ஐ எஸ் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர்செல் – இந்தியாவிலே இருக்க வாய்ப்பு? – ஈராக் எச்சரிக்கை!

ஐ எஸ் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர்செல் – இந்தியாவிலே இருக்க வாய்ப்பு? – ஈராக் எச்சரிக்கை!

சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். அமைப்பினர், பல்வேறு உலக நாடுகளில் தொடர்ந்து தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இந்த இயக்கத்துக்காக உலக நாடுகளில் ஆள்சேர்ப்பு நடவ டிக்கைகளும் நடந்து வருகிறது. இந்த அமைப்பில் சேர்வதற்காக இந்தியாவில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் சென்றுள்ளனர். மேலும் பலர் இங்கேயே இருந்து கொண்டு அந்த அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

isis india jy 15

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட உளவுத்துறை தகவல்படி, இந்தியாவில் 150 இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர்களாக செயல்படுவதாக கண்டறியப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டு இருந்தது.எனவே அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தொடங்கினர். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின் பெயரில் கைது நடவடிக்கை நடைபெற்றது.

கடந்த மாதம் 29–ந் தேதி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் ஐதராபாத் நகரில் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நகரின் 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, முகமது இப்ராகிம் யாஷ்தனி என்கிற இப்பு, ஹபீப் முகமது என்கிற சர், முகமது இலியாஸ் யாஷ்தனி, அப்துல்லா பின் அகமது அல் அமூடி, முசாபர் ரிஸ்வான் ஆகிய 5 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 5 பேருக்கும் உதவி செய்ய நிதி திரட்டியவர்கள் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக ஐதராபாத் பிரிவின் தலைவராக செயல்பட்டு நாசவேலை செயல்களுக்கு நிதி திரட்டி வந்ததாக கூறப்படும் யாசிர் நியமத்துல்லா என்பவரையும், அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த அதாவுல்லா ரெஹ்மான் என்பவரையும் ஐதராபாத் நகரில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் ‘ஸ்லீப்பர்’ செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக இந்தியாவிற்கான ஈராக் தூதர் பக்ரி ஹசன் அல்இஸா எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நாடுகளில் ஒன்றான ஈராக்கின் இந்திய தூதர் பக்ரி ஹசன் அல் இஸா ஆங்கிலப் பத்திரிக்கைக்குள் அளித்து உள்ள பேட்டியில், “அயல்நாட்டு நிதிஉதவி பெறும் இஸ்லாமிய இறையியல் பள்ளிகள் மற்றும் மதபோதகர்களின் தனிப்பட்ட கருத்தியல் கொண்ட இஸ்லாத்தின் காரணமாக இந்தியாவில் ஐஎஸ் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது” என்று எச்சரித்து உள்ளார். இந்தியாவில் இஸ்லாமிய இறையியல் பள்ளிகள் மற்றும் மத போதகர்கள் எந்த வகையான இஸ்லாத்தினை போதிக்கின்றனர் என்பதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறிஉள்ளார்.

“இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் அயல்நாட்டு நிதிஉதவிகளுடன் நடைபெறும் இஸ்லாமிய இறையியல் பள்ளிகள், கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட இஸ்லாம் போதிக்கப்படுகிறது. இதுதான் ஐஎஸ் அமைப்பின் எழுச்சி மற்றும் பரவலுக்கும் காரணமாகிறது. இதுபோன்ற பயிற்சியானது ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாளர்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவிலும் இத்தகைய இஸ்லாமியத்தை போதிக்கும் சக்திகள் உள்ளது, இயங்குகிறது என்பதை என்னால் கூறமுடியும்.

இந்த புதிய வகையிலான இஸ்லாமிய பள்ளிகளால், இஸ்லாம் அதன் பாரம்பரியமான மனிதநேய, சகிப்புத்தன்மை மரபுகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்கிறது. இஸ்லாமிய கலந்துரையாடல் மற்றும் தொலைக்காட்சி மதபோதகர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடுத்துள்ள போரில் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவேதான் இதுபோன்றோர் மீது நாடுகள் கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்று கூறிஉள்ளார்.

பாக்தாத்தில் கடந்த ஜூலை 3-ம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 300 பேர் பலியாகினர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலில் தூதர் பக்ரி ஹசன் அல் இஸா தன் குடும்பத்தினரில் 4 பேரை இழந்து உள்ளார்.

மேற்கு ஆசியா, மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தீவிரவாத இளைஞர்களை தங்கள் போருக்காக பயன்படுத்துகிறது, இதனால் ஈராக் மற்றும் சிரியா பாதிப்பு அடைந்து உள்ளது. ”இதுபோன்று சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள் மதத்தின் பெயரில் தம்மை பயன்படுத்துபவர்களால் பொம்மைகள் போன்று ஆட்டிவைக்கப்படுகிறோம் என்று புரிந்துக்கொள்ளவில்லை, அவர்கள் உளவுத்துறையினால் மேற்கு ஆசியாவிலும் மறைமுக பயன்படுத்தப்படுகின்றனர்,” என்று கூறி உள்ளார். அத்துடன் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா மற்றும் ஈராக் ஒத்துழைப்பு கொண்டு உள்ளது, ஆனால் விபரங்களை தெரிவிப்பதை தவிர்க்கிறது என்றும் இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் ஈராக் ராணுவ வீர்ர்கள் சார்பில் நாங்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், என்று பக்ரி ஹசன் அல்இஸா கூறி உள்ளார்.

Related Posts

error: Content is protected !!