வேகமா வளரும் மலர் ரகத்துக்கு மோடி பெயர் – இஸ்ரேல் அசத்தல்

மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்றார். பென்குரியன் விமான நிலையத்தில் மோடிக்கு ராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் ஜெரூசலேத்தில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய நெதான்யாகு ஒரு இந்திய பிரதமர் வருவதற்காக நாங்கள் 70 ஆண்டுகளாக காத்திருந்தோம் என்று கூறினார். இந்தியாவை நேசிப்பதாக அவர் பிரதமர் மோடியிடம் கூறினார். உங்கள் வளர்ச்சிக்கான முனைப்பும், கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை வியந்து நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.இரு நாடுகளிடையே நெருங்கிய நட்பும் கூட்டுறவும் சாத்தியம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ”எனது இஸ்ரேல் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ‘முதல் முறையாக இஸ்ரேல் வந்த பிரதமர்’ என்ற வகையில் பெருமை அடைகிறேன். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் பொதுவான சவால்கள் உள்ளன. பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இஸ்ரேல், இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடு. நாங்கள் இணைந்து செயல்படுவோம்” என்றார். இஸ்ரேல் பிரதமருடன் ராணுவ ஒத்துழைப்பு குறித்து இன்றுஅவர் பேச்சு நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தான்ஸிகர் மலர் பூங்காவையும், ஹிட்லரின் நாஜிப் படைகளால் யூதர்கள் இன அழிப்பு நிகழ்ந்த ஹோலஹஸ்ட் என்ற இடத்தையும் மோடி பார்வையிட்டார்.. இதையடுத்து, அவரை கவுரவிக்கும்வகையில், இஸ்ரேலி க்ரைசாந்துமன் என்ற மலருக்கு ‘மோடி’ என்று அந்த பண்ணை நிர்வாகம் பெயர் சூட்டியது.அந்த மலர், வேகமாக வளரக்கூடிய ரகத்தை சேர்ந்தது. இனிமேல் அது ‘மோடி’ என்று அழைக்கப்படும் என்று இஸ்ரேல் அரசும், மத்திய வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்துள்ளன.