February 7, 2023

தமிழ் ஆட்சி மொழியாகி இன்றோடு ஆண்டுகள் 66

தாவது இந்தியாவின் தனிச்சிறப்புமிக்க மாநிலங்கள்ல ஒன்னு நம்ம தமிழ்நாடு. ஒரு மொழியின் பெயரால அமைஞ்ச ஒரே மாநிலமும் நம்ம தமிழ்நாடுதான். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில மெட்ராஸ் மாகாணமா விளங்கிய இந்த நிலப்பகுதியில தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் பேசப்பட்டுச்சு; அதே சமயம் ஆட்சிமொழின்னு சொல்லப்படுற, நிர்வாகத்துக்கான மொழியா ஆங்கிலம் இருந்துச்சு. அதாவது நிர்வாகத்தின் எல்லா மட்டங்கள்லயும் ஆங்கிலம் மட்டும்தான் நடைமுறையில் இருந்துச்சு

சில பல போராட்டங்களுக்கு பின்னர் கிடைச்ச சுதந்திரத்துக்குப் பிறகு, 1956-ல் மாநிலங்கள் மொழிவாரியா பிரிக்கப்பட்ட பிறகு, நவம்பர் 1, 1956-ல், ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற நேமில் தனி மாநிலமா உருவாச்சு. ஆனா அந்த மெட்ராஸ் ஸ்டேட்ங்கிற பேரை மாற்றனும்னு சொல்லி தொடர்ந்து போராட்டங்கள் நடந்துக்கிட்டிருந்துச்சு. விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாடுன்னு பெயர் மாற்றம் பண்ணனும்ங்கிற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அதனால தமிழகத்துல பெரிய பதற்றமே ஏற்பட்டுச்சுது. மா.பொ.சி, அண்ணா, காமராஜர்ன்னு தமிழகத் தலைவர்களெல்லாம் போய் சங்கரலிங்கனாரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடக் கோரிக்கை விடுத்தபோதும் அவர் உறுதியா மறுத்தபடி. 76 நாள்கள் நிஜமாவே உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் 1956, அக்டோபர் 13ம் தேதி உயிரிழந்தார்.

ஆனாலும் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு பெயர் மாற்றம் குறித்து எந்த முடிவையும் எடுக்கலே. பேரறிஞர் அண்ணா இதுபற்றி மாநிலங்களவையில் குரல் எழுப்பினார். அதற்கும் பயன் கிடைக்கல. ஆனால் தமிழகமெங்கும் மிகப்பெரும் போராட்ட அலை எழுந்தது. தமிழ்நாடு பெயர் மாற்றம் போலவே தமிழ் அறிஞர்கள் பலருக்குமான கோரிக்கையா இருந்தது, தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்.

முன்னரே சொன்னது போல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியையே எல்லா மட்டத்திலயும் பயன்படுத்தினாங்க. 1835ஆம் ஆண்டு மெக்காலே ஆங்கிலவழிக் கல்வி தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அதன்பிறகு ஆங்கிலமே அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியா மாறுச்சு. 1844ஆம் ஆண்டு ஹார்டிங் பிரபு ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் அரசுப் பணியில் முன்னுரிமை பெற முடியும்ன்னு அறிவிச்சார். ஆங்கிலம் படிச்சாதான் அரசு வேலைங்கிற நிலை ஏற்பட்டதால, மரபு வழி தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் குறைஞ்சிருச்சு. அதேநேரத்தில ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் அதிகமாச்சு.

இது தமிழ்நாட்டுல பெரிசா எதிரொலிச்சுச்சு. ஆங்கிலேயர்களோட தலைமையகமா இருந்த மெட்ராஸ் மாகாணத்துலயும் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியா மாறுச்சு. அதுனாலே ஆங்கிலேயர் காலத்திலிருந்தே மொழிக்கான போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்குச்சு. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பாரதியார், மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரனார், பாரதிதாசன், தேவநேயப்பாவாணர்ன்னு பலரும் இது குறித்து பேசினாங்க. போராடினாங்க.

அதனடிப்படைட்யிலே டிசம்பர் 27, 1956-ல் தமிழ்நாடு சட்டமன்றத்துல தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டு இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துச்சு. அப்போ தமிழக முதல்வரா இருந்தவர் கா்மவீரர் காமராஜர். 1957, ஜனவரி 19-ஆம் தேதி இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, இதே ஜனவரி 23, 1957-ல் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி இந்தச் சட்டம் அரசிதழ்ல வெளியிடப்பட்டுச்சு. அதன்மூலம் தமிழர்களின் 120 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுச்சு.

அந்த வகையில், தனது 66ஆவது ஆட்சி மொழி தினத்தை தமிழ்நாடு இன்று கொண்டாடுது.

நிலவளம் ரெங்கராஜன்