ஐ.பி. எல். பிளே ஆஃப் & ஃபைனல் போட்டி சென்னையில் நடத்த அனுமதியில்லை?

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவில்  சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாததால் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் இருந்து மாற்றப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 12-வது சீசன் போட்டிகள் கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இம்முறை போட்டி அட்டவணையை இரு கட்டங்களாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதிலும் லீக் ஆட்டங்களுக்கான அட்டவணையே முழுமையாக வெளியாகி இருந்தது.

பிளே ஆஃப் சுற்றில் 3 ஆட்டங்கள், இறுதிப்போட்டி ஆகியவற்றுக்கான தேதி, போட்டி நடைபெறும் இடங்கள் எது என்பது அறிவிக்கப் படவில்லை. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12-ம் தேதி நடைபெறக் கூடும் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் 38 ஆயிரம் பேர்  அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கக்கூடிய சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 வருடங்களாக ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகளுக்கு அனுமதி வழங்கப் படாமல் உள்ளது. இதனால் சுமார் 12 ஆயிரம்இருக்கைகள் காட்சிப் பொருளாகவே உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது இந்த 3 கேலரிகளையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புதுப்பித்தது.

ஆனால் இதற்கு தங்களிடம் முறைப்படி அனுமதி பெறவில்லையென சென்னை பெருநகரவளர்ச்சிக் குழுமம் குற்றம் சாட்டியது. இது ஒருபுறம் இருக்க சென்னை மாநகராட்சிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே மைதான குத்தகை தொடர்பாக பிரச்சினை எழுந்தது. இவற்றுக்கு இதுவரை தீர்வு காணப்படாததால் சேப்பாக்கத்தில் உள்ள 3 கேலரிகளையும் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் ஐபிஎல் டி 20 தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் சமயங்களில் ரசிகர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை உள்ளது.

இதற்கிடையே தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு உள்ளது. அனுமதி வழங்கப்படாத  3 கேலரிகளையும் தவிர்த்து மீதம்உள்ள 26 ஆயிரம் இருக்கைகளும் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்கள் கிடைக்காமல் போட்டி ஆரம்பித்த பிறகும் கூடமைதானத்துக்கு வெளியே ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் 3 கேலரிகளின் பிரச்சினை யால் ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் சென்னையில் இருந்து மாற்றப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் நேற்று பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் நிர்வாகக்குழு மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியை நடத்துவதற்கு மாற்று இடமாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தையும், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களை நடத்துவதற்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தை மாற்று இடமாகவும் தேர்வு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் நாங்கள் ஆலோசனை நடத்துவோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் அவர்கள் சொந்த மைதானத்தில் விளையாடும் உரிமையை நாங்கள் பறிக்க விரும்பவில்லை. ஆனால் காலியாக உள்ள 3 கேலரிகள் தான் பிரச்சினை யாக உள்ளது. இதற்கு தீர்வு காண ஒருவார கால அவகாசம் வழங்கியுள்ளோம்.

அதற்குள் அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து சான்றிதழ் பெறாவிட்டால் இறுதிப் போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்படும். மேலும் பிளே ஆஃப் சுற்றின் 3 ஆட்டங்களும் பெங்களூருவில் நடத்தப்படும். 2018-ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி 2-வது இடத்தை பிடித்திருந்ததன் அடிப்படையில் இறுதிப் போட்டியை நடத்தும் உரிமையை பெறுவார்கள்” என்றார்.