January 31, 2023

உலக மகிழ்ச்சி நாள் இன்று !!

னித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் என்னென்ன இருக்க வேண்டும் என்ற ஒரு நீண்ட பட்டியலே நம்மிடம் உண்டு. பொதுவாகவே பணம் இருந்தால் அனைத்துப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அரச வாழ்வு வாழ்ந்த புத்தருக்கும் அந்த வாழ்வு மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரியவில்லை. அனைத்தையும் துறந்து விட்டுதான் வாழ்க்கையின் காரணம் அறிய விரும்பி ஞானத்தைத் தேடி அலைந்து, உடலை வருத்தித் தவம் இருந்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயன்றார்.!

ஆக,,மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்குக் கொண்டு வருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. ஆந்தை ரிப்போர்ட்டரில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் சிறப்பு என்று இக்குரூப் நண்பர்கள் சொல்வதே மகிழ்ச்சி என்று நாம் நினைப்போம்.. ஆக மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.

நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான். மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக் கூடியதாகும். ஆனால் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணியக்கூடாது. மகிழ்ச்சி என்றால் என்ன? எதெல்லாம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்பதை உலக மகிழ்ச்சி தினமான இன்று (மார்ச் 20) தெரிந்து கொள்வோமா?

விருதுகள், சாதனைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவைதான். ஆனால் அவை தற்காலிகமானது. ஒருபோதும் முடிவடையாத கடின உழைப்புதான் நிரந்தர மகிழ்ச்சியைத் தந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு கடினமாக உழைத்து, மகிழ்ச்சியுடன் வாழுங்கள். துயரத்தில் இழந்த நாள் என்றும் முழுமையானதல்ல. உழைக்காத நாளும் முழுமையான நாளல்ல.நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்று உணரத் தொடங்கினால் எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான். தேனடையில் தேனீ சேர்த்து வைத்திருக்கும் தேனைத் தன் கரங்களால் பிழிந்தெடுக்க முடிந்த மனிதனால் எவ்வாறு மலர்களுக்கு வலிக்காமல் தேனைச் சேகரிப்பது என்ற ரகசியத்தை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை. சந்தோஷம் என்றும் வெளியில் இல்லை. அது உள்ளுக்குள் உள்ளது, உணர்வாய் தெரிவது.

பிறந்தகுழந்தையின் பிஞ்சுப்பாதம், இளங்காலைப் பொழுதின் இனிய தென்றல், ஆலம் விழுது களில் ஆடிய ஆட்டம், கால்நுனி நனைக்கும் கடலலை நுரை. பேருந்துப் பயணத்தில் வழியும் இசை. தேடிவந்து காது நிறைக்கும் நண்பர்களின் இனிய பேச்சு, பதறிச் செய்யாத நல்ல காரியம், நதிப்புனல் குளியல் என எல்லாம் இன்பமயம், ஏன் துன்ப பயம்?நம்மை வேறுயாரும் ஊக்கப் படுத்தாவிட்டால் பரவாயில்லை, நம்மை நாமே நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வோம்.

மகிழ்ச்சியின் திசைநோக்கி நம்மைத் திருப்பிக்கொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா? என்று கேட்டுக்கொள்வோம், அப்படிக்கேட்கமுடிந்ததால்தான் பாரதியால் தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்று பாடமுடிந்தது.

உலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை, கடினமான வாழ்க்கைக்கு இடையே எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் நல்லதையே தேடுகிறேன். நல்லதையே தேர்வு செய்கிறேன். இங்கு பல கெட்ட விஷயங்கள் இருந்தாலும், நான் நல்லதையே தேடி ஏற்றுக்கொள்வதால் எனது மகிழ்ச்சி நிலைக்கிறது.” என்றார். அவரது அனுபவம், நமக்கும் மகிழ்ச்சியின் வேரை நினைவுபடுத்துகிறது.

மகிழ்ச்சியை அளவிடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்காது. உணவை எடைபோட்டு சாப்பிடுவதால் உடலின் எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. உணவுப் பழக்கத்தையும், மற்ற உடல் செயல்களை (வேலைகள்) ஒரு பழக்கமாகவும் பின்பற்றும்போதுதான் உடல் எடையும், ஆரோக்கியமும் சீராகிறது. அதுபோலவே மகிழ்ச்சி சீராக இருக்க வேண்டுமானாலும் பழக்க வழக்கங்கள், உழைப்பு எல்லாவற்றையும் ஒரு முறையோடு செய்ய வேண்டும். தமக்கும், மற்றவர்க்கும் தீங்கு நேராமல் பார்த்துக் கொண்டால் மகிழ்ச்சியும் நிரந்தரமே.