October 16, 2021

இஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர்

இந்தியாவில் பி.ஏ பட்டமும், கல்வியியல் பட்டமும் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் ஆவார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 பிறந்தவர் இந்த இஸ்மத் சுக்தாய், தனக்கு 13 வயதில் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து புத்தி சாலித்தனமாக வெளியில் வந்து படிப்பில் கவனம் செலுத்தினார் .சுக்தாயின் படிப்புக்குப் பெற்றோர் கள் தடை விதித்தபொழுது அந்தத் தடைகளையெல்லாம் களைந்து கல்வி பயின்ற சுக்தாய் இளங் கலை பட்டத்தை லக்னோவில் உள்ள இஸபெல்லா துருபன் கல்லூரியில் 1933 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டம் படிப்பதற்கு எந்தப் பெண்களும் முன் வராத நிலையில் ஆண்களுடன் சேர்ந்து படித்தார். வகுப்பறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கும். பெண்கள் அந்தத் திரைக்குப் பின்னால் இருந்துதான் பாடம் கேட்க வேண்டும். ஆனால் சுக்தாய் இதனைப் பின்பற்றாமல் ஆண்கள் பகுதியில் அமர்ந்தே பாடம் கேட்டார். தன சிறுவயதில் இருந்தே பர்தா போடுவதை எதிர்த்து தானும் பர்தா போடாமலே வாழ்ந்தார் சுக்தாய்

1941-ல் ‘லிகாப்’ என்ற சிறுகதை மூலம் உருது இலக்கியத்தில் அறிமுகமானவர். அலட்சியப் படுத்தப்பட்ட ஒரு நவாபின் மனைவிக்கும் அவளின் பணிப்பெண்ணிற்கும் (வயதானவர்) உள்ள உடல் ரீதியான தொடர்பு பற்றியது கதை. 9 வயது சிறுமி பார்வையில் இந்தக் கதை சித்தரிக்கப் படுகிறது. இந்தக் கதை ஆபாசமானது என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இரண்டாண்டுகள் இழுத்துச் செல்லப்பட்டு பிறகு , ‘நான்கு சொல்’ ஆங்கில வார்த்தை ஏதும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இஸ்மத் சுக்தாய் மற்ற பெண் எழுத்தாளர்கள் தொடாமல் இருந்த பெண்கள் தொடர்பான பாலியல் சிக்கல்களை தன்கதைகளில் அழுத்தமாக பதிவு செய்தார் .அது அவரது துணிச்சலை வெளிப் படுத்திய அதே நேரத்தில் அவருக்கு சமூகத்தில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியது அதிலும் முக்கியமாக சுக்தாயின் பிமர், சோடி அபா, கைந்தா முதலான கதைகள் இளம் வயதுப் பெண்கள் காம இச்சையில் மன அமைதி இழப்பதை சித்திரிக்கின்றன.பாலியல் அணுகுமுறையின் களங் களை மையமாக கொண்டு அவர் எழுதிய சிறுகதைகளில் ‘தோ ஹாத்’ (இரண்டு கைகள்) மிக முக்கி யமான ஒரு கதையாகும் . இதில் ஒரு பெண், மிகவும் எதார்த்தமாக பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதை மிகவும் சாதாரண விசயமாக விவரித்து இருப்பார். அதற்கு இவர் சொல்லும் அழுத்தமான காரணம் ஒரு ஏழை இளம் பெண்ணிற்கு உணவிற்கான தேடலின் ஒரு வழி தான் அவளது பாலியல் தொடர்புகள் என்று குறிப்பிட்டு இருப்பார் சுக்தாயின் லீஹாப் (கனத்த போர்வை), கூன்கட் (முகத்திரை), அமரபேல் (அமரவல்லி) ஆகிய கதைகள் பொருத்தமற்ற திருமணத்தைப் பற்றியும் அதனால் பெண்களுக்கு ஏற்படும் மன சிக்கல்களையும் பாலியல் தேடல்களையும் பதிவு செய்து இருப்பார்.

இவர் திரைப்பட இயக்குநர் ஷாகித் லத்தீபை தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி 1942-ல் திருமணம் செய்து கொண்டார். அவரோடு இணைந்து ஆறு திரைப்படங்களையும் அவரின் மறைவிற்குப் பிறகு ஆறு திரைப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். இன்றளவும் இவர் எழுதிய ‘Crooked Line’ என்ற நாவல் இந்திய துணைக் கண்டத்தில் பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

 

இஸ்மத் சுக்தாய் பிறந்த நாளையொட்டிய பதிவு!