September 24, 2021

கண்டு பிடிப்பாளர் தினம்!

எதுக்காக இந்த தினம்? என்று தெரிந்து கொள்ள கீழேயுள்ள கொஞ்சூண்டு நீளமான பதிவை பொறுமையா படிச்சுப் பாருங்க.. இந்நாளின் மகிமையை புரிவதுடன் நீங்களும் கண்டுப்பிடிப்பாளராகி விடுவீங்க!

inventor day feb 11

வாழ்க்கையில் முயற்சி, நம்பிக்கை, குறிக்கோள் இந்த மூன்று வார்த்தைகளில் உள்ள முக்கியத்துவத்தை பற்றி கொஞ்சம் அலசிப்பார்போம். நாம் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வார்த்தைகளை நம் வாத்தியார் / பெற்றோர் / உற்றார் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் எத்தனை பேர் கடைபிடித்தோம்? எத்தனை பேர் இவர்களுக்கு வேற எந்த வேலையும் கிடையாது என்று ஏளனம் பேசியிருப்போம் என்று நம் மனசாட்சியை கேட்டால் புரியும். ஆனாலும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இதை நிச்சயம் உணர்ந்து இருப்போம்.

குறிக்கோள்

இது ரொம்ப கஷ்டம், ஆனால் முதல் தடைவை மட்டும்தான். கூகிள் குதிரையில் ஒரு வார்த்தையை தட்டிவிட்டால் அது வேறு எதையும் தேடாது அந்த வார்த்தைகள் உள்ள இடங்களை மட்டும் அள்ளி கொண்டு வந்து தரும் அதுதான் கூகிளின் வெற்றி. அது மாதிரிதான் நம் குறிக்கோளும் இருக்க வேண்டும். நம் அடைய முடிய குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொண்டு (புர்ஜ் கலிஃபாவில் ஃபளாட் வாங்குவது என்பது நல்ல குறிகோள்தான். ஆனால் நிறைவேற்றுவது சிரமம்) அதை நோக்கி பயணிப்பது. வெற்றி என்ற பறவைக்கு வலை விரித்து விட்டோம் என்றுதான் பொருள்.

நம்மவர்கள் சில பேர் குறிக்கோள் இல்லாமல் மெயின் ரோட்டில் போய் சாமான் வாங்கலாம் என்று கிளம்பி, கடைத்தெருவுக்கு சென்று பின்னர் பட்டுக்கோட்டைக்கே சென்று பஸ் செலவை தெண்டத்துக்கு செலவு செய்துவிட்டு வருவார்கள் + போனஸாக உடம்பு வலியையும் அலைச்சலையும் சேர்த்து வாங்கி வருவார்கள். அந்த சாமான் நம்மூரில் கிடைக்கும் அதே விலைக்கு என்பது வேறு விசயம், இவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள் ஆனால் குறிக்கோள் இல்லா முயற்சி.

நம்பிக்கை

நம்பிக்கை என்பது தும்பிக்கை போல் வலுவாக இருக்க வேண்டும். நான் யாருக்கும் சளைத்தவனல்ல, அடுத்தவர் செய்யக்கூடியதை உருவாக்க கூடியதை நாமும் செய்ய முடியும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை என்றவுடன் எதோ குருட்டுதனமாக வைப்பது அல்ல. நம்மூரில் ”பூனை நபுசு” என்பார்கள் அந்த மாதிரி எண்ணங்களெல்லாம் வெற்றிக்கு உதவாது, அது வாழ்வை வெறுமையாக்கி விடும். சில பேர் கழிவறைக்கு போய்விட்டு வந்து அந்த கையை விரல் ரேகைகலெல்லாம் போகும் அளவிற்கு தேய்த்து தேய்த்து கழுவி கடைசிலேயும் அது இன்னு சுத்தமாகல என்ற அவ நம்பிக்கையுடன் போய்விடுவார்கள். இவர்களை “ஒசுவாசு” என்றும் அழைப்பதுண்டு, இந்த மாதிரி நம்பிகையற்ற ஆள்கள் ஜொலித்தாக எந்த நாட்டுல உள்ள டேட்டா பேஸ்லையும் இல்லை, கூகில் தேடலில் பார்த்தாலும் கிடைப்பது இல்லை.

