இரவின் நிழல் – விமர்சனம்!

லக சினிமா தொடங்கி நம் தமிழ் சினிமா வரை எக்கச்சக்கமான புதுமைகளையும், சோதனை முயற்சிகளையும் எதிர் கொண்டுதான் வளர்ந்து கொண்டிருக்கிறது.. பல தரப்பினரும் சொல்வது போல் உலக வரைபடத்தை அடுத்து, உலக மக்களை ஒன்றிணைக்கும் ஒரே சாதனம் இந்த சினிமா. கலை என்பதை தாண்டி பொழுது போக்கு என்று மட்டும் சொல்ல முடியாத விகிதத்தில் தயாரான இத்தாலியப் படத்தை இந்தியாவிலும் கொண்டாடலாம்; இந்தியப் படத்தை செக்கோஸ்லோவியாயிலும் அங்கீகரிக்கலாம். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய படம் இன்றும் பார்க்கப்படுகிறது. இன்றைய படம், நூறு ஆண்டுகள் கழித்தும் பார்க்கப்படும். ஒரு சினிமாவுக்கும் நாடும் இல்லை. காலமும் இல்லை. அதனாலேயே அந்த சினிமா என்னும் உன்னதக் கலையையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்வோர் பட்டியல் கொஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது . அந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் ரா. பார்த்திபன்..திரையில் அல்லது மேடைகளில் தோன்றும்போதே, தன்னுடைய வித்தியாசமான செயல்கள் மற்றும் பேச்சுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் கலையறிந்தவர். அடுத்தவர்களை பாராட்டுவது அல்லது அவர்களுக்கு பரிசுகள் வழங்குவதில் கூட தன்னுடைய தனித்தன்மையைக் காட்டும் பார்த்திபனைக் கொண்டாடுவதெற்கென்றே ஒரு கூட்டமுண்டு..முழுக்க .,முழுக்க அவர்களை (மட்டுமே) திருப்திப்படுத்த ஒரு புதுமைப் படைப்பை ‘இரவின் நிழல்’ என்ற பெயரில் வழங்கி இருக்கிறார் கோலிவுட்டின் புதுமை விரும்பி பார்த்திபன்..!

இப்படத்தின் பிரிவியூ ஷோவின் போது பார்த்திபன், ‘இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் யாரும் கதையை வெளியில் சொல்ல வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டாலும் விமர்சனம் என்று வந்து விட்டால் கதையை பூடகமாகக் கூட சொல்லாமல் ரிவியூ செய்வது நிறைவாக இருக்காது இல்லையா? அதுனால் ஷார்ட் & ப்ரீப்பா சொல்வதானால் அனாதை இல்லத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் சொந்தக் காலில் 50 வயதான பின்னரும் நிற்க எம்புட்டு பாவங்களை செய்ய வேண்டி இருக்கிறது, என்பதை அப்படியிப்படிப்படியெப்படியிப்படி எல்லாமோ நிகழ்காலம், கடந்த காலம் என மாற்றி மாற்றி பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக் காட்சிகளை எல்லாம் புகுத்தி கோர்வையாக எடுத்து அதை ரசிகனுக்கு புரியும்படி வெளிக்காட்ட முயன்று இருக்கிறார் (கள்).

இந்த புதுமையை ஒட்டி எடுக்கும் படத்தில் அடுத்தடுத்து காட்ட வேண்டிய செட்களிலும் வித்தியாசமான லைட்டிங் மற்றும் ஃபோகஸ் ஃபோகஸ் போய் விட்டால் மீண்டும் ஒரு டேக் எடுக்க வேண்டிய நிலை என்பதுடன் சொதப்பினால் முழு பழியும் தன் மீதுதான் என்று உணர்ந்து தன் பங்களிப்பை பர்ஃப்பெக்ட்டாக செய்து தனி அப்ளாஸ் வாங்குகிறார் சுந்தர புருஷன், வானத்தைப் போல, அவன் இவன், அன்பே சிவம், நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டெடிகேட்டிவ் கேமராமேன் ஆர்தர் வில்சன் மற்றும் அவரது டீம். அது போல் ஒரே நேரத்தில் காட்சி எடுக்கப்பட்டாலும், அதை ‛ஷாட் பை ஷாட்’ ஆக உணர வைப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தான். ஆக சர்வதேச சாதனை முயற்சிக்கு யாரிடம் இணையலாம், யாருடன் கஒ கோர்க்கலாம் என்பதை ஆழமாக யோசித்து புரிந்து, ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரையும் பணியமர்த்தியிருக்கிறார் பார்த்திபன்.

ஆனால் இக் கதையை புதுமையாக சொல்வதே சாதனை என்று நம்பிய பார்த்திபன் இப்படத்தை தொடங்கும் முன்னதாக 30 நிமிட மேக்கிங்-கை  பார்க்கும் போதே அப்ளாஸ் அடித்து பாராட்டி விடுகிறோம். இத்தனைக்கும் 23 வது டேக்கில் தான், படம் முழுசாக முடிந்திருக்கிறது. அப்படியென்றால்? நம் கண் முன்னே வந்திருக்கும் படம் ஒரே டேக் தான்…! ஆனால் அது எந்த இடத்தில் சொதப்பினாலும், ஆரம்பத்திலிருந்து தொடங்கி, புது டேக்காக எடுக்க வேண்டும்; அதிலும் அந்த அவர் மட்டுமில்லை, படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் ஒன்றல்ல இரண்டல்ல டேக், டேக், டேக் என… சிறு சிறு தவறுகளுக்கு கூட 23 ரீ டேக் எடுத்து, ஒரு பெரிய போராட்டத்திற்கு மத்தியில் படத்தை நிறைவு செய்திருக்கிறார் .அந்த வகையில்தான் ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட உலகின் முதல்படம் என்கிற பெயரை, இரவின் நிழல்(Iravin Nizhal)பெற்று உள்ளதாம்.

ஆனால் முன்னரே சொன்னது போல் இவ்வளவு பெரிய சாதனை பிராஜக்டை எடுத்தவர் ஒரு அனாதை மனிதனின் அக்ளி வாழ்க்கை என்ற ஒற்றை சொல்லில் திரைக்கதை தேர்ந்து எடுத்து இருப்பது முழு மைனஸ் . கூடவே ஆரம்பம் முதல் டிராமாத்தனம், கெட்ட வார்த்தைகள், பாலியல் கொடுமை காட்சி, காணத் தகாத காட்சிகள் என்று படத்தைக் காண்போரின் வெறுப்பை சம்பாதித்து சாதனை படைப்பின் முனையை மழுங்கடித்து விட்டது.

மொத்தத்தில் இரவின் நிழல் –  சினிமாப் பிரியர்களுக்கான மூன்றாம் பிறை 

மார்க் 3/5

Related Posts

error: Content is protected !!