December 8, 2021

மிஷன் சக்தியால் விண்வெளியில் குப்பையா? அமெரிக்காவுக்கு இந்தியா விளக்கம்!

விண்வெளிக்கு  1957 முதல், சுமார்  12,000 செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது சுமார் 3,000 செயற்கைக் கோள்கள்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மீதம் உள்ள செயல்படாத செயற்கைக் கோள்கள் விண்வெளிக் குப்பைகளாக விண்ணில் மிதந்து கொண்டு இருக்கின்றன. அப்படியான விண்வெளிக் குப்பை என்பது இயற்கையாகவும் செயற்கை யாகவும் விண்வெளியில் சேரும் பொருட் களைக் குறிக்கிறது. விண்கற்கள், எரிநட்சத்திரத் தூசுகள் ஆகியவை இயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும், மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த, வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள், செயற்கைக் கோள் பாகங்கள் செயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் செயற்கைக் கோள்களின் தேவை அதிகமானதால் செயற்கை விண்வெளிக் குப்பைகள், இயற்கை விண்வெளிக் குப்பைகளைவிட அதிகரித்தபடி உள்ளது என்று முன்னரே எச்சரிக்கை வெளியான  நிலையில் மிஷன் சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் சோதனை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, விண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள வெற்றிடம், விண்வெளி (ஸ்பேஸ்) எனப்படுகிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 முதல் 2,000 கி.மீ. தொலைவில் தொலையுணர் செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன. இவை நிலத்தையும் கடற்பரப்பையும் படம் பிடிக்க உதவுகின்றன. இந்தியத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம், ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி போன்றவை இயங்குவதும் இந்தச் சுற்றுப் பாதையில்தான். விண்வெளி வீரர்கள் விண்வெளி நடை நிகழ்த்துவதும் இங்குதான்.

இந்த விண்வெளியில் அதிகரிக்கும் குப்பைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சர்வதேசத் தொலைத்தொடர்பு சங்கம் சில கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் வகுத்துள்ளது. செயற்கைக் கோள்களை ஏவும்போது, வெடிப்பு விபத்துகள் நிகழாதபடி தக்க சோதனைகள் செய்தல், பிற செயற்கைக் கோள்கள் இருக்கும் பாதையில் குறுக்கிடாமல் தடுத்தல், செயற்கைக் கோள் களின் ஆயுள் முடிந்த பின் காற்று மண்டலத்திலோ அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுப்பாதையிலோ செலுத்துதல் ஆகியவை இந்தச் சங்கத்தின் முக்கியமான பரிந்துரைகள்.

இதனிடையே விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. விண்வெளியில் 300 கிமீ உயரத்தில் சுற்றிவந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. இந்த தகவலை நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்

இந்நிலையில், மிஷன் சக்தி சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்தது பற்றி அமெரிக்கா இன்று கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவர்,”செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை குறித்த பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி, அறிவியல், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியாவுடனான ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

”செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அமெரிக்க அரசுக்கு கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

இதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,”தாழ்வான வளிமண்டலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதால், விண்வெளியில் குப்பைகள் சேராது என்றும், உடைந்து சிதறிய செயற்கைக்கோள் குப்பைகள் சில வாரங்களில் பூமியில் வந்து விழுந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளது.