November 28, 2021

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மகிழ்ச்சி!

ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, குஜராத் வீரர் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் அதிகபட்சமாக தலா 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்‍கப்பட்டனர்.

12-வது ஐ.பி.எல். தொடரை முன்னிட்டு, அதற்கான வீரர்கள் ஏலம் எடுக்‍கும் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. 351 வீரர்கள் ஏல நிகழ்ச்சியில் போட்டியிட்ட நிலையில், அதிகபட்சமாக தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியை 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியும், அதே தொகைக்கு குஜராத் வீரர் ஜெயதேவ் உனத்கட்டை, ராஜஸ்தான் அணியும் ஏலம் எடுத்தன.

புதுமுக வீரரான ஹனுமா விகாரியை, 2 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. மேற் கிந்திய தீவு அணி வீரர்களான ஷிம்ரான் ஹெட்மெயரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணியும், பிராத் வெயிட்டை 5 கோடி ரூபாய்க்‍கும் கொல்கத்தா அணியும், நிக்கோலஸ் பூரணை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் ஏலம் எடுத்தன.

இந்திய வீரர் மோகித் சர்மா 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார். அக்சர் படேலை 5 கோடி ரூபாய்க்‍கு டெல்லி அணியும், முகமது சமியை 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியும், 25 வயதே நிரம்பிய இளம் வீரர் சிவம் துபேவை 5 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு அணியும் ஏலம் எடுத்தன.

இந்திய அணியின் யுவராஜ் சிங்கை, அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்‍கெட் ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தி, 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையில் இருந்து 42 மடங்கு அதிகரித்த நிலையில், 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி கூறுகையில், 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி தன்னை ஏலம் எடுத்தது நினைத்துக்‍கூட பார்க்கவில்லை என்றும், அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கே ஏலம் போவேன் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.