August 14, 2022

ஐபிஎல் டிக்கெட் விற்பனை – எப்போ? எவ்வளவு? & ஆன்லைன் லிங்க்!

விளையாட்டு பிரியர்கள் ஒவ்வொருவரும் ஆவலோடு எதிபார்த்த 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வந்திருப்பதே இத்தொடருக்கு தனி அந்தஸ்தை கொடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட சில வீரர்களைத் தவிர பெரும்பலானோர் புதிய வீரர்களாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி, சொந்த மண்ணில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி, ஏப்ரல் 10-ம் தேதி இரவு 8 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சந்திக்கிறது.

இந்நிலையில் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை 2-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளைக் காண குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது சி,டி,இ, தளத்துக்கு இந்த விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பின் முதல் வகுப்புக்கான டிக்கெட் ரூ.5 ஆயிரம், மற்றும் ரூ.6 ஆயிரமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும்.

டிக்கெட்டுகளை கவுன்ட்டரில் வந்து நேரடியாக வாங்கும் நபர் ஒருவருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகளை இணையதளம் வாயிலாகவும், கவுண்ட்டர் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் பெறுவதற்கு chennaisuperkings.com மற்றும் bookmyshow.com ல் பதிவு செய்யலாம்.

.