September 20, 2021

அமெரிக்காவின் பல பகுதிகளை சின்னாபின்னமாகிய ‘இர்மா’ புயல்!

இந்த நூற்றாண்டின் மிகவும் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படும் இர்மா புயல் அமெரிக்காவின் பல பகுதிகளை சின்னபின்னமாக்கியுள்ளது. மணிக்கு 220 கி.மீ.வேகத்துடன் சூறாவளி காற்றும் மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சஹாரா பாலைவனத்திலிருந்து வந்த வெப்ப காற்றும், குளிர்காற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இணைந்து கடலை கடக்கும்போது வலுப்பெற்று அட்லாண்டிக் பெருங்கடலில் மிகவும் சக்திவாய்ந்த புயலாகக் கடந்த சில நாள்களுக்கு முன் உருவானது இர்மா. சுமார் 220 கி.மீ வேகத்தில் சூறாவளியாக சுழன்றடித்துள்ள இந்தப் புயலால், ஃப்ளோரிடா மாகாணமே உருக்குலைந்துள்ளது.

இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் புரட்டிப் போட்டது. அங்கு சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டுவதால், மரங்கள் வேரோடு சரிந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் சிக்கி தவிக்கின்றனர். அந்த மாகாணம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஒட்டு மொத்த மக்களும் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயல் கரீபியன் கடலில் உள்ள தீவுகளை துவம்சம் செய்தது. கியூபாவில் கரையைக் கடந்த போது 3ஆம் நிலைப் புயலாக வலு குறைந்து காணப்பட்டாலும் இர்மா, அமெரிக்காவை அடைந்தபோது, மீண்டும் 4ஆம் நிலைக்கு வலுப்பெற்றதாக அமெரிக்க வானிலை மையம் எச்சரித்தது.

இந்த புயலால் ஹைலேண்ட்ஸ் கவுண்டி, கரோலினாவின் போல்க் கவுண்டி, ஓசேலோ கவுண்டி ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசியது. அங்குகடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், கனமழை பெய்து வருகிறது. இந்த இடங்களில் 16 முகாம்களுக்கு மேல் அமைக்கப்பட்டு மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இர்மா புயல் இந்த நூற்றாண்டின் பெரும் புயல் என வானிலை அறிஞர்கள் கூறுகின்றனர். பலத்த மழையையும் 290 கி.மீ வேகத்துக்கு புயல் காற்றையும் கொண்டு இந்தப் புயல் கரீபியன் தீவுப் பகுதிகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போர்டோ ரிகா, கியூபா, விர்ஜின் தீவுகள் உள்ளீட்ட நாடுகலில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி மக்களை பீதிக்குள்ளாக்கி யுள்ளது. உலக புகழ் பெற்ற மியாமி கடற்கரையில் கடல் இதனால் சுமார் 3 அடிக்கு உள்வாங்கியது. புளோரிடா மாகாணத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குபேரிடர் மேலாண்மை குழுவும் ராணுவமும் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் முன்னின்று இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அங்கு பள்ளி, சர்ச், விளையாட்டு உள்அரங்கங்கள் என 400க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன்பிருந்தே முகாம்களில் பெரும்பாலான மக்கள் தஞ்சமடையத் தொடங்கினர். இந்நிலையில், புளோரிடாவின் தாழ்வான பகுதியான கீஸ் தீவை நேற்று காலை 7 மணிக்கு புயல் தாக்கத் தொடங்கியது. புயல் நகர நகர மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியது. 15 முதல் 20 அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆர்ப்பரித்தன.கனமழை காரணமாக, கீஸ் தீவுக்கூட்டத்தின் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. காலை 9 மணிக்கு கீஸ் தீவை புயல் முழுமையாக மையம் கொண்டது. சூறாவளியில் சிக்கி மரங்கள் வேரோடு சரிந்தன. புயல் வலுவடைந்ததைத் தொடர்ந்து மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மியாமியில் அதிகபட்சமான பகுதிகளில் மக்கள் இருளில் தவிக்கின்றனர். மியாமி நகரின் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் சரிந்து காடு போல் காட்சி அளிக்கிறது.

புயலையொட்டி, மாகாணத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இர்மா புயலால் ஜார்ஜியா, தெற்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புயலில் சிக்கி இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகமும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. மழை, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்லாண்டாவில் வாழும் அமெரிக்க இந்தியர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். இந்தோ அமெரிக்க அமைப்புகளில் ஒன்றான சேவா சர்வதேச அமைப்பு 300 குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியுள்ளது. இதே போன்று அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன், இதர சங்கங்கள் மற்றும் மத அமைப்புகளும் ஏறத்தாழ 2 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவியுள்ளன. அட்லாண்டாவில் உள்ள நான்கு ஆலயங்கள் ஃபளோரிடா மக்கள் தங்குவதற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் 3 இடங்களில் உணவு விடுதி நடத்தி வரும் நமது தமிழகத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு இளைஞர் தினேஷ்குமாரின் அம்மாஸ் கிச்சன் இலவச உணவுகளை வழங்கி வருகிறது.