February 7, 2023

இரும்புத்திரை -திரை விமர்சனம் = இணைய உலகின் விழிப்புணர்வு பாடம்!

செல்போன் வடிவில் விரல் நுனியில் வந்து விட்ட இணையம் ஒரு விசித்திரம். இதன் மூலம் ஒரு பக்கம் எக்கச் சக்கமான வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. அதிலும் சைபர் வெளி என்று சொல்லப்படும் இணையம் சார்ந்த பரப்பில் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு பாதுகாப்பின் அவசியத்தையும், அதற்கான வழிகளையும் அரசே அதிகம் அலட்டிக் கொள்ளத நிலையில் விஷால் சொந்த செலவில் அது குறித்தான ஒரு விழிப்புணர்வு பாடமே எடுத்திருக்கிறார்..!

இந்தியா என்ற வெறுப்படைந்து ஃபாரீனில் போல் செட்டிலாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ராணுவ மேஜர் கதிரவன் (விஷால்), சின்ன வயதிலேயே அவரது அம்மா இறந்து விடுகிறார். அப்பா டெல்லி கணேஷ் ஊதாரித் தனமாய் ஊரைச் சுற்றி கடன் வாங்கி ஒளிந்து வாழ்கிறார் என்பது பிடிக்காமல், தனது 12 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, இராணுவத்தில் சேர்ந்து தன் சொந்தத் தங்கையிடம்கூட கா- விட்டப்படி தனி ஒருவனாக இருக்கிறார். அதனால்தானோ என்னவோ தன் கண் முன் என்ன தப்பு அநியாயம் நடந்தாலும் உடனடியாக அடிதடியில் இறங்குவதாலும், தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதாலும் மருத்துவ ஆலோசனைக்காக ரதி தேவியை (சமந்தா) போய் சந்திக்க பரிந்துரைக்கப்படுகிறார்.

இதனிடையே, ஒரு ஹை டெக் ஹேக்கர் கும்பல் கோல்மாலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மக்களின் வங்கிக் கணக்குகளில் ஊடுருவி லட்சம் லட்சமாக பணத்தைத் திருடிக்கொண்டிருக்கிறது. இதே குரூப்-பிடம் இந்த மேஜர் கதிரவனும் சிக்கி பாதிக்கப்பட்ட, நிலையில் அவர்களை கண்டறிய முயல்கிறான். அந்த கண்டறியும் பாதை White Devil (அர்ஜுன்) என்கிற சைபர் க்ரைம் கும்பலின் தலைவனை நோக்கி செல்கிறது.

யுனிசெஃப் பாராட்டு ம்ழையில் நனைந்த படி எவராலும் பிடிக்க முடியாத அதே சமயம் சகல மக்களையும் கண் காணிக்கக்கூடிய அளவிற்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களை தன் விரல் நுனியில் வைத்திருப்பவர்தான் White Devil. அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரியிடமே பணத்தை திருடிவிட்டு அந்த மினிஸ்டர் & அதிகாரியையே மிரட்டும் வில்லன்! இந்த வில்லனை நேருக்கு நேர் மோதுவதை அடுத்து நடப்பது என்ன என்பதுதான் மிச்சக் கதை!

இந்தப் படத்தின் மூலம் நம்முடைய ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களும் ஸ்மார்ட்போன்கள் மூலம் டிஜிட்டல் திருடர்கள் கையில் சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக வங்கியிலிருந்து வரும் SMSகளுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணக் கூடாது, மொபைல் appகள் மூலம் எப்படியெல்லாம் ஊடுருவுகிறார்கள், ஜெராக்ஸ் கடைக்காரர்கள் மூலம் விற்பனை ஆகும் தனியார் தகவல்கள், விமான பயணம் முடிந்தவர்கள் Boarding Passகளை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பக்கவாக ரிசர்ச் செய்து காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். அதிலும் அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் கூட அலசப்பட்ட ஆதார் கார்டு தகவல் கசிவு மற்றும் Facebook Cambridge Analytica மோசடி பற்றியெல்லாம் பேசும் போது தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

இண்டர்வெல்லுக்கு பின்னர் ஸ்ட்ராங் என்ட்ரி கொடுக்கும் அர்ஜூன் தனி பாணியில் வில்லன் வேலையை கச்சிதமாக காட்டுகிறார். நாயகி சமந்தா சைக்ரியாடிஸ்ட்டாம், நம்பற மாதிரி இல்லை. எப்போ பார்த்தாலும் புன்னகைத்தபடியே லவ் பண்ண ரெடியாகி கொண்டே இருப்பது போல் தோன்றி மறைகிறார் . யுவன் ஷங்கர் ராஜா இசை.. சில பி.ஜி.எம் பிட்-டுகளில் மட்டும் மெனகெட்டிருக்கிறார். ரூபனின் எடிட்டிங் ஷார்ப். அதற்காக மிகப் பெரிய நெட் ஒர்க் ஹேக்கரை அவன் வழியிலேயே போய் ரொம்ப சுருக்கமா போய் பிடிச்சு கதையை முடிக்கிறது மட்டும் ஒட்டவில்லை

மொத்ததில் விஷாலின் உழைப்புக்கும் இயக்குநர் மித்ரனின் மூளைக்கும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸே அமோகம்

மார்க் 5 / 3.5