரு நீண்ட சிரிப்பு.. ’’என்னோட பொண்ணுக்கு கண் டெஸ்ட் பண்ணணும், சென்னையில் சங்கர நேத்ராலயா எங்க இருக்கு எனக் கேட்டார்.. நான் அப்போது டேக்ஸியில் இருந்தேன்.. டிரைவரிடம் கேட்டு இடத்தை சொன்னேன்.. வரும்போது என்னைப் பார்க்க முடியுமா எனக் கேட்டார். வேலை இருப்பதாக சொன்னேன்.. அந்தப் பேச்சையும் கட் செய்தேன்..

மீண்டும் இரவில் ஃபோன்.. இதை நிரந்தரமாக கட் செய்யும் பொருட்டு, ‘’என்ன எதிர்பார்க்குறீர்கள் டாக்டர்?’’ என நேரடியாக கேட்டேன்.. ‘’எனக்கு ஒரு லவ்லியான குடும்பம் இருக்கிறது, ஐ லவ் மை ஃபேமிலி அண்ட் மை கிட்ஸ்’’ என ஆரம்பித்தார். அடுத்த நிமிடம், ‘’பயணத்தில் நான் உன்னை கவனித்தேன்.. நீ நிறைய சிரித்தாய்.. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது.. நாம் ஒரு ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்ளலாம் என சொன்னார். (கொள்ளலாமா என கேட்கவில்லை, கொள்ளலாம் என சொன்னார்)..

நான் மிக நிதானமாக எனக்கு அதில் விருப்பம் இல்லை என சொன்னேன்.. அவருக்கு கோபம் வந்தது, ‘’எனக்கு என் குடும்பம் முக்கியம், உனக்கு உன் குடும்பம் முக்கியம்.. இடையில் ஒரு செக்‌ஷுவல் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்வதில் உனக்கு என்ன பிரச்னை.. மாதம் இருமுறை சென்னை வந்து பார்க்கிறேன்’’ என கன்வின்ஸ் செய்தார்..

இப்படியான ஒரு விஷயத்தை இப்போதுதான் முதலில் சந்திக்கிறேனா எனக் கேட்டால் இல்லை தான்.. இத்தனை நேரடியான அணுகுமுறையை சந்திப்பது இது முதல்முறை…. மாதம் இருமுறை என்பதில் பிரச்னை இல்லை, எனக்கு அவரோடு அப்படி ஒரு விஷயம் வைப்பதில் பிரச்னை.. எனக்கு அப்படியான ஒரு மைண்ட் செட் இல்லை.. ஸாரி என நிதானமாக கூறினேன். அவருக்கு பயங்கரமான கோபம் வந்தது.. நான் அவரை கூலாகவே ஹேண்டில் செய்தேன்… நீ ஃபிராங்கா பேசுறது பிடிச்சிருக்கு.. லவ் யூ.. பை’’ என ஃபோனை வைத்தார்.. ‘’கொக்கமக்கா’’ என நானும் தூங்கி விட்டேன்.. அவர் அதன்பிறகு எனக்கு ஃபோன், செய்தி எதுவும் செய்யவில்லை..

மறுநாள் நம் டாக்டர் நண்பர், பயணத்தில் என்னோடு இருந்த என் தோழிக்கு, வாட்சப்பில் ஒரு ஃபோட்டோ அனுப்பி இருந்தார். அதாவது அவர் லோ ஹிப்பில் டாப்லெஸ்ஸாக இருக்கும் ஒரு புகைப்படம்.. கையில் மதுக்கோப்பை.. கண்ணில் கூலிங் கிளாஸ்.. டாக்டர் அவரது அப்ரோச்சை மாற்றி இருந்தார்.. அவள் அதை எனக்கு அனுப்பியிருந்தாள். அவளுமே, ‘’இந்த ஆம்பிளைங்க ஏன் இப்படி இருக்காங்க’’ என்றெல்லாம் புலம்பாமல் நேரடியாகவே அவரை டீல் செய்தாள்.. நாங்கள் இருவரும் டாக்டரால் கண்ணில் நீர்வர சிரித்ததெல்லாம் தனிக்கதை..

நிற்க.. நான் இந்தக் கதையில் நீதியாக சொல்ல வந்தது. ..’’ ஒரு பொண்ணு பேசினா படுக்கக் கூப்பிடுவியாடா’’ என்றெல்லாம் கொந்தளிக்கவே இல்லை.. தன் விருப்பத்தை சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.. ஆனால் அதை எதிரில் இருப்பவர் மறுக்கும்போது கோபப்பட எந்த உரிமையும் இல்லை என்பதையே.. நமக்கு நாம் அப்பாடக்கராக இருந்தால். மாஸ்டர்பேட் செய்ய வேண்டியது தான்.. எதிரில் இருப்பவரிடம் கேட்கும்போது அவர் கருத்து முக்கியம் புரோ.. என்றுதான்..

நீதியை டைப் செய்யும்போதே ஒரு நண்பர் ஃபோன் செய்தார். நான் இதை அவரிடம் கூறினேன்.. அவர் பதிலுக்கு, ஃபேஸ்புக்கில் தன்னை டார்ச்சர் செய்யும் பெண்கள் பற்றிக் கூறினார்.. இன்ஃபாக்ஸுக்கு வந்து விட்டு பேசாவிட்டால் கடுமையாக கோபித்துக் கொள்வதாக கூறினார்.. பெண் புரபோஸ் செய்து ஆண் மறுத்தால் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிற இன்னொரு பக்கத்து கதையை அவரிடம் இருந்து கேட்டதும் குழம்பிப் போனேன்..

என் நீதிக்கதையில் இன்னொரு பாயிண்டும் சொல்வதாக இருந்தது. குங்குமப் பொட்டு வைத்த ஆண்களை நம்பாதீர்கள் என்பது தான் அது.. அதற்கும் நண்பர் கவுண்டர் கொடுத்து விட்டார்.. ஃபேஸ்புக்கில் காதல் கவிதை எழுதி கணவனுக்கு டேக் செய்யும் பெண்களை நம்பக் கூடாது என்பது அவர் அனுபவத்தில் கற்ற நீதியாம் :(ஆகவே.. நீதிக்கதையை இவ்வாறாக முடிக்கிறேன்.. பெண்களே, டாக்டரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள… ஐந்து நிமிட கோபம் என்றாலும், அதன்பின் எப்படி அமைதியாக போனார் பார்த்தீர்களா? அவர் மனிதன்.. அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.. அக்காங்…

ஒரு நீதிக்கதை எழுதி முடிக்குமுன் நீதியை மாற்ற வேண்டி இருப்பதெல்லாம் கொடூரம் புரோ…!

ப்ரியா தம்பி