April 2, 2023

நோபல் பரிசு மூலம் இப்படியும் ஒரு தப்பான பிழைப்புக்கு வழி இருக்கா?!

ஹெப்படைடிஸ் ‘சி’ (கல்லீரல் அழற்சி அல்லது மஞ்சள் காமாலை) தடுப்பு மருந்து கண்டு பிடிப்புக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது காப்புரிமை, நோயாளிகள், லாபம் ஆகியவை பற்றிச் சிந்திக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்த வேண்டும்.

1980-களின் இறுதியில் சி வகை கல்லீரல் அழற்சி ஏற்படுத்தும் நச்சுயிரியைக் (வைரசை) கண்டுபிடித்ததற்காக உயிரியல் மூலக்கூறு ஆராய்ச்சியாளர்கள் மூவருக்கு அக்டோபர் 5-ம் தேதி 2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்பு நோய்த் தொற்று அபாயத்தைக் குறைக்கப் பிற பாதுகாப்புகளையும் சிகிச்சை களையும் உருவாக்க உதவுதற்கு வழி வகுத்தது. தற்போது உலகெங்கிலும் 10 கோடியிலிருந்து 15 கோடி பேர் வரை இந்த சி வகை கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், ஏழு கோடி பேர் தீவிர HCV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பின் இணைய தளம் தெரிவிக்கிறது. 2017-ம் ஆண்டில் உலக நோய்த் தாக்கச் சுமை பற்றிய ஆய்வு இந்தியாவில் 2014-ல் 4.8 லட்சம் பேர் இந்நோயினால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

சமீப காலம்வரை, இந்நோய்த் தொற்று ஏற்பட்டால் பெகிலேட்டட் இன்டர்ஃபரான் மருந்து 3 பிற மருந்துகளுடன் சேர்த்து ஊசி மூலம் செலுத்தப்படும். இதனுடன் மேலும் ரைபாவிரின் மருந்தும் வாரத்திற்கு ஒருமுறை வீதம் 24-48 வாரம் வரை நோயின் தீவிரத்தைப் பொறுத்துச் செலுத்தப் படும். இந்த மருந்துகள் மோசமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை. முடி உதிர்தல், வயிற்றுப் போக்கு முதல் ரத்த சோகை, மனச் சோர்வு வரை பக்கவிளைவுகளாக வரக் கூடியவை. அவற்றை சரி செய்ய மீண்டும் வேறு மருந்துகள் தரப்படும்‌.

ஆனால் 2013-ல் அமெரிக்கா சோஃபாஸ்புவிர் (Sofosbuvir ) என்ற மருந்தை விற்பனைக்கு அனுமதித்தது. இது பழைய கூட்டு மருந்துகளுக்குப் பதில் ஒரே மருந்தாக தினந்தோறும், 12 வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இது 90% பலனளிக்கக் கூடியதாக இருந்ததுடன் கட்டுப்படுத்தக் கூடிய பக்கவிளைவுகளையே தந்தது.

அக்டோபர் 5-ம் தேதி வெளியான நோபல் பரிசுக் குழுவின் ஊடகச் செய்தியில், “கல்லீரல் அழற்சி நோய்க்கு அதிகம் பயன்தரக் கூடிய மருந்து கண்டு பிடிப்பதில் அடைந்துள்ள முன்னேற்றத்தின் பலனாக மனித வரலாற்றில் முதல் முறையாக, இந்த நோய்த் தொற்று எதிர்காலத்தில் பெரும் அளவில் குறையவும், வெகு விரைவில் ஒழிக்கப்படவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வார்த்தை தேர்வு அதிசயமளிப்பதாகத்தான் உள்ளது. ஏனெனில் பரிசு பெறும் ஹார்வி ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன் மற்றும் சார்லஸ் ரைஸ் (வழக்கம் போல ஏராளமானோர் ஒதுக்கப்பட்டு விட்டனர்) ஆகியோர் இந்த நச்சுயிரியின் வடிவத்தையும் எதிர்காலத்தையும், இந்தத் தொற்றைத் தோற்கடிக்கும் வழிமுறைகளையும் நாம் அறிந்துகொள்ள உதவி உள்ளனர். ஆனால் HCV ஒழிக்கப்பட்ட ஒரு எதிர்காலத்தை மனதில் காண்பது இயலாததாகவே உள்ளது.

