கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியானது!

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியானது!

விளையாட்டு ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 26-ந் தேதி சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர். மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது. கடைசி லீக் போட்டி மே மாதம் 22-ந் தேதி ஹைதராபாத் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளேஆப் போட்டிகள் மற்றும் மே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 ஐ.பி.எல் தொடர்களில் சென்னை அணியும், மும்பை அணியும் அதிக முறை கோப்பையை வென்று வலுவான அணிகளாக உள்ளன. சென்னை அணியைப் பொறுத்தவரை ஐ.பி.எல் தொடங்கப்பட்ட முதலிலிருந்து தற்போதுவரை தோனி கேப்டனாக இருந்துவருகிறார். மும்பை அணியைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா தலைமையில் வலுவான அணியாக இருந்துவருகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற மெகாஏலத்தில் அணி வீரர்கள் முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர். எனவே, இந்த முறை அனைத்து அணிகளும் புது அணி போலத்தான் விளையாடக் கூடிய சூழல் உள்ளது. இதுவரையில், 8 அணிகளுடன் நடைபெற்ற ஐ.பி.எல், இந்த முறை 10 அணிகளுடன் களமிறங்குகிறது. மேலும் இம்முறை ஐ.பி.எல் தொடருக்கு டாடா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது.

65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 22ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

error: Content is protected !!