March 22, 2023

டெல்லியில் கூடுகிறது – இன்டர்போல் பொதுச்சபைக் கூட்டம்!

உலக போலீஸ்களின் ஒருங்கிணைப்பு டீமான இன்டர்போல் என்பது சர்வதேச குற்ற நடவடிக்கை களை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக காவல்துறை அமைப்பு ஆகும். இதுஅன்றிருந்த ஐரோப்பியர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். அந்தக் காலத்தில் பல நாடுகள் கூட இருந்ததில்லை. பெரும்பாலானவை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட காலனித்துவ நாடுகளாகும். எனினும் காலப் போக்கில் பல நாடுகளுக்கு எல்லைகள் வகுக்கப் பட்டன. புதிய நாடுகள் உருவாகின. ஒவ்வொரு நாட்டிற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் அந்தந்த தேச எல்லையுடன் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் குற்றங்கள் என்பது தேச எல்லையுடன் முடிவடைவதல்ல. குற்றவாளிகள் எல்லைக் கடந்து செல்லும் போது எந்த நாட்டிலும் பிடிக்க வகை செய்கிறது. எனவே பல நாடுகளின் ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை நாடு கடத்தும் தன் சட்ட வளையங்களுக்கு கொண்டு வரும் வகையில் இன்டர்போல் என்ற அமைப்பு திறம்படச் செயல்பட்டு வருகிறது. இது உலக நாடுகளை உறுப்பினர் களாக கொண்டுள்ளது. சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலில் 194 நாடுகள் உறுப்பினர் களாக உள்ளனர். இவ்வமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான்ஸில் அமைந்துள்ளது.  இந்நிலையில் இன்டர்போல் பொதுச்சபையில் 91ம் கூட்டத்தை 2022ம் ஆண்டு டெல்லியில் இந்தியா நடத்துகிறது என்று சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் நிதின் வாகன்கர் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்டர்போலின் தலைமைச் செயலாளார் ஜெர்கன் ஸ்டோக், கடந்த ஆகஸ்டில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது 2022ம் ஆண்டு, டெல்லியில் இண்டர்போல் கூட்டத்தை நடத்தலாம் என்ற திட்டத்தை அமித்ஷா கூறினார். இண்டர்போலின் சர்வதேச அகடமியின், பிராந்திய மையமாக இந்தியா இருக்க வேண்டும் எனவும், இதற்காக உதவி மற்றும் உள்கட்டமைப்பு வசதியை செய்து தர இந்தியா தயாராக உள்ளதாகவும் அமித்ஷா எடுத்துரைத்தார்.

இந்நிலையில், சிலியின் சாண்டியாகோவில் இன்டர்போலின் 88வது பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 91வது கூட்டத்தை இந்தியாவில் நடத்துவதற்கான முன்மொழிவை, சி.பி.ஐ. இயக்குநர் ரிஷி குமார் சுக்லா சமர்ப்பித்தார்.அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இந்தியாவின் முன்மொழிவுக்கு உறுப்பு நாடுகள் பெருவாரியாக ஆதரவளித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து இன்டர்போல் பொதுச்சபையின் 91ம் கூட்டம் 2022ம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.