November 29, 2022

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-52! செயற்கைக் கோள் – விண்ணில் நிலைநிறுத்தம்1- வீடியோ!

புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 என்ற அதிநவீன ரேடாா் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இது பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்து அனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், ”இஓஎஸ்-04 முதன்மை செயற்கைக்கோள் வெற்றிகரமாக துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன் அனுப்பப்பட்ட மற்ற செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்” என்றார். சோம்நாத் கடந்த ஜனவரி மாதம், இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற பின்னர் ஏவப்பட்டுள்ள முதல் செயற்கைக்கோள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து 10-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை ஏவுவதற்காக இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.