பன்னாட்டு உலக பழங்குடிகள் நாளின்று!

லகப் பழங்குடிகள் நாளானது, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 1994ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இது, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த வருடத்திலிருந்து தொல்பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது. பழங்குடியினரின் உரிமைகள், தனித்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நிலங்கள் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் இந்த தினமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், சுகுமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள்

உலக மக்கள்தொகையில் 5 சதவிகித்தினர் பழங்குடியினர். ஆனால், மொத்த ஏழைகளில் இவர்கள் 15சதவிகிதம் அளவில் உள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இந்த மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இவர்கள் வாழும் பகுதிகள், வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக பெரும்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்டையாடுதல் குற்றம் என்று சட்டம் இயற்றியதால், காலம்காலமாக வேட்டையாடுதலைத் தொழிலாகச் செய்துவந்த பழங்குடியின மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தங்களது நிலமான வனம் மற்றும் மலைப்பகுதியில் இருந்து அரசுத் துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

மலைப் பகுதிகளில் வன நிலங்களை ஆக்கிரமித்து கனிம நிறுவனங்கள், சொகுசு விடுதிகள் அமைப்பது, அம்மக்கள் மீது பாலியல் வன்முறைகள் பாய்வது, தீவிரவாதிகள் என்ற பெயரில் அடக்குமுறைகள் மேற்கொள்வது என்று பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.

நகரத்திற்குள் வசிப்பவர்களை விட, சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், வன விலங்குகளைப் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிப்பது பழங்குடியினர் தான். ஆனால், அவர்களைக் கொத்தடிமைகளாகவும், சொற்பப் பணத்துக்கு உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் பணியாட்களாகவும் பயன்படுத்தி வருகிறது இப்போதைய சமூகம். உலகம் முழுக்க, இந்த நிலையே தொடர்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியன், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக் குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுகர் என்று 36 வகையான பழங்குடியின மக்கள் இங்கு வாழ்கின்றனர்.