ஜிலீயட் சயின்சஸ் (Gilead Sciences, Inc) என்ற அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் சோஃபாஸ் புவிர் என்ற மருந்தை வணிக ரீதியாக விற்க அனுமதிக்கப்பட்டது இதில் பெருமளவு பங்களிப்பு வகிக்கிறது. ஏனென்றால் HCV-க்கான சிகிச்சையை எளிதாக்கியதுடன், காலத்தையும் குறைத்த தன் மூலம் அது HCV வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது. இதன்மூலம் நோய்த் தொற்று “வாழ்க்கையை புரட்டி போடும்“ என்பதிலிருந்து “கட்டுப்படுத்தக் கூடியது” என்ற நிலைக்கு வர முடிந்தது.

எனினும் ஜிலீயடின் காப்புரிமைப் படி ‘சோவால்டி’ என்ற பெயரில் விற்கப்படும் ஒரு மாத்திரை யின் விலை அமெரிக்காவில் $1000 (சுமார் ரூ 73,000). மூன்று மாத சிகிச்சைக்கு $84,000 (சுமார் ரூ.59 லட்சம்) ஆகும். இந்த அநியாய விலை 2014-ல் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், காப்பீட்டு நிறுவனங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஒரு காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் இந்த $1,000 விலை அநியாயமானது என்று அழைத்தார்.

(அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் மருத்துவக் காப்பீடு செய்திருப்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் : மொழியாக்கக் குறிப்பு)

“இது காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினை. அவர்கள் நோயாளிகள் மீது அதிக செலவைச் சுமத்துகின்றனர். இணைக் கட்டணத்தின் மூலமும் மருந்துச் செலவுகளைக் காப்பீட்டிலிருந்து ஒதுக்கி யிருப்பதாலும் சிகிச்சைக்கான செலவில் பெரும் பகுதியை நோயாளி மீது சுமத்துகின்றன” எனக் கூறுகிறார் ஃபார்மா (PhRma) என்ற மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர், ஜான் கேஸ்டலானி.

இந்த அதிகப்படியான விலை, உலகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 85% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களால் இந்த மருந்தை வாங்க முடியாது என்கிறது 2014-ல் வெளியிடப்பட்ட ஆய்வு.

இந்த மருந்தை 12 வாரம் எடுத்துக்கொள்ள ஒரு குறைந்தபட்ச வருமானம் உடையவர் எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும் என 2016-ல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. முடிவுகள் மிகவும் வேதனை தருவதாக இருந்தன. போலந்தில் 4 முதல் 8 ஆண்டுகளும் துருக்கியில் 2 முதல் 5 ஆண்டுகளும் அமெரிக்காவில் 2 முதல் 4 ஆண்டுகளும் நியுசிலாந்தில் 1 முதல் 2 ஆண்டுகளும் ஆகும் என அது தெரிவிக்கிறது. (குறைந்த பட்ச வரம்பு, விலையில் 50% தள்ளுபடி என்று அனுமானித்துக்கொள்கிறது.)

இந்தியாவில் இந்த உழைப்புக்கான கால அளவு ஒரு ஆண்டுக்கும் குறைவாக உள்ளது. அதற்குக் காரணம் ஜிலீயட் நிறுவனம் தானாக முன்வந்து தயாரிப்பு உரிமை ஒப்பந்தங்களை இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்டதால், அந்த மருந்திற்கு இணையான மருந்துகள் ஆகும். இதன்படி இந்தியாவில் ஏறத்தாழ 12 நிறுவனங்கள் விற்பனை யில் 7% காப்புக் கட்டணம் கொடுத்து இணை மருந்தைத் தயாரிக்கின்றனர். எனினும் ஒப்பந்தப் படி இந்தியத் தயாரிப்பாளர்கள் இந்த இணை மருந்தை இந்தியாவிற்கு வெளியில் ஒரு சில சந்தைகளில் மட்டும்தான் விற்க வேண்டும். எல்லா இடத்திலும் விற்கக் கூடாது. இதனால் ஏழு கோடி பேர் இந்த மருந்தைப் பெற இயலாமல் உள்ளனர்.

