கார்த்தி சிதம்பரம் கைது! வழக்கின் பின்னணி என்ன?

கார்த்தி சிதம்பரம் கைது! வழக்கின் பின்னணி என்ன?

என்எக்ஸ் மீடியா செய்த மோசடி பண பரிவர்த்தனையில் உடந்தையாக செயல்பட்டதானப் புகாரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே கைது செய்து சி.பி.ஐ அதிகாரிகள் அழைத்துச் செய்தனர்.

வழக்கின் பின்னணி:

கடந்த 2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.307 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற அந்நிய முதலீட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்று தந்துள்ளார். இதில் மிகப் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது.

என்எக்ஸ் மீடியா:

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் தான் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றது. இவர்களுக்கு தான் தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி உதவி செய்ததாக குற்றச்சாட்டு. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர்.

சிபிஐ வழக்கு:

இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. கார்த்தியின் ஆடிட்டர் கைது; இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு கார்த்தியின் ஆடிட்டரும் நெருங்கிய நண்பருமான எஸ்.பாஸ்கர ராமனை கருப்புப் பண முறைகேடு தொடர்பாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில் கார்த்தியின் கைது நடந்துள்ளது.

ஆடிட்டர் வாக்குமூலம்:

கைதான கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது நடந்ததாக சிபிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு என்பது தன்மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல் என்று கடந்த வாரம் தான் சுப்ரீம் கோர்டில் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் கைது நடந்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை எனப் பலரும் விமர்சித்துவருகின்றனர். இதனிடையே, கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் இன்று அளித்த பேட்டியில், “ இது எதிர்பார்த்த ஒன்றுதான். அவர் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் பாஜக அரசைக் குறை கூற முடியாது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ப.சிதம்பரம். அவர் கையெழுத்து போட்டி பின்னர்தான் இவை அனைத்தும் நடந்துள்ளன. எனவே, சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!