October 24, 2021

பெப்சி நிறுவனத்தின் CEO இந்திரா நூயி பதவி விலகுகிறார்!

பெப்சி நிறுவனத்தின் CEO இந்திரா நூயி அக்டோபர் மாதம் பதவி விலகுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது! கடந்த 2014 ஆம் ஆண்டு போர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13-வது இடத்திலும், 2015 ஆம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

உலகின் முன்னணி குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான பெப்சிகோவின் தலைமைச் செயல் அலுவலர் இந்திரா நூயி பதவியிலிருந்து விடைபெற உள்ளார். பெப்சி நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்திரா நூயி அக்டோபர் 3 அன்று பதவியிறங்குகிறார். இந்திரா நூயி கடந்த 24 ஆண்டுகளாக பெப்ஸி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆவார். 12 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக இருந்து வருகிறார். மேலும் இந்திரா நூயியை அடுத்து புதிய தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பை ஏற்க ராமன் லாகுவர்டாவை இயக்குநர் குழு ஒருமனதாகத் தேர்வுசெய்துள்ளது. “எனினும் இப்பதவி மாற்றம் மென்மையாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் 2019 தொடக்கம் வரை பெப்சியின் தலைவராக இந்திரா நூயி நீடித்து உதவுவார். அக்டோபர் மூன்றாம் தேதியில் இருந்து ராமன் லாகுவர்டா இயக்குநர் குழுவில் இணைவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திரா நூயி தன் ட்விட்டர் பக்கத்தில்“பெப்சிகோவின் தலைமைப்பொறுப்பில் பணியாற்றியதை உண்மையிலேயே என் வாழ்வின் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின், பங்குதாரர்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் ஆற்றிய பணியை எண்ணிப் பெருமை கொள்கிறேன். இந்தியாவில் பிறந்த நான் இத்தகைய வியத்தகு நிறுவனத்தைத் தலைமை தாங்கி நடத்துவேன் என ஒருபோதும் கற்பனை செய்ததில்லை…. அடுத்து இப்பதவியில் தொடர ராமன் லாகுவர்டா மிகச் சரியான நபர். அவரது நீண்ட பணி அனுபவமும் அவர் பெற்ற வெற்றிகளும் அதனைப் பறைசாற்றும்” என்று இந்திரா நூயி கூறியுள்ளார்.

புதிய தலைமைச் செயல் அலுவலராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ராமன் லாகுவர்டா கூறுகையில், “என் மேல் நம்பிக்கை வைத்து என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர்களுக்கு நன்றி. இது மிகப்பெரும் கௌரவம். இந்திரா நூயி அளித்த ஆதரவுக்கு அவருக்கும் நன்றி. தனது துணிச்சலான முடிவு களாலும் தன்னிகரற்ற தலைமைப்பண்பினாலும் இந்நிறுவனத்தை மாற்றியமைத்தவர் அவர். அவர் போன்ற வழிகாட்டி, நண்பர் கிடைத்தது எனது நற்பேறு ஆகும்” என்றார்.

பெப்சி நிறுவனத்தின் 53 ஆண்டுகால வரலாற்றில் ராமன் அதன் ஆறாவது தலைமைச் செயல் அலுவலர் ஆவார். இவர் கடந்த 22 ஆண்டுகளாகப் பெப்சி நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். நூயி வெளியேறினாலும் பெப்சியின் மூத்த தலைமைக்குழுவில் வேறு மாற்றங்கள் ஏதும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.