ஜிலீயட் இதேபோன்ற ஒப்பந்தங்களை உலகம் முழுவதும் உள்ள பிற நிறுவனங்களுடனும் செய்துகொண்டு, 50 நாடுகளில் உள்ள சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தாங்கள் தயாரிக்கும் மருந்துக்கு மாற்றான இணை மாத்திரைகளைக் குறைந்த விலைக்குத் தர ஏற்பாடு செய்துள்ளது. எனினும் இந்த ஒப்பந்தங்கள் இன்னும் நடுத்தர வருமானம் உடைய ஐம்பது நாடுகளுடன் செய்து கொள்ளப்படவில்லை என்கிறது மருந்துகள் பற்றிய செய்திகளைத் தரும் ‘Medicins Sans Frontieres’ பத்திரிகையின் 2015-ம் ஆண்டு அறிக்கை.

சீனாவும் உக்ரைனும் ஜிலீயடின் காப்புரிமையை நேரடியாக நிராகரித்து விட்டன. எகிப்து இம்மருந்துக்கான முதன்மைக் காப்புரிமை விண்ணப்பத்தை நிராகரித்த அதே நேரம் உள்ளூர் தயாரிப்பாளர் ஒருவர் இதற்கான இணை மருந்தைத் தயாரிக்க அனுமதிக்கப்பட்டு, உலகச் சுகாதார நிறுவனத்திடம் முன் தகுதிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அர்ஜென்டினா, பிரேசில், பிரான்சு, ரஷ்யா மற்றும் தாய்லாந்து நாட்டின் குடிமைச் சமூக அமைப்புகளும் வணிகப் பிரதிநிதி அமைப்புகளும் இந்த மருந்தின் காப்புரிமைக்கு எதிராக மனு செய்துள்ளனர்.

இந்தியாவில் இது நடந்தது இந்த அளவுக்கு நேர்க்கோட்டில் பயணிக்கவில்லை. ஜனவரி 2015-ல் ஒரு காப்புரிமை நீதிமன்றம், சீனாவையும், உக்ரெய்னையும் போல் ஜிலீயடின். காப்புரிமையை நிராகரித்து விட்டது. எனினும் மே, 2016-ல், மோடி அமெரிக்கா செல்வதற்கு சற்று முன் அதே நீதிமன்றம் தன் முடிவைத் தலைகீழாக மாற்றிக் கொண்டு காப்புரிமைக்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கு முக்கியக் காரணம் ஜிலீயடுக்காக அமெரிக்க அரசு இந்திய அரசின் மீது கொடுத்த அழுத்தம் என்று பரவலாக நம்பப்படுகிறது.

டெல்லியில் உள்ள எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களின் அமைப்பான ‘Delhi Network of Positive People’ என்ற அமைப்பும் பிறரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்தக் காப்புரிமைக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர். இவர்கள் 2018-ல் மும்பையில் உள்ள இந்தியக் காப்புரிமை அலுவலகத்தில் ”ஜிலீயடிற்குக் கூடுதல் காப்புரிமை தரக்கூடாது “ என்று அனுமதி வழங்குவதற்கு முந்தைய எதிர்ப்பு மனுக்கள் இரண்டை கொடுத்துள்ளனர்.

ஜிலீயட், சி வகை கல்லீரல் அழற்சி நோய்க்கான (HCV) மருந்துகளான சோஃபாஸ்புவிர் மற்றும் வெல்படாஸ்விர் (velpatasvir) ஆகிய இரு மருந்துகளுக்கும் கூடுதல் காப்புரிமை கோரி இருந்தது. இந்த வழக்குகளில் இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை. இந்த இரண்டு மருந்துகளும் சேர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் இந்த இரண்டு மருந்துகளும் சேர்ந்து HCV-யின் ஆறு விளைவுகளை மிகவும் பயனுள்ள வகையில் தடுக்கும் ஜிலீயட் பதிவு செய்துள்ளது. 2016-ல் இந்த இரண்டு மருந்துகளின் தொகுப்புக்கான 12 வார பயன்பாட்டுக்கான விலையை ஜிலீயட் $74,000 (சுமார் ரூ.54 லட்சம்) என அறிவித்திருந்தது.

