September 24, 2021

ஆற்று நீரை சுத்தம் செய்ய கேன்களை கட்டி நீந்தும் பெண்கள்!- இந்தோனேசியா ஸ்டைல்!

உயிர் உள்ள ஒவ்வொரு ஜீவன்களின் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். அதே சமயம் உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களிதும் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

நம் பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது. வேற்றுக் கிரகங்களில் மரம் செடி கொடி, ஆறு, குளம், ஓடைகளும் இல்லை. இதன் காரணமாகவே அந்தக் கிரகங்களில் உயிரினங்கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன. நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்காது. இதையொட்டியேஆறு மற்றும் ஏரி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தோனேசியாவில் ஒருவினோதமான முறை நடை முறைப்படுத்தப்படுகிறது. அதாவது இந்தோனேசியாவில் சுலாவேசி தீவு உள்ளது. இங்கு தினாம் பங் மாவட்டத்தில் உள்ளடங்கிய மீன் பிடி கிராமத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் இருந்து வந்தது.இக்கிராமத்துக்கு அங்குள்ள மன்டர் என்ற ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது மிகவும் மாசுபட்ட நிலையில் குப்பை கூளங்களாக கிடந்தது.

எனவே அவற்றை சுத்தம் செய்ய புது வழி கண்டுபிடிக்கப்பட்டது.அதன்படி காலி கேன்களை இடுப்பில் கட்டிக் கொண்டு தண்ணீரில் நீந்தியபடி குப்பை கூளங்கள் அகற்றப்படுகின்றன. இந்த முறையில் பெண்கள் தலா 200 காலி கேன்களை இடுப்பில் கட்டியபடி ஆற்றில் நீந்துகின்றனர்.

தினமும் ஒரு மணி நேரம் 4 கி.மீட்டர் தூரத்துக்கு நீந்தி ஆற்று தண்ணீரை சுத்தம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு கேனுக்கு தலா ரூ.450 வீதம் (7 டாலர்) கூலி வழங்கப்படுகிறது. இத்தகைய முறை மூலம் சுத்தம் செய்யப்படும் அந்த தண்ணீர் ஆற்றின் கரையோரம் உள்ள கிணறுகளில் சேமிக்கப்பட்டு பொது மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது என்பதுதான் ஹைலைட்!