திமுக இப்போது(ம்) இந்தியை எதிர்ப்பதாகச் சொல்வது ஏமாற்றுவேலை!

திமுக இப்போது(ம்) இந்தியை எதிர்ப்பதாகச் சொல்வது ஏமாற்றுவேலை!

றுபடியும் இந்தி எதிர்ப்பு களைகட்டுகின்றது, இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்பது பாஜகவின் புதிய‌ கொள்கை அல்ல, அது சுதந்திரத்துக்கு முன்பே அதாவது வெள்ளையன் கால உள்ளாட்சி கட்டமைப்பிலே உருவான ஒன்று. தேசம் முழுக்க ஒரு இணைப்பு மொழி இந்தியருக்கு வேண்டும் என்பதும் அதை காந்தி உள்பட தலைவர்கள் ஒப்புகொண்டுதான் இந்தி அறிவிக்கபட்டது என்பதும், அதைத்தான் 1930களிலே நீதிகட்சி எதிர்த்தது என்பதும் வரலாறு.

சுதந்திர இந்தியாவில் அதை நேரு செய்தபொழுதுதான் திமுக குட்டிகரணம் அடித்தது, இன்றைய நாம் தமிழர் போல அன்று மிக சிறிய கட்சியாய் இருந்த திமுகவினை நேரு நினைத்தால் அடக்கியிருக்கலாம் ஆனால் அவரின் மிகபெரும் பெருந்தன்மையும் காங்கிரசாரின் வழக்கமான அலட்சியமுமே நிலமையினை சிக்கலாக்கிற்று. அதுவும் நேரு இறந்து, தேசம் 1965ல் மிகபெரிய போரை சந்தித்தபொழுது தமிழகத்தில் சாஸ்திரி காலத்தில் மிகபெரிய கலவரத்தை செய்து அதற்கு “இந்தி எதிர்ப்பு போர்” என பெயரையும் வைத்து மிகபெரிய உயிரிழப்பும் இன்னும் பலவும் கொடுத்து ஆட்சிக்கு வந்தது திமுக‌.

இப்பொழுது திமுகவினரின் பள்ளிகளில் இந்தி உண்டு, சென்னையில் இந்திமக்கள் பகுதியில் இந்தியிலே வாக்கு சேகரிக்கும் திமுகவினரும் உண்டு. டெல்லி திமுக அலுவலக பராமரிப்பு இந்தி தெரியாமல் சாத்தியமில்லை என்பது எல்லோரும் அறிந்தது. இப்பொழுது அமித்ஷா இந்தி தேசிய இணைப்புமொழி என்றதும் திமுக தரப்பு வழக்கம் போல் பொங்குகின்றது. இந்த இடத்தில் அவர்கள் சொல்லும் விஷயம் இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்பது. கன்னடம், கேரளம் , தெலுங்கானா, ஆந்திரம் இன்னும் பல மாகாணங்களை நாம் உன்னிப்பாக பார்க்கின்றோம், அங்கெல்லாம் இந்தி தடையின்றி பயிற்றுவிக்கபடுகின்றது ஆனால் மலையாளமும் கன்னடமும் தெலுங்கும் அழிந்ததாக தெரியவில்லை.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் உண்டு அம்மக்கள் தேசிய மொழி என ஒரு மொழியும் தங்கள் அடையாள மொழி என தமிழையும் படிக்கின்றார்கள். அவர்கள் தமிழ் தமிழக தமிழைவிட அட்சரம் பிசமாகமல் அவ்வளவு அழகாக ஒலிக்கின்றது. சீனாவில் மாண்டரின் தவிர ஏகபட்ட மொழிகள் உண்டு ஆனால் மாண்டரின் அந்த தேசத்தை இணைக்கின்றது. எல்லா நாட்டிலும் இணைப்புமொழி அவசியம், அது தேசத்தில் மக்கள் தடையற பேசவும் பழகவும் நாடு முழுக்க தொடர்பு கொள்ளவும் ஏதுவாகும். இந்தியாவில் தமிழகம் மிக சிறிய மாகாணம், அதன் 8 கோடி தமிழர்கள் மொத்த இந்தியாவினையும் ஆட்டிவைக்க முடியாது, சில விஷயங்களின் அனுசரனை அவசியம்.

