அமெரிக்க குடியுரிமை ஏஜென்சி மீது ஐடி செர்வ் அமைப்பு வழக்கு!
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற வரும் வெளிநாட்டினருக்கு, ‘எச் – 1பி’ விசா வழங்கப்படுகிறது. இதற்கான கால அவகாசம், மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டதை எதிர்த்து, அமெரிக்க வாழ் இந்திய நிறுவனங்கள் சார்பில், அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்திய அமெரிக்கர்களால் நடத்தப்படும் கிட்டத்தட்ட 1000 ஐடி கம்பெனிகளின் பிரதிநிதியான ஐடி செர்வ் கூட்டணி (ITServe Alliance) என்ற அமைப்பு இந்த வழக்கை தொடர்ந்து உள்ளது.
எச் 1பி விசா மூலம் அமெரிக்க நிறுவனங்கள் திறன்மிக்க வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறது. இந்த எச் 1 பி விசா மூலம் வெளிநாட்டினர் குறைந்தப்பட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகப்பட்சமாக 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் வசிக்கலாம். அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றப்பின் எச் 1 பி விசா வழங்குவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தார். அமெரிக்க நிறுவனங்கள் எச் 1 பி விசா மூலம் குறைந்த சம்பளத்திற்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தி அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
இந்நிலையில் எச் 1 பி விசாவின் கீழ் 3 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அமெரிக்காவில் தங்க அனுமதி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை துறை மீது ஐடி சர்வ் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. .
நீதிமன்றத்தில் ஐடி சர்வ் தாக்கல் செய்த 43 பக்க மனுவில் ‘‘எச் 1 பி விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுமதி வழங்க கூறி அமெரிக்க நாடாளுமன்றம் தொழிலாளர் துறைக்கு உத்தரவிட்டுள்ளது’’
‘‘இந்த சூழ்நிலையில் யூ.ஐ.சி.ஐ.எஸ் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்துக்கு மட்டும் அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது அரசு விதிமுறைகளை மீறி எச் 1 பி விசாதாரர்களுக்கு சொந்தமாக கால நிர்ணயம் செய்யும் அதிகாரம் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் கிடையாது.’’ என்று ஐடி செர்வ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை ஏஜென்சி மீது ஐடி செர்வ் அமைப்பு தொடரும் இரண்டாவது வழக்கு இதுவாகும்.