நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த்: இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!

நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த்: இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!

கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை நேற்று, இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளது. இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் வடிவமைக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்டது.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் வடிவமைத்த ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விராட் ஆகிய விமானம் தாங்கி கப்பல்களைத் தான் இந்தியா பயன்படுத்தி வந்தது. இப்போது தான் இந்தியா தனது சொந்த தயாரிப்பை முடித்து கடற்படைக்குள் உள்ளிட்டுள்ளது.

இந்தியாவின் 75 வது சுதந்திர நாள் நினைவு கொண்டாட்டங்களுடன் இணைந்து, விக்ராந்தின் உள்ளீடு என்பது சிறப்பு நிகழ்வாகும். 20,000 கோடி செலவில் மே 2007, டிசம்பர் 2014 மற்றும் அக்டோபர் 2019 முறையே மூன்று கட்டங்களாக முடிவடைந்தது. 76 சதவீத உள்நாட்டு உள்ளடக்கத்துடன், ‘மேக் இன் இந்தியா’ முயற்சியில் உருவாக்கப்பட்டது.

45,000 டன் எடையோடு 262 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் மொத்தம் 88 மெகாவாட் ஆற்றல் கொண்ட நான்கு எரிவாயு விசையாழிகளால் இயக்கப்படுகிறது. இயந்திர இயக்கம், கப்பல் வழிசெலுத்தல் மற்றும் உயிர்வாழும் தன்மை ஆகியவற்றிற்காக விக்ராந்த் அதிக அளவு ஆட்டோமேஷனுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பல் மிக்–29கே போர் விமானங்கள், காமோவ்–31, எம்எச்–60ஆர் மல்டி-ரோல் ஹெலிகாப்டர்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALH) மற்றும் இலகுரக போர் விமானங்கள் (LCA) ஆகியவற்றை உள்ளடக்கிய 30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். STOBAR எனும் குறைந்த இடத்தில் டேக் ஆப், தரையிறக்க தொழில்நுற்பம் கொண்டிருக்கும்.

ஆகஸ்ட் 2021 மற்றும் ஜூலை 2022 க்கு இடையில் நடத்தப்பட்ட விரிவான பயனர் சோதனைகளைத் தொடர்ந்து விக்ராந்த் இந்திய கடற்படைக்கு CSL மூலம் வழங்கப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் முக்கிய நிலையை மேம்படுத்தும் பணியில் இது ஒரு பெரிய மைல்கல்லாக விளங்கும்.

error: Content is protected !!