எனவே இந்தி படிக்கமாட்டோம் என சீறுபவர்கள் தனிநாடு கோரட்டும் பார்க்கலாம் கோரமாட்டார்கள். திமுகவின் பலவிதமான கோரிக்கைகள் தனிநாடு அடைந்தால்தான் சாத்தியம் ஆனால் அதை கோராமல் இந்தியாவுக்குள் இந்தியராகவும் இல்லாமல் ஒருவித குழப்பத்தை செய்வார்கள் அதை இப்பொழுதும் தொடர்கின்றார்கள். ஒரு வாதத்துக்கு தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் கூட இந்தி அவசியம், அண்டை மாகாணத்தாருடன் தொழில் செய்யவும் வாழவும் இந்தி மகா அவசியம். இதனால் தேசியமொழி என்பது கண்டிப்பாக தேவையான ஒன்று, ஒரே நாடு எனும் கொள்கையில் தேசத்திற்கொரு மொழி இருப்பது கண்டிப்பாய் அவசியம், அது ஒருங்கிணைப்பை வளர்க்கும்.

இந்தி படிக்கவேண்டும் என்றால் இந்தியில் காளிதாசன் அளவு கவிதை எழுதும்படி படிக்கவேண்டும் என்பதல்ல சக இந்தியனாக பேசி பழகவும் கருத்துக்களை சொல்லும் அளவு தெரிந்திருந்தால் போதும். மலையாளியும் கன்னடனும் தெலுங்கனும் இந்திபடித்து தங்கள் மொழியினையும் காக்கும் பொழுது தமிழர் மட்டும் ஏதோ விஷேஷ பிறவிகளாக குதிப்பது அறிவுடமை ஆகாது. எல்லா மாகாணத்தாரும் ஏற்றுகொண்ட விஷயத்தை எதிர்ப்பது தமிழக மக்களுக்கு நன்மையினை கொண்டுவராது. திமுக ஒன்றும் தங்கள் கொள்கையில் உறுதியான கட்சி அல்ல , வளரும் மரம் வளையும் என்பதற்கேற்ப அது திராவிட நாடு, இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு எல்லாம் கடந்துதான் வந்திருக்கின்றது இப்பொழுது அதை கைவிட்டும் விட்டது.ஆனானபட்ட அண்ணாவே சில கொள்கைகளை தியாகம் செய்தபொழுது, கருணாநிதி தனி ஈழம் என பல கொள்கைகளை வீசி எறிந்தபொழுது இன்றைய திமுகவும் சில சமரங்களை செய்தால் தமிழகத்துக்கு நல்லது. அதனை விடுத்து குழப்பம் செய்தல் சரியல்ல‌.

இன்று எல்லா தனியார் பள்ளிகளிலும் இந்தி உண்டு, ஏகபட்ட இந்தி தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலை செய்கின்றார்கள், தமிழக மாணவர்களும் தொழில்செய்வோரும் மாகாணம் தாண்ட வேண்டிய அவசியம் உண்டு. இதனால் இந்தியினை ஏற்றால் இங்கு ஒன்றும் கெட்டுவிடாது, தமிழை வாழவைக்க ஒரே வழி என்பது அரசியலாகுமே தவிர தமிழுக்கான தொண்டு ஆகாது. தமிழகம் அக்காலத்தில் இருந்தே இருமொழி கொள்கை கொண்ட வழமையானது, சமஸ்கிருதமும் தமிழும் இங்கு கொடிகட்டி பறந்தன‌. சங்கரரும் இன்னும் பலரும் சமஸ்கிருதம் படித்துத்தான் வட இந்தியாவில் தங்கள் அடையாளங்களை பதித்தார்கள், காமராஜருக்கு சரியான இந்தி அறிவு இருந்திருந்தால் எப்பொழுதோ பிரதமராயிருப்பார் அவர் தயக்கத்துக்கு இந்திமொழியும் காரணம்-அந்த சமஸ்கிருதம் போல இந்தி ஒரு இணைப்புமொழியாக இருப்பது அவசியம், அதை எதிர்ப்பதால் மட்டும் தமிழை வாழவைக்க முடியாது.

இந்தியினை விடமாட்டோம் என தமிழக அரசும் திமுகவும் சொன்னால் அதற்காக இந்தி வராமல் போகாது, தனியார் பள்ளிகளிலும் இன்னும் பலவற்றின் வழியாக அது வரத்தான் செய்யும் , அப்பள்ளியினை திமுகவினரே நடத்துகின்றார்கள். மாறாக திமுகவின் அடாவடியில் தவிக்க போவது தமிழன்னை அல்ல, அவள் என்றோ தமிழகத்தில் இருந்து விரட்டபட்ட்டு ஈழமக்கள், மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் தயவில் ஏதோ சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் இன்னும் வாழ்வாள் . பாதிக்கபடபோவது மாநில அரசை நம்பியிருக்கும் தமிழக ஏழை குடும்பங்களும் அந்த குடும்பத்தின் வாரிசுகளுமே, அவர்களை ஏமாற்றி குழப்பமான எதிர்காலத்தை கொடுப்பதுதான் அரசியல் என்றால் அதை தாராளமாக செய்யட்டும்.

ஸ்டேன்லி ராஜன்

error: Content is protected !!