September 29, 2021

இந்திய அரசியல் ஒரு கவனிக்கத்தக்கப் புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.!

மாநில அளவில் செல்வாக்குக் கொண்ட கட்சிகள் தங்கள் மாநில நலன்கள் என்பதை முன் வைத்து, பாஜகவிற்கு எதிராக சகோதர மாநிலக்கட்சிகளோடு இணைந்து செயல்பட முன் வந்திருக்கின்றன. இத்தனை நாள் ஒரு மாநிலக் கட்சி, மற்றொரு மாநிலக் கட்சியைத் தங்களது முதன்மையான எதிரியாகக் கருதி தேசியக் கட்சிகளோடு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அதிலிருந்து முற்றிலும் மாறான நிலைக்கு அவை மாறுகின்றன.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்பதோடு, பாஜக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது ஓர் உதாரணம் (இதற்கு வரவிருக்கும் 2019 சட்டமன்றத் தேர்தல் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை என்ற போதிலும் இது ஒரு குறிப்பிடத் தக்க மாற்றம்)

உபி தேர்தலில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் இணைந்து பாஜகவை எதிர்த்தது மற்றுமோர் உதாரணம்

மக்களவைக்கு உள்ளேயும் வெளியேயும் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அதிமுக -திமுக எம்.பிகள் இணைந்து நடத்திய போராட்டம் இன்னுமொரு உதாரணம். காவிரி பிரச்சினை விஷயமாக எடப்படியும் ஸ்டாலினும் சந்தித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டது கூட ஒரு தொடக்கம்தான்

“நாட்டைக் காக்க அவசியமானால் மார்க்சிஸ்ட்களோடு சேர்ந்து வேலை செய்யத் தயார் ” என மம்தா 2016 நவம்பரில் (பணமதிப்பிழப்பின் போது) சொன்னதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், இந்தக் கட்சிகள் பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசைக் கருதவில்லை என்பது. உ.பி. மக்களும் அவ்விதம் கருதவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன (அங்கு காங்கிரஸ் டெபாசிட் இழந்தது)

மாநில அளவில் செல்வாக்குக் கொண்ட கடசிகள், மாநில நலனை முன்னிறுத்தி ஒரு கூட்டாட்சி முன்னணி Federal Front அமைக்குமானால் அது வரவேற்கத்தக்கது.அப்போது அரசியல் பிரம்மாண்ட ஒற்றைத் தன்மை எதிர் கூட்டாட்சி (Monolithic Vs Federal) என்று கருத்தியல் நிலையில் இரு துருவங்களாக நிலை கொள்ளும். கருத்தியல் ரீதியான அரசியல் ஆரோக்கியமானது

அதை நோக்கித்தான் போகிறோமோ?

மாலன் நாராயணன்