August 14, 2022

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்!

நம் நினைவுக்கெட்டிய தூரம் வரை இந்த காயலான் கடை பற்றி யோசித்து பார்த்தால்  சில பல ஊர்களில் ஒன்றிரண்டு பேர் மட்டும் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று வெல்லம், வெங்காயம், பொரி உருண்டை, பேரிச்சம்பழம், மிட்டாய்களுக்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை எடை போட்டு வாங்கி வந்து வியாபாரம் செய்தனர். அதன்பிறகு ஓடாத டிவி, ஓட்ட முடியாத சைக்கிள், படுக்க முடியாத கட்டில், சமைக்க முடியாத அண்டா, அலுமினிய பாத்திரம், உடைந்து போன பிளாஸ்டிக் பொருட்கள், காலியான பீர், பிராந்தி பாட்டில்கள் வாங்கும் கடையாக மாறிய காயலான் கடை உருவான வரலாறு கொஞ்சம் சுவையானது.

அதாவது இன்றைய சென்னை ராயப்பேட்டையில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல் உலகப்போர் காலக்கட்டத்தில் கம்பெனியில் சீமெண்ணெய் (கிருஷ்ணாயில்) வாங்கி அதை அரசுக்கு விற்று வந்திருக்கிறார்கள். உலகப் போரால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டு விட, குதிரை களையும் , வண்டிகளையும் எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.அப்படி எடுத்து வந்த குதிரை வண்டிகளை மயிலாப்பூர் ஐயர் கோஷ்டிகளிடம் விற்றிருக்கிறார்கள். அதோடு நில்லாமல், மரம், ஆணி, அச்சு, சட்டம் என பலவற்றையும் சேர்த்து விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன்பின் வெள்ளையன் ஓடாத,பழைய லாரிகளை கொடுத்திருக்கிறான். அதையும் வாங்கி உடைத்து சில்லறையாக விற்றிருக்கிறார்கள்.அன்று தொடங்கியது தான் இந்த ஓட்ட ஒடசல் வியாபாரம்.

முதலியார் சமூகம் பழைய பொருட்கள் வியாபாரத்தில் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறிப்பாக வடக்கில் கோலோச்சியது, அது போலவே காயல்பட்டிணம் பகுதியை சேர்ந்த துலுக்கர் கள் சென்னையிலிருந்து வாங்கிச் சென்று தென் தமிழகத்தில் விற்கத்தொடங்கி யிருந்தார்கள். காயல்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் ஆரம்பித்த கடையே பின்நாளில் “காயலான்” கடை என்று அழைக்கப்பெற்று அதுவே நிரந்தர அடையாளமாகிப்போனது வரலாறு கூறும் உண்மை. அப்படி யாப்பட்ட ஒரு காயலான் கடையில் சரக்கு லாரி ஒட்டுபவன் பின்னணியில் உலகப் போரினால் இன்றைக்கும் தொடரும் விபரீதத்தை சொல்லும் படம்தான் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே தூக்கி போடும் பா இரஞ்சித் தயாரிப்பில் புது முக இயக்குநர் அதியன் ஆதிரை உருவாக்கியுள்ள இப்படம் டாகுமெண்டரி டைப் ஆகி விடக் கூடாது என்பதற்காகவே அழகிய காதல் கதை ஒன்றை தனக்கே உரிய பாணியில் கோர்த்து கவர்ந்திருக்கிறார்கள்..!

கதை என்னவென்றால் உலகப்போர் நடைபெற்று முடிந்ததும், அதில் வீணாண குண்டுகள், அல்லது வெடிக்காத குண்டுகளை சில சுயநல ஆசாமிகள் கடலில் தூக்கியெறிகிறார்கள். அதில் ஒரு பெரிய குண்டு நம்ம சிங்கார சென்னை கடற்கரையில் ஒதுங்கி அப்படி, இப்படி உருண்டு போய் ஒரு காயலான் கடையில் ஐக்கியமாகிறது. அந்த காயலான் கடையில்தான் மாயவன் என்ற பெயர் கொண்ட லாரியின் டிரைவராக வாழ்க்கையை ஓட்டி வருகிறார் நாயகன் தினேஷ். அப்படியாப்பட்ட  தினேஷுக்கும் டீச்சரான (நாயகி) ஆனந்திக்கும் லவ். ஆனால் இவர்களின் காதலுக்கு, (வயக்கம் போல் ஜாதியின் பெயரால்) கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆனந்தியை அவர் குடும்பம் ஆணவக் கொலைச் செய்யக் கூட துணிகிறது.

அதே சமயம் இப்படி ஒரு குண்டு சென்னையில் கிடைத்திருக்கிறது என்பதை மோப்பம் பிடித்து அதன் விளைவுகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த உயிரையும் துச்சமாக மதித்து போராடி வருகிறார் சமூக போராளி ரித்விகா. அந்த குண்டாகப்பட்டது ஹீரோ தினேஷ் கையில் சிக்கி, முக்கியான பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை..

ஹீரோ தினேஷ் மற்றும் ஹீரோயின் கயல் ஆனந்தி கெமிஸ்ட்ரி அபாரம். இருவருமே தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக தினேஷ் மூலம் காயலான் கடையில் கூலிகளாக இருக்கும் ஜீவன்களின் வாழ்க்கை நிலைமையை ஓரளவு சொல்ல முயன்றிருக்கிறார் கள் . முனிஸ்காந்த் தொடங்கி போலீஸாக வரும் லிஜிஸ், சமூக போராளியாக வரும் பத்திரிகை யாளர் ரித்விகா, சரண்யா, ஜான் விஜய், ரமேஷ் திலக், மாரிமுத்து என அனைவரும் பாஸ் மார்க் வாங்குகிறார்கள்

டென்மா இசையும், கிஷோர் குமாரின் ஒளிப்பதிவும் புது இயக்குநருக்கு கைக் கொடுத்துள்ளது. ஆனால் எடுத்துக் கொண்ட முதல் படத்துலேயே பேரழிவைத் தரும் குண்டு & காதல் என இரண்டை யும் ஒரு முகத்தின் இரு கண்களாக்கி கதையை கொண்டு போன இயக்குநர் பல இடங்களில் நம்பகத்தன்மையை நிரூபிக்க தவறி விட்டார். இரண்டு ஜர்னலிஸ்டுகள் குண்டு போன பாதையைக் கண்டறிவதும், அந்தக் குண்டு க்ளைமாக்சில் படும் பாடு எதுவும் ஒட்டவே இல்லை. அதே சமயம் காகிதக் கொக்கு கதை மூலம் தான் சொல்ல வந்த முழு சமாச்சாரத்தை சொல்வதில் ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம்

மொத்தத்தில் கடைசி வரை வெடிக்காத இந்த குண்டு – வெயிட்தான்

மார்க் 3.5 / 5