இனிமே எலெக்‌ஷன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்!- ஐரோம் ஷர்மிளா அறிவிப்பு

இனிமே எலெக்‌ஷன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்!- ஐரோம் ஷர்மிளா அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் சிறப்பு அதிகார சட்டம் அமலாக்கப்பட்டதை எதிர்த்து, 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தவர் ஐரோம் ஷர்மிளா. கடந்த 2016 ஆகஸ்ட் 9ம் தேதி உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டு, அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ‘மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டணி’ (பிஆர்ஜேஏ) என்ற புதிய கட்சியை ஷர்மிளா 2016 அக்டோபர் மாதம் தொடங்கினார். மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில், 3 தொகுதிகளில் பிஆர்ஜேஏ கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தவ்பால் தொகுதியில் ஷர்மிளா போட்டியிட்டார்.

iro mar 123a

ஓட்டு எண்ணிக்கை நேற்று நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தவ்பால் தொகுதியில் ஷர்மிளாவுக்கு 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அந்த தொகுதியில் ‘நோட்டா’வுக்கு 143 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. தேர்தலில் போட்டியிட்ட பிஆர்ஜேஏ கட்சியின் மற்ற 2 வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, “தேர்தலில் எனக்குக் கிடைத்த படுதோல்விக்காக நான் வெட்கப்படவில்லை. இதுபோன்று ரிசல்ட் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் பிரச்சாரம் செய்தபோது, எனக்கு எல்லா தரப்பு மக்களும் அமோக ஆதரவு அளித்தனர். ஆனால், தேர்தலில் மற்ற வேட்பாளர்களுக்கு அவர்கள் ஓட்டளித்துள்ளனர். இதில், மக்களுடைய சுயஆதாய நோக்கம் தெளிவாகிறது. இந்த தேர்தல் முடிவால் நான் விரக்தி அடைந்திருக்கிறேன். இனி எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால், என் பிஆர்ஜேஏ கட்சி தொடர்ந்து செயல்படும். தென்னிந்தியாவில் ஒரு ஆசிரமத்தில் தங்கி ஒரு மாதம் தியானம் செய்ய நான் திட்டமிட்டிருக்கிறேன்” என்று ஷர்மிளா தெரிவித்தார்.

மேலும் தேர்தல் முடிந்ததும், கோவா மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் டெஸ்மண்ட் குட்டென்ஹோவை திருமணம் செய்ய இருப்பதாக ஷர்மிளா ஏற்கனவே அறிவித்திருந்தார். திருமணம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க ஷர்மிளா நேற்று மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!