January 27, 2023

இந்தியாவின் அதிரடி உலகளவில் எகிறுகிறதோ? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

மீபகாலமாக இந்தியா உலக அரங்கில் அடிக்கடி பேசப்படுகின்ற நாடாகியுள்ளது. தொழில் நுட்பம், உலக அரசியல் மற்றும் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றில் தனித்து தெரிகிறது. அரசின் முயற்சிகளால் இச்சூழல் உருவாகியுள்ளது என்பதுதான் குறிப்பிடத்தகுந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து uலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணித்தார். இப்போது அவற்றின் பயன்களை மெதுவாக அறுவடை செய்வது போன்று தெரியும் பல நிகழ்வுகள் சமீப காலங்களில் நிகழத் துவங்கியுள்ளது.

உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் எரிச்சல் அடையாதது போன்று ஐ நாவின் வாக்கெடுப்புக் களில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. ஆயினும் இப்போர் பெரிதளவில் பரவாது எனும் நம்பிக்கையில்தான் இந்தியா அவ்வாறு செய்துள்ளது போலத் தெரிகிறது. விநோதமாக இரஷ்யாவும், உக்ரைனும் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டே போரிலும் ஈடுபடுகின்றனர். இப்போது உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகியுள்ளது. எனவே தற்போதுள்ள 27 நாடுகளின் உதவியை உக்ரைன் பெறுவதோடு, உறுப்பு நாடு ஒன்றின் மீது போர் தொடுப்பது ஐரோப்பாவின் மீது போர் தொடுப்பது போன்றதாகிவிடும். ரஷ்யா ஏற்கனவே போரைத் துவங்கியிருந்தாலும் இப்போது தொடர்வது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் போரினுள் இழுப்பதாகிவிடும்.

ஐரோப்பா போரிடத் துவங்கினால் அமெரிக்காவும் இறங்கும். சீனா என்ன செய்யும் என்பது தெரியாது; போரில் இறங்கலாம், அல்லது ரஷ்யாவிற்கு பின்புலத்தில் நின்று அமெரிக்க, ஐரோப்பிய தடைகளைத் தகர்க்க உதவலாம். குறிப்பாக ஸ்விஃப்ட் எனும் பணப் பரிமாற்ற வசதியை சீனா செய்து கொடுக்கலாம். தனது உலகளாவிய வங்கிச் சேவைகளையும், வர்த்தகத் தொடர்புகளையும் இரஷ்யாவிற்காக உதவப் பயன்படுத்தலாம். இந்தியா என்ன செய்யும்? நடுநிலை என்ற வகையில் இரஷ்யாவிற்கு ஆதரவாக ஒன்றும் செய்யாது. ஆனால் போர் முற்றினால் இரஷ்யாவிற்கு எதிராக செயல்பட்டாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.

கோவேக்சின் தடுப்பூசியை ஏறக்குறைய பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் கூட கோவேக்சின் செலுத்தப்படுகிறது. குறுகிய காலத்தில் தடுப்பூசியை தயாரித்ததன் மூலம் தனது தொழில்நுட்ப ஆற்றலை இந்தியா பறைச்சாற்றி விட்டது. ஏற்கனவே பாரத் பயோடெக் மஞ்சள் காமாலை, எபோல வைரஸ் போன்றவற்றை தடுக்கும் மருந்துகளை தயாரித்து அளித்துள்ள நிறுவனம்தான். இப்போது உலகெங்கும் இந்தியாவின் ஆற்றல் தெரிந்துள்ளதால் எதிர்காலத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப உதவியை பல நாடுகள் தேடி வந்து பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நேபாளம் இந்தியாவின் டிஜிட்டல் பரிமாற்ற சேவையை தங்களது நாட்டிற்குள்ளும் பயன்படுத்தும்படி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக இந்திய டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. நேபாளத்துடன் சமீப காலங்களில் இந்தியாவிற்கு நல்ல உறவு முறை கிடையாது. அந்நாட்டில் இந்தியாவிற்கு எதிராகவும், சீனாவிற்கு ஆதரவாகவும் சில அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. இந்நிலையில்தான் மலைப்பிரதேசமான அந்நாட்டில் இந்திய தொழில்நுட்பமானது எல்லைகளை இணைக்கும்படி செய்துள்ளது. அந்நாட்டின் 3 கோடி மக்களில் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்போர் எண்ணிக்கை 65% மாகவுள்ளது, ஆனால் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 45% மட்டுமே! ஆயினும் இத்தொழில்நுட்பத்தால் வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை உயரக்கூடும்.

இவைத் தவிர சில ஆண்டுகளாக மத்திய அரசின் கறாரான ஊழல் ஒழுப்பு நடவடிக்கைகளுக்கு சவாலாக இருந்த விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் சொத்துக்களை இந்திய அரசின் வசம் ஒப்படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்ற வழக்குகளில் இந்திய அரசிற்கு சாதகமாக தீர்ப்புகள் வந்துள்ளது. உலக அரங்கில் முறைகேடுகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இடம் பெற்றுள்ள இந்தியா இப்போது அத்தகைய அவப்பெயரிலிருந்து விடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி இங்கிருந்து நிதியை தூக்கிக் கொண்டு போய் விடலாம் எனும் எண்ணம் குறையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு மாற்றமும் ஓர் இரவுக்குள் நடைபெற்று விடுவதில்லை. மாற்றங்கள் நிகழ நிறைய பொறுமையும், அதே சமயம் நடவடிக்கைகளில் தொய்வும் ஏற்படாமல் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். இதைத்தான் மேற்சொன்ன விஷயங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ரமேஷ்பாபு