வீட்டை பூட்டிவிட்டு “பூட்டிடுச்சா பூட்டிடுச்சா “ என்று தன்மேல் இல்லாவிட்டாலும் பூட்டு மேலயாவது நம்பிக்கை வைக்காமல் போன எத்தனையோ பூட்டான்களை (அதாங்க பூட்டை இழுத்து இழுத்து உடைத்த ஆட்கள்) நாம் பார்த்திருக்கிறோம்.

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கை என்ற இயக்கியை (processor) கொண்டே ஒடிகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு செயலையும் செய்யும் போது தூய எண்ணத்துடன், முடிந்த அளவு நேர்த்தியாக செய்து விட்டு “ நம்பிக்கையுடன் அமருங்கள் வெற்றி உங்களை எட்டி பார்க்கும். நமது மார்க்கமே நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான்.

முயற்சி

ஒரு முயற்சி செய்து அதன் மேல் நம்பிக்கை வைத்து (இறை நம்பிக்கையுடன் தான், அவனின்றி அணுவும் அசையாது), அடையக்கூடிய குறிக்கோளுடன் (அனில் அம்பானி போல வர வேண்டும் என்பது டூ மச் ) உழைத்தால் “வெற்றி” படுக்கை விரித்து போட்டு நாம் பக்கத்திலேயே படுத்துக்கொள்ளும்.

ஒரு மார்க்க சிறப்பு மிக்க ஊரில் ஒரு நல்ல முஸ்லிம் இருந்தார். அவர் எப்பொழுதும் இறைவன் தருவான்.. இறைவன் தருவான்… என்று சொல்லி கொண்டே இருப்பார். அவரிடம் சிலர் வந்து முயற்சி செய்யாமல் இப்படியே சொல்லிக்கொண்டு இருக்கீங்களே… இதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டனர், ஒத்துக்கொண்ட அவரும் “நாளை நமதூர் பள்ளியில் ஒரு விசேசத்திற்காக சோறு ஆக்கி அனைவருக்கும் குடுப்பாங்க, நான் பள்ளிக்கு எதிரில் சும்மா உட்கார்ந்து இருப்பேன், அவர்கள் என் அருகில் வந்து உணவை தருவார்கள்“ என்றார். அந்த சிலரும் அதை ஏற்றுக்கொண்டு இடத்தை விட்டு அகன்றார்கள்…

மறுநாள் உணவு சமைக்கப்பட்டு அங்கு குவிந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் வந்து வாங்கி சென்றனர். இவரை கவனித்தார்கள் ஆனால் கொடுக்கவில்லை, உணவெல்லாம் முடிந்து விட்டது.

அப்போது அந்த நல்ல முஸ்லீம், அருகில் சென்ற உணவு பரிமாறிய ஒருவரிடம் கேட்டார். “நான் பள்ளிக்கு எதிரில்தானே அமர்ந்து இருந்தேன் ஏன் எனக்கு உணவு தரவில்லை “ என்று

அதற்கு உணவு பரிமாரியவர் “ஓ !!! அப்படியா நீங்க மற்றவர்கள் போல வந்து உணவை வாங்கவில்லையே, நீங்க நோன்பு வச்சிருக்கீங்கலோ என்று எண்ணி எதுக்கு இந்த உணவை கொடுத்து பாவத்தை விலைக்கு வாங்கணும் என்று இருந்தோம்“ என்று பதில் அளித்தார்.

நம்பிக்கை வைத்திருந்த அந்த மனுசன் முயற்சி செய்யவில்லை. முயற்சி செய்வதற்கு முயலாவிட்டால் என்றும் எதுவும் கிடைக்காது, இறைவனும் உதவ மாட்டான். நமக்கு உறுப்புக்களை இறைவன் கொடுத்ததே முயற்சி எடுத்து முன்னேறத்தானே.

கண்டுப்பிடிப்பாளர்கள் முயற்சி செய்திருக்காவிட்டால் இன்று நாம் பயன்படுத்தும் எந்த பொருளும் நம்மிடம் வந்து இருக்காது. நம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு முயற்சியிலேயும் நாம் வெற்றி பெற்று இருக்க முடியாது. குறிக்கோளுடன் நம்பிக்கை வைத்து, முயற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வை ஊட்ட வேண்டுமென்பதால் உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாளான இந்த பி. 11- ஐ கண்டு பிடிப்பாளர்கள் தினமாக  அமெரிக்கா கொண்டாடி வருகிறது