ஐபிஎல் ஃபைனல் சென்னையில் இருந்து ஹைதராபாத்-துக்கு மாற்றம்!

 

நம்ம தோனியால் மட்டுமே இண்டர்நேஷனல அளவில் பிரபலமான ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி (ஃபைனல்) ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் ப்ளே ஆஃப் சுற்றுகள், சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் 17 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன அதனை யடுத்து முதல் நான்கு இடங்கள் பெற்ற அணிகள் குவாலிஃபயருக்கு தகுதி பெறும். முதலாம் இரண்டாம் இடம் பெற்ற அணிகள் மோதும் குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். 3ஆம், 4ஆம் இடம் பெற்ற அணிகளுக்கு இடையி லான குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிஃபயரில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் இந்த நிலையில் முதலாம் குவாலிஃபயர் போட்டி சென்னையிலும், இரண்டாம் குவாலிஃபயர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் என்றும், இறுதி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருக்கும்  I, J, K ஆகிய கேலரிகள் திறக்கப் பட்டால் மட்டுமே அங்கு இறுதிப்போட்டி நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த கேலரிகள் திறக்கப்படாமல் இருந்தால், இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வருவாய் குறைந்து விடும் என்பதற்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், கேலரி விவகாரத்தில் இதுநாள்வரை முடிவு எட்டப்படவில்லையென தெரிகிறது. இதையடுத்து, ஐபிஎல் இறுதிப் போட்டி, ஹைதராபாத்தில் நடைபெறும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது