December 2, 2021

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் 30ந் தேதி வரை நீட்டிப்பு!

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த புதியபத்திரத்தில் கிரீஸ், மலேசியா, பிரிட்டீஷ் வெர்ஜின் ஐலேண்டு, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரியா உள்பட 12 வெளிநாடுகளில் ப.சிதம்பரம் மற்றும் இந்த வழக்கில் தொடர்பு உடையவர்களுக்கு சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் பசிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30ந் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் படி, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைந்தது.இதையடுத்து அவர் இன்று மாலை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதேவேளையில் ப.சிதம்பரம் தரப்பில் சிபிஐ காவலை நீட்டிக்கக்கூடாது என்று முறையிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதனால் சிபிஐ அதிகாரிகள் மேலும் நான்கு நாட்கள் தொடர்ந்து ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவார்கள்.