சண்டிகர் மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர் சமீர் ‘தி வயர்’ செய்தி நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் “சோஃபாஸ்புவிரை ஜிலீயட் கண்டுபிடிக்கவில்லை. உண்மையில் 2007-லேயே ஃபார்மா செட் (Pharmasset) என்ற ஒரு சிறிய நிறுவனம்தான் அதைக் கண்டுபிடித்தது.

(சோஃபாஸ்புவிர் என்ற பெயரே அதைக் கண்டுபிடித்த மைக்கேல் சோஃபியா என்பவரது பெயரை ஒட்டி வைக்கப்பட்டது. அவரும் அவரது குழுவும் இணைந்து எச்ஐவியை, உயிரி வேதியல் வினைகள் மூலம் விரைவாக அழிக்கக் கூடிய மருந்து ஒன்றைப் பற்றிச் சிந்தனை செய்து வந்தனர். ஃபார்மாசெட் தயாரித்த அத்தகைய ஒரு மருந்து எச்சிவி-க்கு எதிராகவும் சில செயல்பாடுகளைக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். சோஃபியாவும் அவரது சக ஆய்வாளர்களும் மேலும் மூன்றாண்டுகள் அதில் ஆராய்ச்சி செய்தனர். அதன் முடிவில் சோஃபாஸ்புவிரைக் கண்டுபிடித்தனர்)

ஜிலீயட் அந்த நிறுவனத்தை $1120 கோடிக்கு (சுமார் ரூ.84,126) வாங்கியது‌. இந்த மொத்த முதலீட்டையும் சோஃபாஸ்புவிர் விற்பனைக்கு வந்த முதல் ஆண்டு அமெரிக்கச் சந்தையின் விற்பனை மூலம் திரும்பப் பெற்றுவிட்டது. எனினும் சோஃபாஸ்புவிர் NS5B புரதத்தைக் குறி வைக்கிறது. இந்தப் புரதத்தைப் புரிந்து கொள்வதற்கான ஃபார்மாசெட் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதி உதவி அளித்தது. அதே சமயம் ஜிலீயடின் ஒரு மாத்திரைக்கு $1,000 என்ற அநியாய விலை காரணமாக அந்த மருந்து தேவைப்பட்ட, பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

மருந்துத் தயாரிப்பாளர்கள் எவ்வாறு மக்கள் உயிரோடு விளையாடுகிறார்கள் என்பதை, அறிவுசார் சொத்துடைமை பற்றிய நிபுணரும், ‘Spicy IP’ இதழின் இணை ஆசிரியருமான சுவராஜ் பால் பரூவா விளக்குகிறார். “முதலீடு லாபத்துடன் கைகோத்தால், மக்கள் உடல்நலம் என்பதற்கு பதில் ஆதாயம் தரும் சந்தையைக் குறிக்கோளாகக் கொண்டுதான் ஆராய்ச்சிகளும் நடைபெறும்.”

இதற்கு அவர் மலேரியா ஆராய்ச்சிக்குச் செலவிடுவதை விட ஆண்களுக்கு ஏற்படும் தலை வழுக்கை பற்றிய ஆராய்ச்சிக்குப் பல மருந்து நிறுவனங்கள் ஏராளமான பணத்தை வாரிக் கொட்டுவதை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. “ஒரு சராசரி வழுக்கைத் தலை உடைய அமெரிக்கனோ ஐரோப்பியனோ, ஒரு வளரும் நாட்டில் உள்ள மலேரியா நோயாளியை விட அதிகப்பணம் செலவிட முடியும்.” என்று கூறும் பரூவா, “இந்தப் போக்குப் புதிய மருந்திற்கு, வளரும் நாடுகளின் சந்தை சக்தி படிப்படியாக வளர்ந்து வருவதையும் உலகின் நோய்ச் சுமை மாறுவதையும் பொறுத்து இந்தப் போக்கு மாறிக் கொண்டிருக்கிறது.” என்கிறார்.

