உலக யோகா தினம் – 21 ஜூன்!

ழங்கால இந்திய மரபின் விலைமதிக்க முடியாத பரிசே யோகாவாகும். மனதிற்கும் உடலுக்கும் இடையில் இயைபை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆன்மீகத் துறை அது. யோகாவின் முக்கியத்துவம் உலக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2014, டிசம்பர் 11-ஆம் தேதி ஐக்கியநாடுகளின் பொதுச் சபை, ஜூன் 21 ஆம் நாளை உலக யோகா தினமாக அறிவித்தது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டு கோளைத் தொடர்ந்தே ஜூன் 21-ஆம் நாளை உலக யோகா தினமாக ஒரு தீர்மானத்தின் மூலம் அங்கீகரித்தது. நோய்த்தடுப்பு, உடல்நல மேம்பாடு, பல வாழ்க்கைமுறைக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் யோகாவின் முக்கியத்துவத்தை பற்றிப் பிரதமர் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர், இந்திய அரசின், வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தால் ஓர் அதிகாரபூர்வமான வலைத்தளம் (mea.gov.in/idy.htm) இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். யுனெஸ்கோவின் யோகா இணையதளத்தை பாரிசில் அவர் தொடங்கி வைத்தார் (www.Idayofyoga.Org). அதை இப்போது அப்டேட் செய்யவில்லை என்பது சோகம்.

சர்வதேசம் முழுக்க சிரிப்பை மறந்து, மறைத்து இறுக்கமான ஒரு சூழலில் உழன்று கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும்கூட நம்மில் பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதிலிருந்து வெளியே வர யோகா நிச்சயம் உதவும்.நமது பிரதமர் மோடி யோகாவின் பலன்கள் பற்றியும் யோகா செய்வதால் கொரோனா நோயாளிகள் வெகுவிரைவில் நலமடைவது பற்றியும் கூறியிருக்கிறார். இன்றைய சூழலில் நமது இந்திய கலாச்சாரத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த யோகா, கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொரோனா வைரஸ் பாதிப்பு, குறிப்பாக சுவாசப் பிரச்னைகளில்தான் பாதிப்பு ஏற்படுத்தும். இதற்கு பிராணா யாமமும் மூச்சுப்பயிற்சியும் சிறப்பான தீர்வளிப்பதுடன் பெரிய அளவில் உடலுக்கும் மனதுக்கும் சக்தி தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. உடல் மனம் இரண்டையும் ஒன்று சேர்ப்பது யோகா.அதாவது ‘இணை’ அல்லது ‘சேர்’ என்று பொருள் தரும் ‘யுஜ்’ என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானதே யோகா என்ற சொல். யோகா, ஒருவரின் உடல், மனம், உணர்வு, ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான கருத்துரு. இதன் அடிப்படையில் யோகா நான்கு பெரும் வகைகளாக பிரிக்கப்படுகிறது: கர்ம யோகாவில் உடலைப் பயன்படுத்துகிறோம்; ஞான யோகாவில் மனதைப் பயன்படுத்துகிறோம்; பக்தி யோகாவில் உணர்வையும் கிரியா யோகாவில் ஆற்றலையும் பயன்படுத்துகிறோம்.

ஞானி பதஞ்சாலி, யோக அறிவியலை குறியீடாக்கி, அதன் எட்டு பிரிவுகளை “அஷ்டாங்க யோகா” என்று அழைத்தார். அவையாவன: யமா, நியமா, ஆசனா, பிரணாயமா, பிரத்யாகரா, தாரணா, தியானா மற்றும் சமாதி. யோகாவின் பொதுவான வடிவம் பல்வேறு ஆசனங்கள் ஆகும். அவை உடலுக்கும் உள்ளத்திற்கும் நிலைத்தன்மையைக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஆசனமும் வெவ்வேறு பலன்களைத் தரும். இந்த ஆசனங்களை அவரவர் திறனுக்குத் தக்கபடி ஒரு யோகா குருவின் வழிகாட்டுதல் படி பயிற்சி செய்ய வேண்டும்.

தடுப்பு மற்றும் ஊக்கும் தன்மைகளால் மட்டுமன்றி, பல்வேறு வாழ்க்கை முறை நோய்களையும் கோளாறுகளையும் கட்டுப்படுத்துவதால் யோகா இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்று வருகிறது. உள்ளம் மற்றும் உணர்ச்சிக் கோளாறுகளைக் கட்டுப்படுத்துவதில் அது மிகவும் உதவிகரமாக உள்ளது. இதனால், இன்று உலகம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக யோகா பயிலப்படுகிறது.

உடல்பருமன், நீரிழிவு, மிகை இரத்த அழுத்தம், மனக்கலக்கம் ஆகிய ஆரோக்கியப் பிரச்சினைகள் பரவலாக இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் யோகா ஒரு முழுமையான சுகாதார நடைமுறையாகும். உடற்தகுதி, தசை-எலும்பு செயல்பாடு, இதய-இரத்தக் குழல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு யோகா நன்மை பயக்கும். நீரிழிவு, சுவாசக் கோளாறுகள், இரத்த அழுத்தம், வாழ்க்கைமுறை குறைபாடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த யோகா உதவுகிறது. மனவழுத்தம், களைப்பு, மனக்கவலை போன்ற கோளாறுகளைக் குறைக்கவும் யோகா துணை புரிகிறது.யோகாவைப் பற்றிய அனைத்து தகவல்களையும் மக்களுக்குப் பரப்ப உலக யோகா தினம் வாய்ப்பளிக்கிறது. உலக யோகா தினத்தைப் பற்றி மேலும் அறிய இந்த யோகா தினம் ஒரு ஊக்கியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை