January 29, 2022

சர்வதேச ஓசோன் தினம்- செப்டம்பர் 16!

புவி மண்டலத்திலிருக்கும் ஓசோன் படலம் தான், நம்மை சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். இது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜ‌ன் அணுக்கள் சேர்ந்தது ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும்.ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பதுதான். ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1 சதவீதம் குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டிஎன்ஏவை நேரிடையாக பாதிக்கும். இதனால் அனைவரும் கடலுக்கு அடியிலோ தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.எனவேதன் இந்த ஓசோச்னை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் செப்.16ம் தேதி “சர்வதேச ஓசோன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஆம்.. இன்று ஒசோனுக்கு பிறந்த நாள் என்றும் சொல்லலாம்.

ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்துதான் இந்த ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.ஆனால் பெரும்பாலும் ஆபத்தையே தரும் இந்த ஓசோன் கதிர்கள் தோல்புற்று நோயை உருவாக்கக்கூடியவை. இதனால் உலகில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பதையும் இவை பயிர்களையும் பாதித்து உணவுச்சங்கிலியை சீர்குலைக்க கூடியவை என்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது.

அது சரி..ஏன் பாதிக்கிறது : 1970களின் தொடக்கத்தில் ஆலந்தை சேர்ந்த பால் குருட்சன், புகை மண்டலங்களால் ஓசோனுக்கு பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள், மித்தைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருட்கள் ஓசோனில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது. இவற்றை அதிகம் வெளியிடும் பொருட்களை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இவற்றால் ஓசோன் படலத்தில் பெரிய துளை விழுந்திருப்பது பின்னர் கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து ஐ.நா., சார்பில் 1987 ஒசோனை பாதுகாக்க “மான்ட்ரியல் வரைவு ஒப்பந்தம்’ தயாரானது. கிட்டத்தட்ட 191 நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நாளையே 1994 ல் சர்வதேச ஓசோன் தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்தது. இதனால் இப்போதெல்லாம் இந்த ஓசோன் துளை பெரிதாவது தவிர்க்கப்பட்டாலும், ஓசோனுக்கு நிகழ்ந்த பாதிப்பு கொஞ்சமும் சரி செய்யப்படவில்லை என்பது சோகம்தான். ஏகத்துக்கு முயற்சி செய்தாலும் ஓசோன் துளை மறைய நீண்ட காலமாகும் என கருதுகின்றனர். அதே சமயம் 2006க்கு பிறகு ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. இதே நிலை நீடித்தால் 2050வது ஆண்டுக்குள்ளாவது ஓசோன் துளை மறைந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அது சரி.. எப்படி பாதுகாப்பது : மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தல்,குளிர் சாதன பெட்டிகளிலிருந்தும், தீயணைப்பு கருவிகளிலிருந்தும் வெளியேறும் குளோரோபுளோரோ கார்பன் வாயு, டூ வீலர்கள்,தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசு அடைதல், சி.எப்.சி., சி.எச்.4 போன்ற வாயுக்கள் வெளியேற்றத்தினால், ஓசோன் படலம் பாதிக்கப்படுக்கப்படுகிறது. இதை முடிந்தளவுக்கு தவிர்ப்பதன் மூலம் ஓசோன் பாதுகாப்பதில் நமது பங்களிப்பை வழங்கலாம!மேலும்அதிகளவில் மரங்களை வளர்த்து, அதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு அளவை குறைக்கலாம். சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லதாக்கும்!..