June 23, 2021

பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்கள்: மத்திய அமைச்சர் தகவல்!

நடப்பாண்டான 2018-ம் ஆண்டை ‘தேசிய சிறுதானியங்கள் ஆண்டு’ என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஓட்டல்களில் மட்டுமின்றி வீடுகளிலும் ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் நுழைந்து விட்ட நிலையில். எக்கச்சக்கமான நோய்களுக்கு இதுவே ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மறுபடியும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். பெரும்பாலான தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர். கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள், கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் போன்றவை ஏற்படுவதில்லை. கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்தகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும், உடல் வெப்ப நிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும்,

இதையடுத்து பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு போன்ற சிறு தானியங்களையும் சேர்க்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்பிறகு, அக்டோபர் மாதம் நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ்சந்த் தலைமையில் மத்திய வேளாண் துறைக்கான ஆலோசனைக் குழுவினர் கூட்டம் நடத்தி பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர். அந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், சத்துள்ள தானியங்களை வழங்க வேளாண் துறை அமைச்சகம் முடிவு செய்தது. சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வறட்சிப் பகுதிகளிலும், பருவநிலை மாற்றங்களையும் தாக்குப் பிடித்து வளரக் கூடியவை. குறைந்த தண்ணீரே தேவைப்படும்.


இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், “குறைந்தபட்ச ஆதார விலையில் சிறுதானியங்களை கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தில் வழங்க பிரதமர் மோடி அரசு முடிவு செய்தது. அதற்காக சிறுதானிய உற்பத்தியில் வேளாண் துறை அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி புதிய திட்டங்களை தொடங்கி உள்ளது.

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம் முன்னிலையில் உள்ளது. தவிர ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் பயிரிடப்படுகின்றன. சிறுதானியங்களை குறைந்த விலையில் ஏழைகளுக்கு, மதிய உணவு திட்டத்தில் வழங்குவதன் மூலம், மக்களின் உடல்நலம் மேம்படும். அத்துடன் சிறு விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும்”இவ்வாறு அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார்.

முன்னதாக 2018-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டாட ஐநாவுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறுதானியங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டாடினால் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும் என்று மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.