August 17, 2022

கருணாநிதி அறிக்கையால் காவல் துறை உயர் அதிகாரிகள் ட்ரான்ஸ்பர்?!

தமிழகத்தில் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனைகளில் சிபிஐ தலையிட்டு விசாரணை கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கரூரில் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் அன்புநாதன், எதையும் ‘திரி’க்கும் அதிகாரியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.திரிபாதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன்தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவின் கூடுதல் டிஜிபியான ஜெ.கே.திரிபாதி மாற்றப்பட்டு, சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று நண்பகல் இந்த மாற்றல் அறிவிப்பு வெளியாகுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால்தான் திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
karuna may 1
அந்த அறிக்கையில், ”தேர்தலையொட்டி பணப் பட்டுவாடாவை தடுக்க கரூரில், அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் என்பவர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையின் போது, ரூ.10.30 லட்சம் ரொக்கம், ஒரு கார், ஆம்புலன்ஸ் வாகனம், ஒரு டிராக்டர், ஒரு கார், 12 பணம் எண்ணும் மெஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், அன்புநாதனின் வீட்டிலிருந்து ரூ.250 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்திகள் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும், அன்புநாதன் யார், அவருக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியெல்லாம் முதல்வர் வாய் திறக்கவேயில்லை.

அன்புநாதன் சில முக்கிய அமைச்சர்களின் பினாமி என்றும் அந்த அமைச்சர்கள் அன்புநாதனின் இல்லத்துக்கு வந்து சென்றதால் தான் அவர் வீட்டு கேமராவை கைப்பற்ற முயற்சிகள் நடந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. ஊரின் பெயரை தனது பெயருக்கு முன்னே வைத்துள்ள அமைச்சர் ஹாங்காங் அருகே தீவு ஒன்றை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தால் இந்த உண்மைகள் வெளியே வரும் என்கிறார்கள். நடிகைகள் பற்றி பக்கம் பக்கமாக வந்த செய்திகள் குறித்தும் பதில் ஏதும் வரவில்லை. இந்த செய்திகள் குறித்து முதல்வரும், அமைச்சர்களும் மறுப்பு தெரிவிக்காததால் இவை அனைத்தும் உண்மை என்றே கொள்ளப்பட வேண்டும்.

இதே போல் அமைச்சர் வைத்திலிங்கத்தின் நண்பர் ஒருவரின் சென்னை வீட்டில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி கைப்பற்றப்பட்ட தாகவும் சொல்லப்படுகிறது. தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத்தில் முக்கிய பொறுப்பில் அவர் உள்ளது உண்மையா பொய்யா? தற்போது தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் மொத்தம் ரூ.133 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தொகை ரூ.68 கோடி.

கிருஷ்ணராயபுரத்தில் அதிமுக வேட்பாளரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சத்தை அவரிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது. கோவையில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் சிக்கிய விஷயங்கள் பற்றி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் கார்த்திக் என்பவரின் நிதி நிறுவனத்திலிருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினரும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் நண்பருமான டாக்டர் மகேந்திரனின் பண்ணை இல்லத்தில் 2 சூட்கேஸுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.எனவே, தான் அன்புநாதன் பிரச்சினையிலேயே சிபிஐ விசாரணை வேண்டுமென்று கூறியிருந்தேன். எனவே, தேர்தலையொட்டி இவ்வளவு நாட்களாக தமிழகத்தில் நடந்த சோதனைகளில் சிபிஐ தலையிட்டு விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காவல் துறையினரின் பார்வையிலிருந்தும், வருமானவரித் துறையினரின் பார்வையிலிருந்தும் அன்புநாதன் தற்போது மாயமாகியுள்ளார். இதற்கு காரணமான புனிதர்கள் யார்? மூத்த அதிகாரிகள் துணையின்றி, அமைச்சர்களின் உதவியின்றி அவரால் எப்படி தப்பிக்க முடியும். இந்த பிரச்சினைப் பற்றி காவல்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் பதில் சொல்லாதது ஏன்? இவ்வளவு மோசமான ஆட்சியாளர்களை தமிழக மக்கள் மீண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்த்தாமல், இந்த மோசடிகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் பிரதமர் மோடி, இனியும் மெளனம் சாதிப்பதா என் நாட்டு மக்கள் கருதுகின்றனர்” என்று கருணாநிதி கூறியுள்ளார்