October 19, 2021

ஐஎன்எஸ் விராட் (ஓல்ட்) கப்பலை விலைக்கு வாங்க தயாரா?

இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விராட் இன்றுடன் தனது கடற்பயணத்தை முடித்துக் கொள்கிறது. அந்த கப்பலின் நீண்ட நெடிய பயணத்தை பார்க்கலாம்.

viraar mar 7

ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை பிரிட்டன்தான் கட்டியது. இந்த கப்பல் பிரிட்டன்- இந்தியா என இரு நாடுகளுக்கும் சேர்த்து 56 வருடங்கள் உழைத்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே இந்தக் கப்பல் கட்டப்படத் தொடங்கப்பட்டு விட்டது நீராவியில் இயங்கும் பழமையானக் கப்பல். பயணத்தின் போது, கப்பலினுள் வெப்பம் 60 டிகிரி செல்சியஸ் வரை  அதிகரிக்கும் என விராட்டில் பணியாற்றியவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

1959ல்- பிரிட்டன் கடற்படையில், ஹெச்.எம். எஸ். ஹெர்மஸ் என்ற பெயருடன் இந்தக் கப்பல் இணைந்தது. கடந்த 1984ம் ஆண்டு பிரிட்டன் கடற்படை ஹெர்மஸ் கப்பலுக்கு ஓய்வளித்தது. அந்தக் கப்பலை பழுதுபார்த்து இந்தியா வாங்கியது. ஐ.என்.எஸ். விராட் என பெயர் சூட்டப்பட்டு1987ம் ஆண்டு மே 12ம் தேதி, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

ஐ.என்.எஸ். விராட் கப்பல் கிட்டத்தட்ட 2,250 நாட்கள் கடற்பயணம் மேற்கொண்டிருக்கிறது. சுமார் 5,88,228 நாட்டிகல் மைல் (கிட்டத்தட்ட 11 லட்சம் கி.மீ) பயணம் செய்திருக்கிறது. இது  27 முறை உலகை சுற்றி வந்ததற்கு சமம்.

இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் ஐ.என்.எஸ் விராட் பணியாற்றியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெறும் கடைசி பிரிட்டன் தயாரிப்பு கப்பல் இது.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற போது,  ஐ.என்.எஸ். விராட் பணியாற்றியது. பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய போது, பாக்லாந்து தீவுகளுக்காக அர்ஜென்டினாவுடன் இங்கிலாந்து போரிட்டது. அந்த போரில் ஹெச்.எம். எஸ். ஹெர்மஸ் திறம்பட பணியாற்றியது. ஐ.என்.எஸ். விராட் கப்பலில் Sea Harriers, White Tigers ரக போர் விமானங்கள் Seaking 42B, Seaking 42C and Chetak  ரக ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றிருந்தன.

இதில் Sea Harriers போர் விமானத்துக்கு ரன்வே தேவையில்லை. நின்ற இடத்தில் இருந்து அப்படியே வானில் பறக்கும் தன்மை கொண்டது. கடந்த 2016ம் ஆண்டு Sea Harriers போர் விமானங்கள் கடற்படையில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டது. இதுவும் பிரிட்டன் தயாரிப்புதான்.

ஐ.என்.எஸ். விராட்டில் இருந்து போர் விமானங்கள் 22,034 மணி நேரம் பறந்துள்ளன. கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச போர்க்கப்பல் பயிற்சியில் ஐஎன்ஸ் விராட் பங்கேற்றது.

உலகின் மிகப் பழமையான விமான தாங்கிக் கப்பல் என்ற வகையிலும் கடற்படையில் நீண்ட காலம் சேவை புரிந்த கப்பல் என்ற வகையிலும் ஐ.என்.எஸ். விராட் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறது. கடந்த 2016ம் ஆண்டு ஜுலை மாதம் மும்பையில் இருந்து கொச்சிக்கு ஐஎன்ஸ் விராட் கடைசியாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டது. பின்னர், கொச்சியில் இருந்து இழுவைக் கப்பல் மூலம் இழுத்து மும்பை கொண்டு வரப்பட்டது.

மும்பை கப்பல் கட்டும் துறையில் இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறும் விழாவில் கப்பலுக்கு  விடை கொடுக்கப்பட்டது. நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்திய கடற்படைத் தளபதி எஸ். லம்பா, பிரிட்டன் கடற்படைத் தளபதி அட்மிரல் பிலிப் ஜோன்ஸ் மற்றும் ஐஎன்எஸ் கப்பலில் காமெண்டராக பணியாற்றிய 22 கடற்படை அதிகாரிகளில் 21 பேர் பங்கேற்றனர்.

இதனிடையே இந்த கப்பலை வாங்கி மியூசியமாக மாற்ற ஆந்திர அரசு முயற்சித்தது. ஆனால், அதற்கு 1000 கோடி தேவைப்படும் என்பதால் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆக தற்போது எந்த நிறுவனங்களும் கப்பலை  வாங்க முன்வராத பட்சத்தில், குஜராத் மாநிலம் ஆனந், கொண்டு செல்லப்பட்டு  4 முதல் 6 மாதங்களுக்குள் கப்பலை உடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.