June 16, 2021

கள்ளக் காதலுக்கு காவல் காக்கப் போகிறதா இந்தியத் தண்டனை சட்டம்?

சுமார் இருபது ஆண்டுகளாக நம் கையில் கிடைக்கும் எந்த செய்தித்தாள்களை புரட்டினாலும், கள்ளக்காதல் சம்பந்தமான செய்தி இடம் பெறாத நாட்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினம்தோறும் அத்தகைய செய்திகளை பார்க்கிறோம். கேட்கிறோம் அதே சமயம் காதலுக்கு கண் இல்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கள்ளக்காதலுக்கு இதயமும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆம்.. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம். முறையான திருமணம் நடந்த பின்னரும், குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும். இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூடா உறவு ஆகும்.

இந்தக் கள்ளக்காதல் ஆபாசம், அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன் மனைவியைக் கொல்லுதல், கள்ளக்காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல், உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதல் என்ற அளவிற்கு நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது. வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே! அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால் எதும் அறியாத குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன.

அநேகமாக பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பொருத்தமும், ஜாதகப் பொருத்தம், குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள். ஆனால் மனப்பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார்.
படிப்பு, அறிவு, அழகு, பொழுதுபோக்கு, வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை, கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர்.

இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள். தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு. அன்பு ஆதரவு இல்லாத உறவுகள், சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர்.

மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது. கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவாகரத்து பெற முயற்சி செய்வதில்லை.
இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன. திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு/ ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன.நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது.மற்ற குடும்பங்களை விட இந்தக் குடும்பங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் திருமணத்தை மீறிய தவறான உறவு குறித்த இந்திய தண்டனைச் சட்டம் அதரப்பழசான விக்டோரியா கால வழக்கத்தின்படி, மிக பழைய கொள்கையைக் கொண்டதாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் திருமணத்தை மீறிய உறவு குற்றம் என்பதை நீக்கக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதுவும் “அனைத்து விதங்களிலும் பெண் என்பவர் ஆணுக்கு சமம் என்பதை சமூகம் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று 5 பக்க எழுத்து உத்தரவில் சுப்ரீம் கோர்ட் நீதிமன்றம் சனிக்கிழமை பதிவு செய்துள்ளது.

நம் இந்திய தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவு, திருமணத்தை மீறிய பாலியல் உறவு, பலாத்காரம் என்று கூற முடியாது, ஆனால் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளது. குறிப்பாக எந்தப் பெண்ணுடன் ஒரு ஆண் திருமணத்துக்கு அப்பாற்பட்டு பாலியல் உறவு மேற்கொள்கிறாரோ அந்தப் பெண் இன்னொருவர் மனைவி என்று தெரியும் பட்சத்தில் அவளது கணவரின் ஒப்புதல் இல்லாமல் உறவு மேற்கொள்ளப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று 497-ம் பிரிவு கூறியுள்ளது. இந்த தண்டனைச் சட்டத்தின் 2 அம்சங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது. ஒன்று, இந்தச் சட்டம் ஏன் திருமணமான பெண்ணை பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கிறது.

இரண்டாவது, குறிப்பிட்ட பெண்ணின் கணவரின் சம்மதத்துடன் வேறொரு உறவு பரிணமிக்கிறது எனும் போது அந்தக் கணத்திலேயே அது தவறான உறவாகாது. ஆகவே திருமணமான ஒரு பெண் அவர் கணவரின் ‘சொத்து’அல்லது தனக்கென்று சிந்தனையற்ற, செயல்திறனற்ற ஜடப்பொருளா? என்ற இரண்டு கோணங்களில் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திர அடையாளத்தை அடித்து நொறுக்கிவிட்டது. அதாவது கணவனின் சம்மதத்துடன் என்று கூறும்போதே பெண்ணின் தனிப்பட்ட சுதந்திர அடையாளத்திற்கு அடி கொடுத்துள்ளது. இது பெண்ணை அடிமையாக்குவதற்கு சமமே. மாறாக நம் அரசியல் சாசனச் சட்டம் பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகப் பதிவிட்டுள்ளது.

அதே போல் ஒரு பெண் யார் பொறுப்பில் இருக்கிறாரோ அவர்தான் தவறான உறவு பற்றிய புகார் அளிக்க முடியும், இதனையடுத்து குற்ற நடைமுறைச் சட்டப் பிரிவு 198 (1), மற்றும் (2) ஆகியவையின்படி திருமணம், கள்ள உறவு ஆகியவற்றில், பாதிக்கப்பட்ட கணவன் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்பதை இந்த மனு கேள்விக்குட்படுத்தியுள்ளது.

மனுதாரர் ஜோசப் ஷைன் என்பவர் சார்பாக வாதாடிய காலீஸ்வரம் ராஜ் மற்றும் எம்.எஸ்.சுவிதத் ஆகியோர் கூறும்போது இந்த தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் பெண்கள் ஆண்களின் சொத்து என்பதாகவே பார்க்கப்பட்ட காலக்கட்டமாகும். எனவே 497-ம் சட்டப்பிரிவை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து, அரசியல் சட்டம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் அனைத்து விதத்திலும் சம உரிமை உண்டு என்று கூறுகிறது. எனவே பெண் எனப்படுபவர் ஆணுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் சமமாக நடத்தப்படுவதை சமூகம் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன் உத்தரவில் பதிவிட்டுள்ளார்.

நீதிபதி சந்திராசூட், தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவு ஏன் கணவனின் வார்த்தையை நம்ப வேண்டும்? அதாவது கணவனின் சம்மதத்துடன் பெண் தன் கணவனல்லாத இன்னொரு ஆணிடம் உறவு கொள்ள வேண்டும் என்பது ஆண்கள் பக்கம் சாய்வதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார். அதாவது சட்டப்பிரிவு 497 மனைவியை கணவனின் சொத்து, பொருள், என்பதாகப் பார்க்கிறதா என்பதைச் சுற்றி விவாதம் நடைபெற்றது.

இந்தச் சட்டப்பிரிவுதான் தூசி படிந்த விக்டோரியா கால நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது என்று வர்ணித்த தலைமை நீதிபதி சமூகம் முன்னேறும்போது புதிய தலைமுறை சிந்தனைகளும் எழுச்சி பெறுகின்றன என்றார்.இதற்கு முன்னதாக கள்ள உறவுகள் குறித்த இந்தியத் தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவின் செல்லுபடித்தன்மையை 1954, 1985 மற்றும் 1988-ம் ஆண்டுகளில் அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.