August 12, 2022

ஐ பி எல்-லில் 3 கோடிக்கு ஏலம் போன நடராஜன் -மினி பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. உடன்பிறந்தவர்கள் 4 பேர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை சேலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலி. தாயார் நடைபாதையில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்பவர். நடராஜன் தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடினார். அதன் பிறகே தீவிர கிரிக்கெட்டுக்கு மாறினார். சென்னைக்கு இடம் பெயர்ந்து டிவிசன் அளவிலான போட்டிகளில் விளையாடி முன்னேறினார்.அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டியாகும். கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக களம் இறங்கினார்.

nataraja feb 22

அது தான் நடராஜனை வெகுவாக அடையாளம் காட்டியது. அவரது பந்து வீச்சை, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சு போன்று இருப்பதாக வர்ணிக்கப்பட்டது. அது மட்டுமின்றி தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிரான சூப்பர் ஓவரில் 6 பந்துகளையும் துல்லியமாக யார்க்கராக போட்டு கலங்கடித்தார். இறுதிகட்டத்தில் நேர்த்தியாக பந்து வீசும் பாங்கு, ஐ.பி.எல். அணி நிர்வாகிகளை கவர்ந்தது. அதன் தாக்கம், இன்று அவரை கோடீசுவரர் ஆக்கி இருக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

டி.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ”இது கனவா அல்லது நனவா என தெரியவில்லை. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவேன். அதன்மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை.  நான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால், தினக்கூலிக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றபோது கடுமையான நெருக்கடியில் இருந்தேன். ஆனால் அஸ்வின், முளி விஜய், தமிழ்நாடு பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டினர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டது. அடுத்ததாக ஐபிஎல் போட்டியில் மிகப்பெரிய வீரர்களை சந்திக்கவும், அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்.ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன்தான் எனது முன்மாதிரி. ஐபிஎல் போட்டியின்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்” என்றார்.

10-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கும் நடராஜனின் தாயார் சாந்தா செய்தியாளர்களிடம் கூறியது: நாங்கள் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நேரத்துக்கு சாப்பாடுகூட எனது மகனுக்கு கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட சூழலிலும் நடராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்ததால், கிரிக்கெட் மட்டை வாங்கிக் கொடுத்தோம். அவரும் சிறப்பாக விளையாடினார். அதன்மூலம் இப்போது பஞ்சாப் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எனது மகன் மேலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று ஆனந்தக் கண்ணீருடன் தெரிவித்தார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்காக ஆடிய முருகன் அஸ்வின், திருவள்ளூர் வீரன்சுக்காக ஆடிய சஞ்சய் யாதவ் முறையே ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.