March 26, 2023

உலக தாய் மொழி தினம் !

நாகரிக மோகத்தினால் இப்பத்திய பள்ளி சிறுவர்கள், பெண்கள், கல்லூரி இளைஞர்கள் என பெரும்பாலானோர்கள் தங்கள் பேச்சு வழக்கில் கூட தாய் மொழியை மறந்து அல்லது தவிர்த்து பீட்டர் இங்கிலீஷ் உள்பட பிற மொழிகளை பயன்படுத்துவதை பார்க்கிறோம். அதே சமயம் வங்க மொழியை காக்க உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் பிப்., 21ல், உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. ஆம், இன்று உலக தாய் மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது போன 1946ல் உருதுமொழியை அலுவல் மொழியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையாக இருந்த வங்காளிகள் வங்க மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர். டாக்கா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தினர். தாய்மொழி காக்க திரண்ட மாணவர்கள் மீது பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போ பாகிஸ்தானின் நடந்த அந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியதையடுத்து உருது மற்றும் வங்காளம் ஆகிய இரு மொழிகளும் அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான் பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானது.

இதனிடையே வங்க மொழி காக்க உயிர் நீத்த மாணவர்களின் நினைவு நாளான, பிப்., 21 உலக தாய்மொழி நாளாக கொண்டாட வேண்டும் என வங்கதேசம் 28 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. சபையில் கோரிக்கை வைத்தது. கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினம் பிப். 21ல் கொண்டாடப்படுகிறது. அதன்படிதான் இன்று உலக தாய் மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி கல்வி என்பது ரொம்ப ரொம்ப அவசியமாகும். ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் தொழில் வளர்ச்சியில் மேலோங்கி இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களின் சொந்த தாய்மொழியில் கல்வி கற்பது மட்டுமே என்று உலக வரலாற்றில் பொன்னொழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக திகழ்கிறது.

ஆனால், பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் நமது நாட்டில், மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின் குறிப்பிட்ட மொழியை சேர்ந்த மாநிலத்தில் வாழும் சிறுபான்மை மொழியினர் பல வகையில் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பது வெறும் வார்த்தையால் மட்டுமே பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் செயல்படுத்துவதில்லை.

உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது. சமீபத்தில் எடுத்துள்ள ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு ஒரு மொழி அழிந்து வருவதாக கண்டறியப் பட்டுள்ளது. நமது நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு மொழி அழிந்தால் அதன் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம் ஆகியவையும் அழிந்துவிடும் என்பதை கவனத்தில் கொண்டு தாய் மொழியான தமிழில் பேசுவோம்.. தமிழில் எழுதுவோமே! .

தாய்மொழி என்பது நமது தாய்க்கு நிகரானது. நம் தாய்மொழியை அழிப்பது, தாய்க்கு செய்யும் துரோகம் என்பதில் சந்தேகமில்லை. தாய் மீது அன்பு செலுத்தவோ அல்லது அவளின் தேவையை சந்திக்கவோ இன்னொருவரின் ஆலோசனை அவசியமில்லை. அதேபோல் தான் தாய்மொழியும், நமது மொழியை காப்பாற்ற வேண்டும். “தாய்மொழியை சுவாசியுங்கள், பிறமொழியை நேசியுங்கள்“ என்று தேசியகவிஞர் குவெம்பு சொல்லியுள்ளதை நூற்றுக்கு நூறு மனத்தில் தாங்கி ஒவ்வொரு மொழியினரும் செயல்பட வேண்டும்.

ஆங்கிலம் உள்பட பிறமொழிகள் மீது நான் பற்றுகொள்வதின் மூலம், சொந்த மொழியை அழித்து வருகிறோம். வர்த்தக ரீதியில் தற்போது ஆங்கிலம் உள்பட பல மொழி கல்வி நிறுவனங்கள் பிராந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழிகளை நீச மொழியாக பாவிப்பதுடன், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவர்கள் சொந்த மொழியில் பேசுவதற்கும் தடை விதித்து வருகிறார்கள். சில பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறுமொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அதன் மூலம் தங்களின் மூல அடையாளத்தை தொலைத்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் உள்பட பிறமொழியில் கல்வி கொடுத்தாலும், வீட்டில் தாய்மொழியை கற்றுகொடுக்க வேண்டும். உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை காக்க உறுதிமொழியை ஏற்போம்.