“அதிவேகமாக நிகழும் திட்டமிடப்படாத நகரமயமாதலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளின் உலகமயமாதலும், வாழ்நாள் நீடிப்பும் (குறைவான இறப்பு விகிதமும், அதிக நாள் உயிர் வாழ்வதற்கான மருத்துவ வசதிகளும் காரணமாக) வளரும் நாடுகளில் உள்ள மக்களின் மீது, புற்றுநோய், இதய நோய்,கடுமையான சுவாசக் கோளாறுகள் இன்னும் இது போன்ற பல தொற்று மூலம் பரவாத நோய்களின் பெரும் சுமை சுமத்தப்பட்டுள்ளது. இது முன்பு வளர்ந்த நாடுகளுக்கு உட்பட்டதாக மட்டும் இருந்தது” என்கிறது உலக சுகாதார நிறுவனம்

இது ஒருபுறம் நடக்க, நகரமயமாதல், உலகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவற்றுடன் காலநிலை மாற்றம், வனங்களை அழித்தல், சுற்றுப்புறச் சூழலின் சீர்குலைவு ஆகியவையும் சேர்ந்து பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு ‘தாவுதல்’ மூலம் பரவும் zoonoses நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளன. காலநிலை மாற்றத்தையும் சுற்றுப்புறச் சூழலின் அழிவையும் தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் தற்போது வந்துள்ள கொரோனா நோய்த்தொற்று போன்ற பல நோய்த் தொற்று நெருக்கடிகளில் உலகம் சிக்கிக் கொள்ளும் எனப் பல அறிவியலாளர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

பரூவாவின் கூற்றுக்களை தொற்றா நோய்களுடன் மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டாம். மனித நடவடிக்கைகள் மூலமாக மறைமுகமாகத் தோன்றிய முதல் பெரும் நோய்த் தொற்றான‌ கொரோனா நோய்த் தொற்று போலவே பல நோய்கள் தோன்றி, வளர்ந்த, வளரும் நாடுகள் அனைத்தையும் சமமாகப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. உண்மையில் முதல் சில மாதங்களில் கொரோனா நோய்த் தொற்று விமானத்தில் பயணிக்கக் கூடிய வசதியான பணக்காரர்களின் நோயாகவே இருந்தது.

ஆனால் தற்போது கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளைப் பார்க்கும் போது மலேரியா, எய்ட்ஸ், காச நோய் போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்து களைக் கண்டுபிடிக்க எடுத்து வரும் மிக நீண்டகால திட்டங்களைப் போல உருமாறி வரும் எனக் கூறுவது அவசரப்படுவதாகவோ அப்பாவித்தனமானதாகவோ இருக்கலாம்.

அது போலவே HCV நோய்த் தொற்றும் சோபாஸ்விபுர் மருந்தும், பின்னிப் பிணைந்திருக்கும் கதைகள், நோய் சிகிச்சைக்கான ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கும் அந்த மருந்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் சமமாக வாங்கிப் பயன்படுத்த முடிவதை உறுதி செய்வதற்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாட்டை விளக்குகின்றன.

அதைப் போலவே வெட்கக்கேடான முறையில் சோஃபாஸ்விபுரின் விற்பனை லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பது, அதனை வாங்க முடியாத நிலையிலிருக்கும் ஏராளமான நோயாளிகளை மேலும் பலவீனப்படுத்துவதாகவும், HCV எனப்படும் சி வகை கல்லீரல் அழற்சி நோயைக் கண்டுபிடித்து அதனை முற்றிலும் ஒழிக்க தங்கள் அயராத உழைப்பை அர்ப்பணித்த ஏராளமான மருத்துவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அவமானப்படுத்துவதாகவுமே உள்ளது.

வாசுதேவன் முகுந்த் (கட்டுரை &படங்கள் : நன்றி thewire.in)

அறன் செய் இணையத்துக்காக மொழியாக்கம் செய்யப்பட்டது